கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும் தந்தை மகனாகவே நடித்துள்ளதால் விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள படம்.
படத்தின் முதற்பாதி முழுவதுமே நவரச நாயகனுக்காக என்று பிரத்தியேகமாக எடுத்துள்ளனர். ஆனால், கதையோடு இயைந்து அதைக் கொடுக்காமல், இந்தக் காட்சியில் கார்த்திக் நடக்கிறார், கார்த்திக் காமெடி பண்ணுகிறார், இந்தக் காட்சியில் அவரது பிரத்தியேகமான மேனரிசம் வெளிப்படுகிறது எனக் கதையோடு ஒட்டாத காட்சிகளாக வைத்துள்ளனர். “நவரச நாயகன் கார்த்திக்கே, கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்ற ரேஞ்சிற்கு உள்ளது திரைக்கதை. மெளன ராகத்தில், ரேவதியின் தந்தையாக வரும் ரா.சங்கரன், சந்திரமெளலி என்ற கதாப்பாத்திரமாக நினைவில் என்றும் நிற்பார். ஆனால், இந்தப் படத்தில், சந்திரமெளலி என்ற பாத்திரம் தெரிந்து விடவே கூடாது; கார்த்திக், கார்த்திக்காகவே தெரியவேண்டும் என்றே மெனக்கெட்டுள்ளார் இயக்குநர் திரு. ‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற தலைப்பே படத்திற்குப் பொருந்தும்.
தந்தை – மகனுக்கு இடையேயான பாசப்பிணைப்புத்தான் படத்தின் அச்சாணி. ஆனால், தந்தையின் கார் சென்ட்டிமென்ட் பற்றித் தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும் மகனுக்குத் தெரியவில்லை; தன்னுடைய இரயில் சிநேகிதம் பற்றி மகனுக்குச் சொல்லாமல் தவிர்க்கிறார் அப்பா. இப்படி, அவர்களுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளதாகக் காட்டுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் திரு.
தாய்லாந்தில் படமாக்கப்பட்ட, “ஏதேதோ ஆனேனே!” பாடலின் இயற்கை அழகு மனதை வருடினாலும், அந்தப் பாடல் இடம்பெறும் இடம் ஏமாற்றத்தை அளிக்கிறது. எப்படித் தந்தை மகனுக்கான பந்தத்தில் ஓர் அழுத்தம் இல்லையோ, அது போன்றே, இந்தப் பாடலுக்கான நெருக்கம் அவர்களுக்குள் எழும் முன் திணிக்கப்பட்டுள்ளது. படத்தில் எதுவும் இயல்பாக நடப்பதில்லை.
செல்பேசிக்கான செயலிகள் இயற்றும் பணியினைச் செய்யும் மதுவாக ரெஜினா கசாண்ட்ரா. இரண்டாம் பாதியில், அதற்கான நியாயத்தை அழகாகக் கொண்டு வந்துள்ளார் திரு. ஆனாலும், ரெஜினாவின் குடும்பம் பற்றி ஏதும் காட்டப்படவில்லை. தந்தை – மகன் பாசத்தைக் குவிமையமாகக் கொண்ட படத்தில், நாயகிக்கு அப்பாவோ, அம்மாவோ இருப்பார்கள், அவர்களுக்கும் தன் மகள் மீது பாசம் உண்டு என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை திரு. பாடலுக்கென்று மட்டுமில்லாமல், நாயகியைக் கொஞ்சம் கதையில் பயன்படுத்தியுள்ளோம் என்ற திருப்தி காரணமாக இருக்கலாம். மகளின் காதலனுக்கு, இரண்டடி மட்டுமே பார்வை தெரியும் என்பதை ஒரு குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய அதிர்ச்சி. அதை அவர்கள் எப்படிக் கடக்கிறார்கள் என்பது மட்டுமே தனி அத்தியாயம். வசனங்களில் கூட அதைத் தொடாமல் விட்டுவிடுகின்றனர்.
படத்தின் ரசிக்கும்படியான அத்தியாயம் என்றால், அது இரண்டாம் பாதியில் பைரவியாக வரும் வரலட்சுமிக்கும், கார்த்திக்கிற்கும் இடையேயான உறவுதான். அந்த உறவையும் தெளிவாகச் சித்தரிக்காமல் விட்டாலும், படத்தின் உயிர்ப்பான விஷயம் இதுதான். ‘இவங்க தான் உனக்கு ஸ்பான்சர் கிடைக்கக் காரணம்’ என ஏன் கார்த்திக்கால் வரலட்சுமியைப் பற்றி கெளதமிடம் சொல்ல முடியவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஓரிடத்தில், ‘என்னைப் போல சின்ன பொண்ணு கிடைச்சா தள்ளிட்டுப் போவீங்களா?’ எனக் கேட்கிறார் வரலட்சுமி. கார்த்திக், ‘கிடைக்கலையே!’ எனச் சிரிக்கிறார் கார்த்திக். படத்தில், நகைச்சுவை இல்லையென யாரும் சொல்லிடக் கூடாதென இந்த வசனம் வருகிறதோ என்னவோ! (ஏனெனில் படத்தின் நகைச்சுவைக்கு உதவவில்லை சதீஷ்). அப்படியே, இரண்டு காட்சிகள் கடந்தால், ‘நீங்க குணத்திலும் எங்கப்பா மாதிரியே! நான் அவரை ரொம்ப மிஸ் செய்வதால்தான் உங்க கூடப் பழகுகிறேன்’ என்கிறார் வரலட்சுமி. ‘அச்சோ, உள்ளுக்குள்ள எவ்ளோ சோகம்!’ என்று உருகுகிறார் கார்த்திக்.
அவர்களுக்கு இடையேயான உறவை, பார்வையாளர்கள் உள்ளபடிக்கு ஒழுங்காகப் புரிந்து கொள்வார்கள் என நம்பிய திரு, அதே நம்பிக்கையை மிஸ்டர் சந்திரமெளலியின் மகன் ராகவ் மீது வைக்காதது மிகவும் துரதிர்ஷ்டமானது. அந்த உறவு தெரிந்திருந்தாலும் கதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. அப்பவும், நாயகன் புதிரின் முடிச்சவிழ்த்து வில்லனை இனம் கண்டு பழி வாங்கியிருப்பார். படமும் நிறைவான சுபமாய் அமைந்திருக்கும்.