Shadow

தமிழ் ‘மம்மி’ – ஹாரர் த்ரில்லர்

Mummy-tamil-horror-thriller-film

நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரர் த்ரில்லர் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார் அஜித், விக்ரம் படங்களில் நாயகியாக நடித்த ப்ரியங்கா த்ரிவேதி. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜயின் ஸ்ட்ராபெர்ரி, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவப் பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.

கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப் படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான ஃபார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

‘ரிச்சி’, ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் H.C.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். மாயா, துருவங்கள் பதினாறு, டிக் டிக் டிக் உட்பட பல படங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் சிங்க் சினிமா ஒலி வடிவமைப்பிற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றுகிறார்.

படம் பற்றி இயக்கநர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் தயாராகியுள்ளது. மிகக் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதேசமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது.

நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாரிடம் இந்தக் கதையைச் சொன்னதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. இந்தப் படத்திற்காகக் கோவாவில் 30 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டுப் படமாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட படப்பிடிப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். படத்தின் டீசரை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.