ரண்ணா எனும் கன்னடக் கவியின் ‘கதாயுதா’ எனும் கவிதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு J.K.பைரவி எழுதிய திரைக்கதையை இயக்கியுள்ளார் நாகண்ணா. இது துரியோதனனைப் பாட்டுடை நாயகனாகக் கொண்ட கவிதை நூலாகும்.
1964 இலேயே, கர்ணன் போன்ற காவியத்தைப் படைத்துவிட்டது தமிழகத் திரையுலகம். 1988 இல் தூர்தர்ஷனில் தொடராகவும், 2013 இல் ஸ்டார் குழுமத்திலும் பிரம்மாண்டமான முறையில் தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2019 இல், குருஷேத்திரம் 3டி-இல் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. கன்னட நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அறிந்த முகமாக, கர்ணனாய் நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும், அர்ஜுனனாய் நடிக்கும் சோனு சூட்டும் தான்.
துரியோதனனாக நடித்துள்ள தர்ஷன், அப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. அவரது கம்பீரமும் டாம்பீகமும் துரியோதனன் பாத்திரம் மீது ஒரு மரியாதையை வரவைக்கிறது. குறிப்பாக, குலத்தின் பெயரால் கர்ணன் அவமதிக்கப்படும் பொழுது, சபையில் வீற்றிருக்கும் பெரியோர்களை கேள்விக் கணைகளால் துளைப்பது அட்டகாசம்.
ஆனால், படம் பெரும்பாலும் மேடை நாடகம் போலவே பயணிக்கிறது. துரியோதனனாய் நடித்துள்ள தர்ஷனுக்கு மட்டுமே 2000 பக்க வசனங்களிருக்கும் போல! ஒற்றை ஆளாய்ச் சபையில் நின்று, அநியாயத்திற்குப் புலம்பித் தள்ளுகின்றார். பீஷ்மர், தர்மர், விதுரர், துரோனாச்சாரியாரை எல்லாம் பார்க்கப் பரிதாபமாக உள்ளனர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் படம். கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடவும் முடிவெடுத்தாயிற்று. அத்தனை மொழி ரசிகர்களையும் கவரும்படி நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா? 2013 இல் வந்த ஸ்டார் பிளஸின் மகாபாரதம், மாடல்கள் போன்ற நடிகர்களுக்காகவே பெரிதும் வெளிச்சம் கண்டது. அதை மிஞ்சும் அளவிற்கு இயலாவிட்டாலும், அவர்கள் நிர்ணயித்துள்ள ஸ்டேண்டர்டை எட்டிப் பிடிக்கும் எண்ணம் கூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்.
படமாக இல்லாமல் காட்சிகளாகவே பெரும்பாலும் நகர்கின்றன. இடைவேளைக்கு முன் சூதில் தோற்று, பாண்டவர்கள் வனம் புகுவதாகச் காட்சி. இடைவேளை முடிந்ததும், 13 வருடம் முடிந்து பாண்டவர்கள் நாடு திரும்பி விட்டனர் என துச்சாதனனின் ரத்தக் கொதிப்பில் தொடங்குகிறது. ஐந்து கிராமமங்களையாவது தரும்படி கிருஷ்ணர் தூது வருகிறார். ஆங், அந்தப் பரிதாபமான கிருஷ்ணனிற்கு நீலச்சாயம் கூட ஒழுங்காகப் பூசப்படவில்லை என்பதை என்னவென்று எடுத்துக் கொள்ள? மூன்று மணி நேரப்படத்தில் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வது?
போர் தொடங்கிய பின் சிறிது ஆசுவாசம் கிடைக்கின்றது. அதுவும் கோர்வையாக இல்லாமல், காட்சி விட்டு காட்சி ஜம்ப் ஆகிறது. வியூகங்கள் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. அபிமன்யுவாக, தேவ கெளடாவின் பேரனும், குமராசாமியின் மகனுமான நிகில் நடித்துள்ளார். அம்பை அவர் எடுத்து எய்யும் காட்சிகள் நன்றாக உள்ளன. அர்ஜுனனாக நடித்திருக்கும் சோனு சூட்டிடம் கூட அம்பெய்வதில் அந்த லாகவம் இல்லை. நிகில் காட்சி போனதும், அடுத்து கர்ணனின் காட்சி. அபிமன்யுவிற்கு அடுத்து கர்ணனின் ஸ்டன்ட்கள் ரசிக்கும்படி உள்ளன. கர்ணன் – துரியோதனனின் நட்பு தான் படத்தின் அடிநாதம் என்றால், தொடக்கம் முதலே அதை மையப்படுத்திக்கொண்டு போயிருக்கலாம். கர்ணன் படத்தில் வரும், ‘எடுக்கவா? கோர்க்கவா?’ எனும் காட்சி, நட்பைப் பெருமைப்படுத்தும் காட்சிகளில் இன்றளவும் முதன்மை இடம் வகிக்கிறது. அதைப் போன்ற எமோஷ்னலான காட்சி ஒன்று கூட இல்லாதது படத்தின் மிகப் பெரும் குறை. அதை விடக் கொடுமை, பீஷ்மர் முன் போர்வீரனான சிகண்டியை நிறுத்தும் காட்சியில், கொஞ்சம் கூடச் சமூகப் பொறுப்புணர்வே இல்லாமல் மிகக் கேவலமாக எடுத்துள்ளார் இயக்குநர் நாகண்ணா. அதே போல் தான், பீமன் துச்சாதனின் மார்பைப் பிளந்து ரத்தத்தைக் கொண்டு போய் த்ரெளபதியின் கூந்தலில் தடவும் காட்சியும். த்ரெளபதியாக நடித்திருக்கும் சிநேகாவின் அந்தச் சிரிப்பைக் கண்டு, ‘அய்யோ அம்மா’ என பயந்து வருகிறது. ‘சிரிக்காத ஆத்தா! காசு கொடுத்து படம் பார்க்க வந்த புள்ளைங்கலாம் பயப்படுது பாரு’ என சின்ன கவுண்டர் வசனத்தைத் திரையரங்கில் பார்வையாளர்கள் சொல்லுமளவுக்குக் கொடூரமாக இருந்தது.
படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் வரும், பீமன் – துரியோதனன் கதாயுதச் சண்டை ரசிக்க வைக்கிறது. 3டி எஃபெக்ட்ஸ் எதிர்பார்த்தை விடச் சிறப்பாக உள்ளன. கதாயுதம், நெருப்பு, வில், ஈட்டி என திடீர் திடீரென நம்மை நோக்கி ஆயுதங்கள் வருவது படத்தின் ஆறுதல்களில் ஒன்று.