Shadow

பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை!

bigg-boss-3-day-55

நம் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அந்தத் தருணத்தில் எப்படி ரியாக்ட் செய்கின்றோமோ அதுக்கேற்ற மாதிரி தான் விளைவுகளும் இருக்கும். ஒருத்தன் நல்லவனாகறதுக்கும், கெட்டவனாகறதுக்கும் நடுவில் ஒரு சின்ன கோடு தான் இருக்கு. பிக் பாஸ் வீடும் அப்படித்தான். இங்கே இந்த மாதிரி சூழ்நிலைகள் வரலாம் எனத் தெரிந்து தான் அங்கே போகின்றனர். அப்படி ஒரு மொமென்ட்ல தான் தர்ஷன் ஹீரோவானார். ‘என்னடா இது இந்த வனிதா இப்படிப் பேசுறார்? ஒருத்தர் கூட கேக்க மாட்டேங்கறாங்களே?’ என ஒரு காமன் மேனுக்கான எதிர்பார்ப்பைத் தர்ஷன் பூர்த்தி செய்தார். நன்றாக யோசித்துப் பார்த்தோம் என்றால் அந்தச் சூழ்நிலை, அந்த வாய்ப்பு அங்கே இருந்த எல்லோருக்கும் இருந்தது. அன்று யார் பேசியிருந்தாலும் ஹீரோவாகிருக்க முடியும். ஆனால் எல்லோரும் தயங்கி தான் நின்றனர். அது தானாக அமைந்த சூழ்நிலை தான்.

சில சமயம் உருவாக்கப்பட்ட சில சூழ்நிலைகள் நம் முன்னாடி வரலாம். சேரனுக்கு நேர்ந்த மாதிரி. எதேச்சையாக நடந்த ஒரு விஷயத்தைத் தனக்கு சாதகமாக மாத்திக்க நினைத்த மீரா மாதிரி. அப்படியான ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் தான் மது இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். படு முட்டாள்தனமான ஒரு செயல் இது. தவறான முன்னுதாரணமும் கூட.

ஹலோ ஆப் வழங்கிய டாஸ்கில் மது பேசியது மட்டும் வரலை என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். “வருணபகவான் கூட கர்நாடகக்காரர் போல, கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை பெய்ய வைக்கலாம்” என்பதுதான் மது சொன்னது. ஆனால் இப்படிப் பேசினது தன்னை வீட்டை விட்டு அனுப்பும் என மது கனவிலேயும் நினைத்திருக்க மாட்டார். இந்தப் பேச்சுக்காக வீட்டுலுள்ள அனைவரும் கண்டிக்கின்றனர். ஷெரின் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், அவரை டார்கெட் செய்ய அப்படிப் பேசியிருக்கிறார் என்பதாக மாற்றப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் அரசியல் பேசுகிறார் எனவும் கண்டிக்கப்பட்டிருக்கிறார். இது அப்படியே தொடர்ந்து நடந்து, விவாதங்கள் முற்றி தன் கையை அறுத்துக் கொள்கிற நிலைமைக்குப் போயிருக்கு. கடுமையான மன உளைச்சல், தொடர் தாக்குதல் நடந்ததாக மது தரப்பில் இருந்து சொல்லப்படுகின்றது.

ஆனால் என்ன காரணம் சொன்னாலும் மதுவின் செயலை நியாயப்படுத்த முடியாது. மேற்கொண்டு இந்தப் பிரச்சினையைப் பற்றி ஏதாவது தகவல் வந்தால் பேசலாம்.

யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்காமல், அதில் இருக்கற நியாயத்தையும் புரிந்து கொள்ளாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களெனச் சாதிக்கின்ற மதுவிடம் கமல் மட்டும் என்ன பேச முடியும்?

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளில், மதுவென ஒருத்தர் அந்த வீட்டில் இருந்ததாகவும், அவர் கை அறுத்துக் கொண்டு வெளியே போனதாகவும் ஒரு சின்ன அறிகுறி கூடத் தெரியவில்லை.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், வனிதாவிடம் ஆரம்பித்தார். ‘இங்க பிக் பாஸ் ஹோஸ்ட் பண்றது கமலா? இல்ல வனிதாவா?’ எனக் கேட்க நினைத்திருப்பார். எதற்கு வம்பு என சாதாரணமாகக் கேட்டு முடித்துவிட்டார். அதற்கு வனிதா விளக்கம் கொடுக்க, ஆடியன்ஸுடன் சேர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தார்.

கஸ்தூரி பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக இருக்கு. ஒரு கேள்வி கேட்டால் ஒரு கட்டுரை எழுதுகின்ற அளவுக்குப் பேசுகிறார். யப்பா சாமி. ஆனால் அதே சமயம் கஸ்தூரியை வைத்து கவினை லாக் பண்ணிவிட்டார். கஸ்தூரி வந்த இரண்டு நாளில், அவரைப் பிடிக்காமல் போனது எப்படி எனக் கேட்ட பொழுது, கவின் கொஞ்சம் ஜெர்க் ஆகி உளறிவிட்டார்.

இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் உண்டெனச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கார் கமல்.

மகாதேவன் CM