நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ்.
அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல வைத்தார்.
“சேரப்பா, ஏன் வேறப்பா ஆனாரு?” என சேரனிடம் முதலில் கேட்டார். நியாயமாக லாஸிடம் தான் கேட்கவேண்டும். “எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவங்க கொஞ்சம் விலகிப் போயிருக்காங்க. திரும்பி வருவாங்க” என விளக்கம் கொடுத்தார்.
லாஸ் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சொன்னார். சேரனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாராம். ‘னால் சேரன் தான் நேர்மையாக இருக்கிறார் எனக் காட்டிக் கொள்ள, லாஸை ஜெயிலுக்குப் போக பெயர் சொல்றார். ‘அவர் நேர்மையை மாற்ற நினைக்கிறது தப்புதான், இருந்தாலும் அதை நான் எதிர்பார்க்கிறேன். சோ, அதனால கொஞ்சம் விலகி இருக்கேன்’ எனச் சொன்னார்.
கமலோட ரியாக்ஷனே, ‘ஏம்மா இதெல்லாம் ஒரு காரணமா?’ எனக் கேட்ட மாதிரி இருந்தது. இதற்கு நடுவில், ‘வேற யாரும் இல்லையே?’ எனக் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிகிட்டார். சேரனிடம், ‘நீங்க செஞ்ச சில விஷயங்களால இப்ப நீங்க முண்ணனில தான் இருக்கீங்க’ எனச் சொல்லி கைதட்டல் வாங்கிக் கொடுத்தார்.
ஆக இந்த விஷயத்தில் பாய்ஸ் டீம், லாஸ்க்கு விபூதி அடித்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. எபிசோட் முடியும் போது கவினிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது கன்ஃபார்ம் பண்ணிக்க முடியுது.
‘கற்பூரங்களா’ என பாய்ஸ் டீம் பக்கம் லைட்டைட் திருப்பினார். ‘கற்பூரம் இவங்கன்னா.. வத்திக்குச்சி யாரு?’ எனக் கேட்டு அப்படியே லைட்டை வனிதா பக்கம் திருப்பினார். “நீங்க எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்க?’ எனக் கேட்டதுக்கு, “மக்கள் என்னை மிஸ் பண்றாங்களோன்னு தோணுச்சு சார். நான் உங்களை மிஸ் பண்றேன்” என வனிதா சொன்ன போது, கமல் ரியாக்ஷன் அல்டிமேட். அத்தருணத்தில் இருந்து ஆடியன்ஸ் கூடச் சேர்ந்து வனிதாவைக் கலாய்க்க ஆரம்பித்தார். வனிதாவைப் பேசவிடாமல் கைதட்டுறதைக் கமல் ரசிக்கிறாரெனத் தெரிந்ததும், இன்னும் அதிகமாக கைதட்ட ஆரம்பித்தார்.
ஒரு பெரிய பிரச்சினை நடக்கும் போது சம்பந்தபட்டவங்களைக் கமல் கண்டிக்கிறதில்லை. மயிலிறகால் வருடுகிற மாதிரி தான் பேசுகின்றார். கண்டித்துச் சொல்ல வேண்டிய இடத்தில் கூட மென்மையாகத்தான் சொல்கிறாரென ஒரு குற்றச்சாட்டு இருக்கு. வீட்டுக்குள் இருக்கிறவங்க செய்கின்ற தப்பைத் திருத்துவதோ, அவர்களை நல்வழிப்படுத்துவதோ கமலின் வேலை இல்லை. அதற்காகவும் அவர் வரவில்லை.
அவர்கள் தவறை / செயலை அதோட விளைவுகளை, அவர்களே உணர வைக்கிறது தான் கமலின் வேலை. இதற்குச் சரியான உதாரணம் சொல்லவேண்டுமெனில், நேற்று அபிராமி ராப் பாடினதைச் சொல்லி, அதை நல்லாருக்கெனப் பாராட்டி, தன்னையே தொலைத்து விட்டு வேற எதுவோ செய்து கொண்டு இருக்கிறதை அவங்களிடம் சொன்னது நினைவிருக்கலாம். அப்பொழுது அபிராமி முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. தான் எங்க தப்பு செய்திருக்கோமென அபி உணரத் தொடங்கிய தருணம் அது. இதை தான் கமல் செய்ய முடியும். செய்யவேண்டும்.
‘நீ தப்பு பண்ற, இது சரியில்லை, இதையெல்லாம் நீ மாத்திகிட்டே ஆகணும்’ என யாராவது சொன்னால், நாம் என்ன செய்வோம்? அந்தப் பக்கம் போனதுக்குப் பின், ‘இவன்லாம் ஒரு ஆளுன்னு எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டான்’ எனச் சொல்பவர்கள் தான் இங்கே அதிகம். அதுவே ஒரு மரியாதைக்குரிய நபர் சொல்லும் போது, அந்த நேரத்தில் கேட்டாலும், அது மண்டைக்குள் ஏறாது.
அதுவே நாம் செய்கின்ற தவறுகள், அதனுடைய விளைவுகளை எடுத்துச் சொல்லி, முடிவை நம்மிடமே விட்டுட்டு ஒதுங்கி நின்றார்கள் என்றால், நாம் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிப்போம் இல்லையா? அதைத்தான் கமல் செய்கின்றார். முடிவு அவரவர் கையில் தான் இருக்கு.
‘எல்லோரும் இந்த வீட்டுக்குள் சமம் தான். நீங்க மட்டும் இயக்குநராக மரியாதையை எதிர்பார்க்கறது தவறு இல்லையா?’ என சேரனின் தவறினைச் சுட்டிக் காட்டும்போது, அதை உடனடியாக உணர்ந்து மன்னிப்பும் கேட்கிறார் சேரன். ‘முகினோட முன்னேற்றத்துக்கு நீங்க தடையா இருக்கீங்களோ?’ என அபியிடம் கேட்ட போது, அதை ஏற்றுக் கொள்கின்ற அபி, ‘இனிமே அப்படி இருக்க மாட்டேன்’ எனச் சொன்னதும் நடந்தது.
ஆனால் இதுவே வனிதாவின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது, ‘அதை நான் ஏன் செஞ்சேன்னா?’ என ஆரம்பித்து, தன் தவறுக்கு நியாயம் சொல்ல ஆரம்பிக்கிறது தான் நடக்குது. ஒரு தடவை கூட, தான் தவறு செய்ததாக வனிதா சொன்னதே இல்லை. ‘மற்றவர்களைப் புண்படுத்துகின்ற மாதிரி நடந்துக்காதீங்க’ என சாண்டியிடம் சொன்ன போது, ‘சரிங்க’ என வார்த்தையில் சொன்னானே தவிர செயலில் காண்பிக்கவில்லை. கமல் சார் சொல்லும் போதே, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, ‘இது வரைக்கும் யாராவது தன்னால் புண்பட்டிருந்தால் மன்னிச்சுடுங்க’ என ஒரு பொதுவான மன்னிப்பு கேட்டிருந்தால், அதை சரி எனச் சொல்லலாம். சாண்டி அதற்கு வருத்தப்படுகின்ற மாதிரியே தெரியவில்லை.
தன் தவறையே புரிந்து கொள்ளாதவர்களிடம், மென்மையாக எடுத்துச் சொன்னால் என்ன? கண்டிப்பாகச் சொன்னால் என்ன? அவங்க எப்படியும் கண்டுகொள்ளப் போவதில்லை. மதுவுமே அப்படித்தான்.
கமல் தான் இந்த ஷோவை ஹோஸ்ட் பண்ணவேண்டும். இந்த சீசனுக்கே இன்னும் 7 வாரம் இருக்கு. கமல் கண்டிப்பாகச் சொல்லியும் ஹவுஸ்மேட்ஸ் கேட்கவில்லை என்றால், வீட்டில் இருக்கின்ற மற்றவர்களுக்கும், பார்க்கிற நமக்கும் கமல் மேல இருக்கின்ற மரியாதை போய்விடும். அப்புறம் ஷோ என்னாகும்? தன்னோட மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை கமலுக்கும் இருக்கு. அதற்கு அவர் ஓர் எல்லைக்குள் இருக்கவேண்டும். பார்வையாளராக நாமே இவ்வளவு அனலைஸ் செய்கின்றோமே, இதை கமல் செய்ய மாட்டாரா? பிக் பாஸ் குழு செய்ய மாட்டாங்களா? யாரிடம் என்ன பேசணுமென முடிவு செய்து தான் பேசுவார்கள்.
சரி, கமல் கண்டிக்கிறார், அதைத் தவறு செய்கின்றவர்களும் கேட்டுக் கொள்கிறார்கள், மொத்த வீடும் அமைதியாக இருந்ததென்றால் நாம் என்னத்த பார்க்கிறது?
இது ஒரு கேம் ஷோ. இந்த கேமில் ஹவுஸ்மேட்ஸ் மட்டும் கிடையாது. நாமும் இருக்கின்றோம். அங்கு ஒரு அநீதி நடக்கிறது. நமக்குக் கோபம் வருகிறது. ஆட்டோமேட்டிக்காகப் பாதிக்கபட்டவர்களுக்கு சப்போர்ட் செய்கின்றோம். அவர்களைக் காப்பாற்றுகின்றோம். அது தான் இந்த கேமோட பெரிய வெற்றி. நாமும் இதில் எமோஷனலாக கனெக்ட் ஆகியிருக்கின்றோம். அந்த வீட்டுக்குள் எல்லோரும் ஷெரின் மாதிரி எந்தப் புகாரும் இல்லாமப் இருந்துவிட்டால், நாம் பிக் பாஸ் பார்ப்போமா என்ன?
மரியாதைக்குரிய, மொழி வளம் மிக்க, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசும் லாகவம், பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, ஏறுக் கொள்ளும்படி தீர்வுகளை முன் வைப்பது, பேச்சில் இருக்கும் புத்திசாலித்தனம், அவ்வப்போது தெறிக்கும் பன்ச் லைன்ஸ் இப்படி எல்லாம் சேர்ந்த கலவையாக இன்னொரு நபரைக் காட்டுங்க? கமலுக்குப் பக்கத்தில் கூட யாரும் இல்லை. மற்ற மொழிகளில் வேற மாதிரி நடக்குதென்றால், அது அவங்க ஸ்டைல். இது நம்மவர் ஸ்டைல்.
இந்த வார கேப்டனாக ஷெரினை நியமித்தார் கமல். லாஸ், கவின் இரண்டு பேரையும் சேஃப் எனச் சொல்லிவிட்டு எவிக்சனுக்குப் போய்விட்டார்.
ரொம்ப மொக்கை போடாமல் அபிராமியை வெளியே கூப்பிட்டார். உற்சாகமாகக் கிளம்பின அபியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதே மாதிரி கமலோடு மேடையில் நின்ற போதும், அவ்வளவு எனர்ஜிட்டிக்காகப் பேசினார். ‘இதில் எந்த அபிராமி உண்மை? இது என்ன டபுள் ஆக்டா?’ என கமலே கேட்குமளவுக்கு இருந்தது. தன் நண்பர்களிடம் பாசிட்டிவாகப் பேசிவிட்டுக் கிளம்பினார். கமலைக் கட்டிபிடித்து வனிதாவை மட்டும் இல்லாமல் பார்வையாளர்களையும் வெறுப்பேற்றினார். வனிதா கொடுத்த ப்ளையிங் கிஸ்ஸைப் பிடித்துத் தூக்கிப் போட்டது க்யூட். அபியிடம் பேச முயற்சி செய்த வனிதாவைப் பேசவிடாமல் கைதட்டிக் கொண்டே இருந்தனர். இந்த அபிராமி முகம் உண்மையாக இருக்கவேண்டும். எப்பவும்.
கமல் கிளம்ப, நம்மை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். சேரனும், லாஸும் பேசிக் கொண்டதைப் பார்க்கும் போது, யாரும் அதை நடிப்பு எனச் சொல்ல முடியாது. சில வார்த்தைகள் அதீதமாக இருந்தாலும் அந்த உணர்வு உண்மை தான். ஆனால் கவினுக்கு மட்டும் இது ட்ராமாவாகத் தெரிகிறது. அதுவும் இல்லாமல், சேரனை விட்டு விலகி நின்றதுக்கு லாஸ் சொன்னது இல்லாமல் வேற சில காரணங்கள் இருக்கு. அதை லாஸ் பேசவில்லை.
‘ஏன்டாப்பா கவினு, ரெண்டு பொண்ணுகளோட மணிக்கணக்கா உக்கார்ந்து பேசிட்டு இருந்தியே! அதெல்லாம் ட்ராமாவா தெரியலையாப்பா?’