Shadow

மர்மர் | இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்

தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஹாரர் திரைப்படம் எனும் சாதனையை மர்மர் படைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. மர்மர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், “மர்மர் தமிழ்த் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதைப் பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களைத் தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதைப் படமாகக் காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தைத் தான் நாங்கள் படமாகக் காண்பிக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணாமல் போகின்றனர். அவர்களைக் கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களைப் பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்.

நோயாளியாக வந்தவரைத் தற்போது தயாரிப்பாளராக மாற்றிவிட்டேன். நான் கல்லூரியில் பிசியோதெரபி படிக்கும் போது நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்போது குறும்படப் போட்டியில் மட்டும் மருத்துவத் துறையைச் சார்ந்து யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். ஆனால், நான் அப்படி இருக்கக்கூடாது என நினைத்து, கேமராவை வாடகைக்கு எடுத்து குறும்படம் எடுக்கத் தொடங்கினேன். கல்லூரி முடிந்தும் இரண்டு ஆண்டுகள் வரை குறும்படம் இயக்கியும், கதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் எடுத்த குறும்படங்களில் எனக்குப் பிடிக்காதவற்றை நானே ஓரம்கட்டி விடுவேன். சில கதைகளைப் படமாக்க தயாரிப்பாளர்களைத் தேடி வந்தேன். மருத்துவராகக் கிடைக்கும் மரியாதை, இயக்குநருக்குக் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டேன். அதன்பிறகு மேல்படிப்பு படித்தேன். மேல்படிப்பு முடித்ததும், எந்த மருத்துவமனையில் பணியாற்ற போகிறாய் என வீட்டில் கேட்டார்கள். நான் படமெடுக்கப் போகிறேன் என்று கூறினேன். அந்தப் படத்தின் ட்ரெய்லரை தான் தற்போது நீங்கள் பார்த்தீர்கள். ‘குறும்படம் போன்றே, இந்தப் படத்தை எடுக்கும் போதும் பிடிக்கவில்லை என்றால் ஓரம்கட்டிவிடலாம்’ என்றே நினைத்திருந்தேன். முதலில் வரும் போது சிறப்பாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் கடின உழைப்பை கொடுத்தார்கள். பலர் இங்கு வாங்கிய சம்பளத்தில் பெரும் பகுதியை மருத்துவத்திற்கே செலவு செய்திருப்பார்கள். நிறைய காட்சிகள் அங்கிருந்த இயற்கை வெளிச்சம் கொண்டே படமாக்கினோம். சில காட்சிகளில் தீ மூட்டி அதில் இருந்து கிடைத்த வெளிச்சம் கொண்டு படமாக்கினோம். அப்போது காட்சிக்குப் பின்னணியில் இருப்பவர்கள் காட்சிக்கு ஏற்ப ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தச் சூழலில் எத்தனை முறை கேட்டாலும், ஒளிப்பதிவாளர் சிரமம் பார்க்காமல் படமாக்கிக் கொடுத்தார்.

அடுத்து படத்தொகுப்பாளர், இந்தப் படத்தில் அவர் படத்தொகுப்பு மட்டுமின்றி துணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். எந்தப் பணியாக இருந்தாலும், எத்தனை முறை கேட்டாலும் செய்து கொடுத்தார். இந்தப் படத்தை கிட்டத்தட்ட 50 முறை எடிட் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின். ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரைத் தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்குக் கிடைத்தவர் கெவின். நான் கூறும் விஷயங்களை சரியாகப் புரிந்து கொண்டு பணியாற்றிக் கொடுத்தார். இதற்காக கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை ஆனது.

இந்தப் படத்தில் கலை பிரிவினருக்கு மிகப்பெரிய பொறுப்பு தீ அணையாமல் பார்த்துக் கொள்வது தான். அதைத் தாண்டி ஒரு கிராமத்தில் அனைவரும் எல்லாப் பணியையும் செய்தனர்.

நாங்கள் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதலில் வாகனங்களில் செல்வோம். அதன் பிறகு கரடுமுரடான பாதையைக் கடக்க வேண்டியிருக்கும். அங்கு எத்தனை திறமையான டயர்கள் என்றாலும் அவை பஞ்சர் ஆகிவிடும். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் வரை நடந்து செல்ல வேண்டும். இப்படி நாங்கள் தினந்தோரும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கே மூன்று மணி நேரம் ஆகிவிடும். அங்குச் செல்லும் போதே நாங்கள் சோர்வடைந்து விடுவோம். அப்படி அங்குச் செல்லும் போது எங்களுக்கு அந்த ஊர்மக்கள் அதிர்ச்சிகர செய்தியைச் சொன்னார்கள். அந்தப் பகுதியில் கன்னிகள் வாழ்வதால், நாங்கள் காலணி எதுவும் அணியக்கூடாது, மாமிசம் எதுவும் சாப்பிடக்கூடாது என்றார்கள். எனது கதை அவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று யோசித்தேன்.

இந்தப் படத்தில் கலை இயக்குநர் ஹாசினி சிறப்பாகப் பணியாற்றினார். அவரது பணி பார்க்க எளிமையான ஒன்றாகத் தெரியும், ஆனால் அது அப்படியில்லை. ஒரு தீக்குச்சி சார்ந்த ஷாட் என்றாலும் அரை மணி நேரம் அதை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு ஏற்றவாரு தீக்குச்சியைச் செய்ய வேண்டும். அதேபோல் கிராமங்களில் உள்ள வீடுகளை மிக அழகாக செட் அமைத்துக் கொடுத்தார். அவை மிகவும் எதார்த்தமாக இருந்தது. அவர்களின் பணி போற்றுதலுக்குரியதாக இருந்தது.

எனக்குத் தனிப்பட்ட முறையில் பேய் நம்பிக்கை இல்லை. நான் நம்பாத ஒரு விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். எனக்குப் பேய் மீது நம்பிக்கையில்லை. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.