Shadow

மை டியர் பூதம் விமர்சனம்

குழந்தைகளுக்கான படம். பிரபு தேவா பூதமாக நடிக்க, பூதத்தை விடுவிக்கும் சிறுவனாக அஷ்வந்த நடித்துள்ளான்.

அஷ்வந்திற்கு ஒரு விபத்தில் திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளாகும் நிலையில், சமணர் மலை அருகில் ஒரு பொம்மையில் அடைப்பட்டு இருக்கும் சிலையில் இருந்து கர்கிமுகி எனும் பூதத்தை விடுவிக்கிறான். சாபம் பெற்று பொம்மையாய் மாறிய பூதம், விடுபட்டதிலிருந்து 48வது நாளில், அஷ்வந்த் மந்திரம் சொன்னால் மட்டுமே, பூதத்தால் தன் சொந்த கிரகத்திற்குச் செல்ல முடியும். ஆனால், பூதமே அந்த உதவியை அஷ்வந்திடம் கேட்கக் கூடாது. அஷ்வந்தாகச் செய்யவேண்டும். அதெப்படி சாத்தியமானது என்பதே படத்தின் கதை.

குழந்தைகளைக் கவரும் வகையில் வி.எஃப்.எக்ஸில் அசத்தியுள்ளனர் A.M.T. மீடியா டெக். வீஸ்வரூபத்தில் இருக்கும் பூதம், சுவரிலுள்ள சோட்டா பீம் போஸ்டரில் இருந்து லட்டை எடுத்துச் சாப்பிடும் பூதம், டாம் & செர்ரி பின்னால் நடக்கும் பூதம், தொலைக்காட்சிக்குள் இருந்து வெளிவரும் பூதம் என குழந்தைகளைக் கவரும் எல்லா மாயாஜாலத்தையும் காமிக்கலாகச் செய்கிறது கர்கிமுகி.

திக்குவாய் பிரச்சனை உள்ள சிறுவனாக அஷ்வந்த் நன்றாக நடித்துள்ளான். பேச்சுப்போட்டியில் கலந்து அவமானப்படுகையில், பூதம் அவனுக்குத் திக்காமல் பேச உதவவில்லை என கோபம் கொள்கிறான். பூதம் அவனை மீண்டும் சமாதானப்படுத்தி நட்பாக்கிக் கொள்கிறது. பூதம், அவனது பலவீனத்தைப் பலமாக்கிக் கொள்ளும் நம்பிக்கையை அவனுக்குள் விதைக்கிறது. அஷ்வந்தின் அம்மாவாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

கிர்கிமுகி பூதமாக, மொட்டை தலையுடன் பிரபு தேவா நடித்துள்ளார். சிறுவனின் மனதை வெல்லும் ஜாலி பூதமாக பல சேட்டைகள் செய்கிறார். சிறுவனோடு சிறுவனாக செம எனர்ஜியோடு நடித்துள்ளார். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பூதமாக பிரபு தேவாவின் நடிப்பு அமைந்துள்ளது.

மஞ்சப்பை, கடம்பன் படத்தை இயக்கிய N. ராகவன், இப்படத்தைத் தொடங்குவதற்கு முன், தன் மகளுடன் அதிக நேரம் செலவிட்டு, குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என அவர்களது உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். சிறார் எழுத்தாளர் விழியனுக்கும், படத்தின் தொடக்கத்தில் நன்றி சொல்லியுள்ளார். பெரியவர்களுக்கான முடிவைப் போல் சுபமாகப் படத்தை முடித்திருந்தாலும், கொண்டாடத்துக்குரிய படமாக முடித்திருக்கலாம்.