Shadow

இரவின் நிழல் விமர்சனம்

இரவை விடவும், இரவின் நிழலை விடவும், அடர்த்தியான இருண்மையைக் கொண்டுள்ளது ‘இரவின் நிழல்’ திரைப்படம். “இது மென்மையான மனம் கொண்டோருக்கான படமில்லை” என மேக்கிங் வீடியோவில் எச்சரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 92 நிமிட கால அளவைக் கொண்ட படம் தொடங்குவதற்கு முன், 30 நிமிட மேக்கிங் வீடியோ போடுகிறார் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். உலகத்திலேயே முதல் முறையாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்ற முறையில் தமிழர்கள் எல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிக்கான தேடலோடு ஓடும் பார்த்திபன் இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். 💐

Start, Camera, Action, Hospital என்று உடல் அங்கங்களை உடைத்துக் கொள்ளும் ஜாக்கி சான், தன் படங்களின் முடிவில் ப்ளூப்பர்ஸை ஜாலியாக ரசிக்கும்படி வைத்திருப்பார். பிறகு, வெற்றி பெற்ற படத்தின் மேக்கிங் வீடியோவைத் தனியாக இணையத்தில் வெளியிடும் வழக்கம் வந்தது. எங்கும் எதிலும் எப்பொழுதும் வித்தியாசம் காட்டும் பார்த்திபன், படம் தொடங்குவதற்கு முன் மேக்கிங் வீடியோ போட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 

உண்மையில் அது ஒரு புத்திசாலித்தனமான காய் நகர்த்தல். உளவியல் ரீதியாகப் பார்வையாளர்கள் மீது, நேர்த்தியான மேக்கிங் வீடியோ மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார். ‘ப்பாஆஆ.. எத்தனை பேரின் உழைப்பு! எவ்வளவு திட்டமிடல்?’ என்ற மலைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அணுகிப் பார்த்தால், நூற்றில், தொன்னூற்று ஒன்பது சினிமாக்காரர்கள், ‘நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டுப் படமெடுத்தோம்’ என்றே சொல்லுவார்கள். சிறு வயது முதல், முட்டியை உடைத்துக் கொண்டு மக்களுக்காக நடனமாடுகிறேன் என்று அங்கலாய்ப்பார்கள்.  எந்தப் படமும், அது சகிக்க முடியாததோ, கொண்டாட்டத்துக்குரியதோ, ரத்தக் கொதிப்பு எகிறாமல், சிக்கல்களை எதிர்கொள்ளாமல் திரை காண்பதில்லை. படத்திற்கு ஒரு பெயர் சூட்டுவதில் கூடப் போர்க்கொடி உயர்த்தி ஆட்டையைக் கலைப்பார்கள். ஏன் நாட்டை விட்டே போக முடிவெடுக்கும் அளவுக்கு எல்லாம் கூடச் சிக்கல்கள் நேரிடும் பட உருவாக்கத்தின்போது!  இப்படியாக, பட உருவாக்கத்தின் போது எழும் மனச்சிக்கல்கள், பணப் பிரச்சனைகள், இயற்கைச் சீற்றங்களின் குறுக்கீடுகள், எதிர்பாராத விபத்துகள், நடிகர்களின் தன்முனைப்புகள் என ஆளாளுக்குக் கிளம்பினால், படத்தினை விட அது சுவாரசியமாக இருக்குமோ என்னவோ! ஆனால், நாடு தாங்காது.

Spoliers Open

தாயை இழந்த நந்துவிற்கு உலகத்திலுள்ள எல்லா துரதிருஷ்டங்களும் வரிசை கட்டி நடக்கிறது. எப்படியோ ஒரு காதல் மலர்கிறது. ஆனால், ஒத்த செருப்பு மாசிலாமணிக்கு ஏற்படுவது போலவே, பணத்திற்காக ஒழுக்கத்தைத் தளர்த்திக் கொள்கிறாள் நந்து விரும்பும் பெண். ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்’ என சென்னையில் இருந்து காளஹஸ்தி போகிறான் நந்து. அங்கே சிலக்கம்மா எனும் தெலுங்கு பெண்ணைப் பார்க்கிறான். அவளைப் பணத்தாசை காட்டி மயக்கப் பார்க்கிறான் நந்து. ‘அவ எப்படி மேன் இதுக்கலாம் மயங்குவா? அவ, உள்ளே இருக்கும் அம்மன் போல் ரொம்ப பவித்திரமானவ’ என்கிறார் ஒரு துணை கதாபாத்திரம். ‘அடடே!’ என சின்ன புத்தியை உதறி, திருந்தி சிலக்கம்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறான்.

சின்ன புத்தியை உதறிட்டான் என நந்துவே வாக்குமூலம் தந்தாலும், அது பொய் என அடுத்த வாக்குமூலத்தில் உணர்த்துகிறான். ‘சிலக்கம்மா எவ்ளோ பவித்ரம்ன்னு அவளுடன் முதல் முறை படுக்கையில் இருக்கும்போதுதான் புரிஞ்சது’ என்கிறான். சிலருக்கு சின்ன புத்தி சாவு வரை தொடரும். நந்து அந்தக் கேட்டகிரி ஆளு. அவன் மனசாட்சியே, “நந்து ஈனப்பயலே!” என காறித் துப்பிக் கொண்டே இருக்கிறது.

சிலக்கம்மாவும் நந்துவை விட்டுப் போய் விட, நந்து கொலை செய்கிறான், போலி சாமியாரிடம் இருந்து நகைகளைக் கொள்ளையடிக்கிறான். அந்த நகைகளின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, அக்ரஹாரத்து பார்வதியை மிரட்டி ரேப் செய்து தன்னுடன் வைத்துக் கொள்கிறான். பார்வதியும் பறந்து விட, ‘அந்தப் போலி சாமியாருக்குப் பெரிய இடத்து தொடர்பு இருக்கு. அவனைக் கொல்லாம விட மாட்டேன்’ எனப் படம் முழுவதுடன் துப்பாக்கியுடன் அலைகிறான்.

Spoilers Close

மாசிலாமணியும், நந்துவும் வேறு வேறு நபரில்லை. அதே கொலை வெறி, அதே புத்திரப்பாசம். ஆனால், மாசிலாமணி நல்ல கதைச்சொல்லி. நந்துவிற்கோ, சுத்தமாகக் கதை சொல்ல வரவில்லை.

என்ன நகைமுரண் என்றால், மேக்கிங் வீடியோ ஒரு த்ரில்லர் போல் ஈர்க்கிறது. ‘எப்படியாவது சிங்கிள் ஷாட்டில் பார்த்திபனும், அவர் குழுவும் படத்தை முடித்து விட வேண்டுமே!’ என்ற பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்குகிறது. படத்தில், நந்து எப்படி கதை சொல்லுகிறாரோ, பார்த்திபனும் அப்படியே மேக்கிங் வீடியோவில் தன் அனுபவத்தைப் பகிர்கிறார். மேக்கிங் வீடியோவில் தொனிக்கும் அந்த உண்மையான வலியையும், பார்த்திபனின் சாகசத் தாகத்தையும் உணர முடிகிறது. ஒவ்வொரு முறையும் புது புது தடங்கல் வருகிறது, மீண்டும் முதலில் இருந்து அந்தக் குழு தன் முயற்சியைத் தொடங்குகிறது. ஸ்டார்ட், சொதப்பல், ரிப்பீட் என உண்மையிலேயே கற்பனைக்கு எட்டாத மலைக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது படக்குழு. ஒவ்வொரு ஃப்ரேமும் அசாத்தியமான உழைப்பின் வெளிப்பாடு. பார்த்திபன்* நீங்கலாக, நடித்த அனைவருமே தங்களது பெஸ்ட்டைக் கொடுத்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களோ தங்கள் பெஸ்ட்டையும் தாண்டியதொரு அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளனர்.

பார்த்திபன், உலகத்தின் உயரிய விருதுகளின் மீது  பார்வையை வைத்து, ‘என்ன வேணும் உனக்கு? நியூடிட்டி வேணுமா? எடுத்துக்கோ. பச்ச, எச்ச, **டியா மு** என கெட்ட வார்த்தைகளின் அணிவகுப்பு வேணுமா? தாராளமா எடுத்துக்கோ. படத்துல டார்க்னெஸ் வேணுமா? எடுத்துக்கோ. மனித மனத்தோட வன்மம் வேணுமா? எடுத்துக்கோ. ஆனா நீ மட்டும் வந்துடு’ என மன்றாடியுள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படித் தேவையில்லாததை வலிந்து புகுத்தியவர், கதையையும் நடிப்பையும் இரண்டாம் பட்சமாக ஒதுக்கி வைத்துவிட்டார். இத்தனை பேரின் மெனக்கெடலும் இந்த இருளுக்காகத்தானா? பெருமையாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதில் ஒரு நெருடலை ஏற்படுத்தி விடுகிறார்.

உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் போலியின் சாயம் வெளுத்துவிடும். மேக்கிங் வீடியோவில் உள்ள மனிதர்களின் அசலான உழைப்பு, ஏமாற்றம், மகிழ்ச்சி முதலியவை ஒளிக்கீற்றாய் மனதை வருடுகிறது. படமோ, பார்த்திபனின் சாகசப் போதைக்குப் பார்வையாளர்களை ஊறுகாய் ஆக்கிவிடுகிறது. 

ஒரு கலையை ஏனோ தானோவென சாகச உணர்வாக மட்டும் அணுகியிருக்கும் பார்த்திபன், சாகசத்தைக் கலையாக்கிய பிலிப்பை (தி வாக் – The Walk) நினைவுகூர வைக்கின்றார்.

( *நடிப்பில் முழுக் கவனத்தைச் செலுத்த முடியாமல், பார்த்திபனை எது பதற்றத்திலேயே வைத்திருந்தது என்பதைத் திரையில் – மேக்கிங் வீடியோவில் காணலாம்.)