Shadow

நாய்சேகர் விமர்சனம்

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான படங்கள் பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் வெளியாவது மக்களின் மனதிற்கும் ஆரோக்கியம். சினிமாவிற்கும் ஆரோக்கியம். அந்த வகையில் இந்தப் பொங்கலுக்கு ஒரு ஆரோக்கிய வரவு நாய்சேகர்.

மனிதனிடம் மிருகங்களின் குணம் உண்டு என்பார்கள். ஒருவேளை முழுக்க முழுக்க ஒரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தின் நடவடிக்கைகள் கலந்து விட்டால் என்னவாகும்? இப்படியான ஆர்வம் எழும் ஒரு கருவைக் கதையாகப் பிடித்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்.

ஹீரோ சதீஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு சிறு வயது முதலே நாய் என்றால் அலர்ஜி. அவரது வீட்டருகே ஒரு விஞ்ஞானி நாயின் டி.என்.ஏவை மனிதனுக்குள் கடத்தும் பரிசோதனை செய்துவருகிறார். அதற்காகவே ஒரு நாயை அடைத்துப் போட்டு அவர் வளர்த்து வருகிறார். ஒருநாள் அந்த நாய் வெளியில் வந்து சதீஷைக் கடித்து விடுகிறது. நாய் கடித்த நொடியில் இருந்து நாயின் டி.என்.ஏ சதிஷுக்குள் செல்ல, சதிஷின் டி.என் ஏ நாய்க்குள் செல்ல, இருவருக்கும் என்னாகிறது என்பதே நாய்சேகரின் அட்ராசிட்டி கதை.

சதீஷுக்கு மிக எளிதாகப் பொருந்திவிடும் கதாபாத்திரம் என்பதால் இலகுவாக நடித்துள்ளார். நாய் போன்று பாவனை செய்யவேண்டிய இடங்களிலும், பார்வையாளர்களை முகம் சுளிக்காத வண்ணம் காமிக்கலாக நடித்து சமாளித்துள்ளார். ஜார்ஜ் மரியான்க்கு உள்ள முக்கியத்துவம் கூட, கதாநாயகி பவித்ரா லக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு இல்லை. என்றாலும் கிடைத்த வாய்ப்பை சொதப்பாமல் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளார். ஜார்ஜ் மரியானின் மேனரிசமும், டயலாக் டெலிவரியும் ரசிக்க வைக்கின்றன. வில்லனாகப் பாட்டு பாடியே கலக்கியிருக்கிறார் சங்கர் கணேஷ். படத்தில் எவரது நடிப்பும் மிகையாகிச் சலிப்பை ஏற்படுத்தவில்லை.

பிரவீன் பாலுவின் கன கச்சிதமான ஒளிப்பதிவு இப்படத்திற்குக் கூடுதல் பலம். ஜோன்ஸ் ரூபர்ட்டின் பின்னணி இசசை படத்தின் ஓட்டத்தோடு செம்புல பெயல் நீர் போல் கலந்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் இசையமைத்து பாடியிருக்கும் ‘எடக்கு மொடக்கு’ பாடல் துள்ளல் ரகம்.

படம் துவங்கிய சில நிமிடங்களுக்கு, படத்தின் ஃப்ளோவில் சிறிய தேக்கம் இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிந்தாலும், 15 நிமிடங்களைக் கடந்த பிறகு மின்னல் வேக திரைக்கதை நம்மைப் படத்தோடு கட்டிப்போட்டு விடுகிறது. சதீஷ் இளவரசுவிடம் பெண் கேட்டுப் போகும் காட்சியில் நடக்கும் களேபரம் காமெடியின் உச்சம். மேலும் சுந்தர்.சி பட பேட்டர்னில் அமைந்துள்ள க்ளைமாக்ஸ் காட்சியும் படத்தின் ஆகத்தரம்.

பொங்கல் கொண்டாட்டத்தின் நீட்சியாக, வீட்டில் உள்ள அனைவரும் குடும்பமாகத் திரையரங்கிற்கு ஒரு திருவிழா ‘விசிட்’ அடிக்க நாய்சேகர் சரியான தேர்வாக இருக்கும்.

– ஜெகன் கவிராஜ்