சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நமீதா, “இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.
சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.
இந்தப் படம் குழந்தைகள் பேரன்டிங் பற்றியும், கல்வி பற்றியும் எடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். சாக்லேட், கேரமெல், லட்டு என்பது என்னுடைய பப்பீஸ்களின் பெயர். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன்.
ஒரு விஷயம், ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது, நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும், அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள்; நிறைய பேசுங்கள். இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள். சாயா படம் குழந்தைகள் பற்றிச் சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.