Shadow

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

namma-veettu-pillai-review

ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான்.

சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை.

நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே பாடிவிடுகின்றனர். இடைவேளை முடிந்ததும், மீண்டும் கதாபாத்திர அறிமுகங்கள், அவர்களுக்குப் பாட்டு என சிவகார்த்திகேயனை நாயகனாக்கிச் சோதனை முயற்சி செய்துள்ளார் பாண்டிராஜ்.

துளசி பாத்திரத்திற்கு உயிரளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு பெண்ணுக்குக் கல்யாண வயது நெருங்கி, திருமணம் ஆகாமல் இருந்தால், அந்தப் பெண்ணின் மீது அக்குடும்பத்தாரே தொடுக்கும் உளவியல் வன்முறையை இப்படம் லேசாய்த் தொட்டுள்ளது. ‘உங்க உபத்திரவத்திற்கு வத்தலோ, தொத்தலோ, எதுவோ!’ என முடிவெடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பாத்திரத்திற்கு ஏற்படும் மன நெருக்கடியும், அவரது அம்மாவின் பரிதவிப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. ‘யத்தா, இந்த உலகத்திலேயே நல்ல அண்ணன் நான்தான்ம்மா’ என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் அரும்பொன்னாகிய சிவகார்த்திகேயன், என்ன டேஷ்க்கு மனதுக்கு ஒப்பாத ஒருவரைத் தங்கையின் கணவராக ஏற்கவேண்டும். ஊரிலும் சொந்தத்திலும் யாரும் பெண் தரவில்லையாம். பாண்டிராஜின் கதாபாத்திரங்களுக்கு, ஊர் எல்லையோடு உலகம் முடிந்துவிடும் போலிருக்கிறது.

‘எங்கம்மா எங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தார்’ என நெஞ்சுருகிச் சொல்கிறார் சிவகார்த்திகேயன். அவரது அம்மாவாக அர்ச்சனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்தக் குடும்பம் சொந்த வீட்டில்தான் வாழ்கிறது. உடுத்தும் உடைக்கும், உண்ணும் உணவுக்கும் சிரமப்படவேண்டிய அளவு பெரும் பொருளாதாரச் சிக்கலும் இருந்ததாகத் தெரியவில்லை. துளசியைப் படிக்க வைத்தார்களா, அல்லது பெரும்போராளியான சமுத்திரக்கனிக்கு பெண் பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டிய அவசியம் பற்றித் தெரியாமல் போய்விட்டதா எனப் பெரும்குழப்பம் ஏற்படுகிறது. வயதுக்கு வந்த பெண்ணைப் பெரும்சுமையாக நினைத்துப் பாழுங்கிணற்றிலாவது தள்ளிவிடவேண்டுமென்ற காலாவதியாக வேண்டிய பிற்போக்குத்தனத்திற்கு, மிகச் செயற்கையான திரைக்கதை மூலம் உரம் போடுகிறார் பாண்டிராஜ்.

மாங்கனியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். அரும்பொன், மாங்கனி என பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களை ரசனையாக வைத்துள்ளார் பாண்டிராஜ். மாங்கனியிடம், ‘உனக்கெதுக்குக் கலெக்டர் ஆசை? பேசாம எங்கண்ணனைக் கட்டி பிள்ள பெக்குற வழிய பார்ப்பியா?’ என துளசி கேட்கிறார். மாங்கனியும், ‘நான் ஒன்னும் துளசிக்குச் சளைச்சவளில்லையாக்கும்’ என நிரூபிக்க, ‘பெண்கள் என்றால் அப்படி, இப்படி, பசங்களிடம் இதை எதிர்பார்ப்பாங்க’ எனப் பேசியே கொல்கிறார். அவருக்குக் கலெக்டராக விருப்பமில்லை என்ற உண்மையை அவரது அப்பாவிடம் மறைத்தால் அதில் ஒரு நியாயமிருக்கு. பார்வையாளர்களையும் குழப்பினால் என்ன அர்த்தம்?

படத்தில் சூரியின் மகன் முந்திரிக்கொட்டையாக ஒரு சிறுவன் நடித்துள்ளார். அவன் பேசாத விஷயங்களே இல்லை. தமிழ் சினிமாவில் வரும் குழந்தைங்களின் ஒட்டுமொத்த அதிகபிரசங்கித்தனத்தையும் குத்தகைக்கு எடுத்தவனாக உள்ளான். பெண் பிள்ளையாப துளசியைத்தான் பள்ளிக்கு அனுப்பி கலெக்டராக்கி அழகு பார்க்கவில்லை எனப் பார்த்தால், இந்தப் பொடிப்பையனைக் கூடப் பள்ளிக்கு அனுப்பாமல் பத்திரமாய்ப் பொத்திப் பார்க்கின்றனர். அவனது ஒரே வேலை, சித்தப்பாவுடனும் அப்பாவுடனும் நேரம், காலம் பொருட்டின்றி ஊர் சுற்றுவதாக உள்ளது. நாளை இந்தப் பையன், ஒரு சீமராஜாவாய் வளர்ந்து நிற்பான்.

எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற படத்தின் க்ளைமேக்ஸ் ஆறுதல். ஆனால், ஹீரோயிசம் என்ற பெயரில், ஊரைக் கூட்டி, முந்தைய நாள் கணவனை இழந்த பெண்ணிடம், ‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ எனச் சொல்வதெல்லாம் உச்சபட்ச வன்முறை. கல்யாணம் என்பது ஆணும் பெண்ணும் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதல்ல, அது ஓர் ஆணாகப்பட்டவன் பெண்ணுக்கு அளிக்கும் வாழ்க்கை என்பதாகத் தொடர்ந்து நிறுவ முயலும் பாண்டிராஜ்க்குக் கடுமையான கண்டனங்கள்.

‘தங்கச்சிக்கு நல்லது நடக்கிறது என்றால் நான் எந்த தியாகத்தையும் செய்யத் தயார்’ என்கிறார் சிவகார்த்திகேயன். இங்கே தியாகம் என்பது விரும்பிய பெண்ணை மறந்துவிட்டு, இன்னொரு பெண்ணை மணப்பதில் வரவில்லை. இவர் கல்யாணம் செய்து கொள்ளும் பெண்ணின் உருவத்தைப் பொருட்படுத்தாத தியாகமாம். எதையும் சவாலாக ஏற்றுச் சாதித்துக் காட்டவல்லாத நாயகன் என்றாலும், பெருஞ்சோகத்தை மனதில் கொண்டுள்ள பாசக்கார தியாகி ரோலாம். அவரே அதை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சொல்லிக் கொள்கிறார். ஒரு பக்கம், ‘ஐ கலெக்டரம்மா..’ என நாயகியைக் காதலிக்கிறார்; இன்னொரு பக்கம், தங்கைக்காக யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யத் தயார் நிலையிலேயே இருக்கும் தியாகி மோடிலும் இருக்கிறார். முதல் பத்தியில் எழுதப்பட்டவை வாபஸ் வாங்கிக் கொள்ளப்படுகிறது.