Shadow

சீமராஜா விமர்சனம்

Seemaraja-movie-review

“முத்து, அருணாச்சலம், லிங்காலாம் பார்த்திருக்கீங்களா பங்கு? அதுல வர்ற மாதிரி நான் பெரிய பணக்காரனாவும், ராஜ பரம்பரையாவும் வரணும்” – சிவகார்த்திகேயன்

“வர வச்சுடலாம்.” – பொன்ராம்

“எம்.ஜி.ஆர்., ராஜாவ நடிச்சு கத்திச்சண்டை போடுற படம்லாம் பார்த்திருக்கீங்க?”

“ஓ.. பார்த்திருக்கேனே! சிறப்பா பண்ணிடலாம்.”

“ஐய்யோ பங்கு! அப்படிலாம் பண்ணிடாதீங்க. ‘இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்டா!’ என ஓட்டிடுவானுங்க மீம் பசங்க.” – சி.கா

“அப்ப ரஜினி மட்டும் போதுங்கிறீங்களா? ராஜா கெட்டப் வேணுமா?” – பொ.ரா

“கண்டிப்பா வேணும் பங்கு. எம்.ஜி.ஆர். லெவலுக்குப் போனா வைவாங்க, அதுமில்லாம அது ரொம்ப ஓல்ட் ஸ்டைல். நாம சின்னதா பாகுபலி அளவுக்கு, ராஜமெளலி ‘மஹாதீரா’ல வச்ச மாதிரி லேசா ராஜா சீனை வச்சுப்போம்.”

“சரி அப்படியே பண்ணிடலாம்.”

“முழுசா பாகுபலி மாதிரியும் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர். டச் கண்டிப்பா வேணும். நம்பியார் கிட்ட இருந்து மக்களைக் காப்பாற்ற ஏழை விவசாயிகளோட பங்காளன். ஆமா பங்கு,
வில்லனா யார போட்டா நல்லாயிருக்கும்?”

“அதையும் நீங்களே சொல்லிடுங்க.”

“அதையும் நானே தான் சொல்லணுமா? நீங்களா பார்த்து யாரைப் போட்டாலும் ஓகே தான்! ஆனா கார்ப்ரேட்டாவோ, கார்ப்ரேட் கைக்கூலியாவோ இருக்கணும்! இல்ல அந்த வார்த்தையாவது வரணும். என்ன சரிதான பங்கு?” – சி.கா

“சரி மாதிரி தான் இருக்குது.” – பொ.ரா

“என்ன இழுக்கிறீங்க பங்கு? எல்லாம் சரியா தான் இருக்குது.”

“ஆமாமா சரியா தான் இருக்குது.”

“நான் ராஜான்னாலும், என்னை ஒரு வெட்டி ஆஃபீசரா ஃப்ரோமோட் பண்ணாதான் பசங்க ஈசியா மேட்ச் பண்ணிப்பாங்க. ஆனா, இந்தச் சிவகார்த்திகேயன்க்கு இதே வேலையா போச்சுன்னு எவனாச்சும் கொல்லிக் கண்ணைத் தூக்கிட்டு வருவான். அதைப் பார்த்துக்கலாம். வேணும்னா ஹீரோயினை லூசு மாதிரி காட்டாம போல்ட்டா காட்டிட்டா எப்படியிருக்கும்?”

“ஆசமா இருக்கும்.”

“ஆமா இல்ல! தமிழ், தமிழர் இசிகொல்டு சிலம்பம் சுத்துற ஹீரோயினி, என்னைச் சுத்த விடுறதா ஃபிக்ஸ் செஞ்சுடலாமா?”

“செஞ்சுடலாம்.. செஞ்சுடலாம்.”

“ஹீரோயினியே சிலம்பம் சுத்துறாங்கன்னா, ஹீரோ நான் தூணையாவது பிடுங்கிச் சுத்தினா தான நல்லாயிருக்கும்?” – சி.கா

“ஐய்யோ தூணையா? ரொம்ப ஓவரா இருக்கும். வேணும்னா வளரி எறியுறதுல ஸ்பெஷலிஸ்ட்ன்னு வச்சுப்போம்.” – பொ.ரா

“வளவியா எரியணுமா? சின்னப்புள்ளத்தனமால இருக்கும்?”

“வளவி இல்ல. ரி.. ரி. வளரி. அது பூமராங் மாதிரி. ஆனா இரும்பால் செய்த பழந்தமிழர் ஆயுதம்.”

“ஆசரமரக்காயா! எப்படிக் கதைக்குள் உங்கள கொண்டு வந்தேன்னு பாருங்க பங்கு!” – சி.கா

#புனைவு

இந்தப் புனைவு உண்மையானால், ஒரு படம் எப்படிப் பிரம்மாண்டமாய் உருவாகுமோ, அப்படி வந்துள்ளது “சீமராஜா”. எம்.ஜி.ஆர். கூடத் தன் படத்தின் இறுதிக்காட்சியில், “மன்னராட்சி முடிந்தது. இனி மக்களாட்சி தான்” எனப் படங்களை முடித்திருப்பார். ஆனால், சிவகார்த்திகேயனும் பொன்ராமும் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி, க்ளைமேக்ஸில் ஊரே கூடி அரச பரம்பரையினருக்குப் பல்லக்கு தூக்குவதாகப் படத்தை முடித்துள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பிய இந்தக் கூட்டணி, அதிலும் பரிதாபமாய்க் கோட்டை விட்டுள்ளது இப்படத்தில். கதையோடு இயைந்த நகைச்சுவை போய், நாய்க்குச் சிறுத்தை வேஷம் போட்டால் ஒரு ஊரே பயப்படும் என்றெல்லாம் அநியாயத்திற்கு ஒப்பேத்தியுள்ளனர். குழந்தைங்களுக்குச் சிவகார்த்திகேயனைப் பிடிப்பது போல் படமெடுக்கவேண்டும் என்ற கங்கணத்துடன் இறங்கி, பள்ளி ஆண்டு விழாவில் நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் கேலிக்கூத்து எல்லாம் தேவைதானா?

அரைத்த மாவை அரைக்கும் தைரியம் இருந்தால் மட்டும் போதுமா? அதைச் சுவைப்பட அளிக்க சுவாரசியம் என்பது வேண்டாமா? அதற்கான மெனக்கெடல் இல்லையே தவிர, படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்திலும் பிரம்மாண்டமும் அழகும் விரவியுள்ளன. இமானின் இசையில், ‘மச்சக்கன்னி’ எனும் மெலடி மனதை வருடுகிறது. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் பாடல் ‘காட்சி’கள் எல்லாம் ரசிக்கும்படி உள்ளன. முக்கியமாக பாடல்காட்சிகளில் வரும் லோக்கேஷன்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. மத்தபடிக்கு சீமராஜா, ஆண்ட பரம்பரை பெருமையைச் சுய தம்பட்டமாய்ப் பேசும் வெற்று பில்டப்களாக மட்டுமே சுருங்கிவிடுகிறது. வெறும் பில்டப்களை மட்டுமே நம்பி, அதில் தன்னைப் பொருத்திக் கொண்டு, தன்னை ராஜாவாய்த் திரையில் உலாவ விட்டு மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

1 Comment

Comments are closed.