Shadow

பிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் பேசிக் குழப்புறடா கவின்!’

bigg-boss-3-day-97

கமல் வருகை. உள்ளே ஒரு ஷர்ட், அதற்கு மேல் ஒரு ஸ்வெட்டர் டைப் டி-ஷர்ட், அதற்கும் மேல் ஒரு கோட். பட்டாசாக வந்திருந்தார் கமல். இந்த வாரம், அரசியல் பன்ச் கூட இல்லை. அவருக்கே கன்டென்ட் இல்லாத அளவுக்கு மொக்கையாகப் போய்க் கொண்டிருருக்கு. என்ன தான் ஆச்சு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு?

பிரிவின் வலியைப் பற்றி தன் வாழ்க்கை உதாரணங்களுடன் பேசினார். பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ’சல்மார்’ பாடலுடன் தொடங்கியது நாள். மதியம் வரைக்கும் ஒன்றுமே இல்லை போலிருக்கு. மதிய சாப்பாட்டுக்கு பரோட்டாவும் கோழிக்கறியும் வந்தது. ஷெரின் நன்றாகத் தூங்கிக் கொணிருந்தார். எழுப்பி பரோட்டா சாப்பிடுவது எப்படியெனச் சொல்லிக் கொடுத்தார் தர்ஷன். பகல் நேரத்தில் அங்கே வெயில் கொடூரமாக அடிக்கின்றது. ஒருவேளை அதனாலேயே இருக்கலாம். அதற்கப்புறம் லாஸ்லியா பெயர் போட்டு கவர் ஒன்று வந்தது. பிக் பாஸ் போட்டோ வந்துருக்கும் என நினைத்து எல்லோரும் ஆவலாகப் பிரிக்க, மான் கராத்தே போஸில், யாரோ ஒருத்தர் இருந்தார். தூரத்தில் இருந்து இருட்டில் எடுத்த புகைப்படம் அது. அவர் தான் பிக் பாஸாம். ரைட்டு!!

அதன் பின் டாஸ்க், டாஸ்க், டாஸ்க் மட்டுமே. ஏர்டெல்காரன் எக்ஸ்ட்ரீம் என புதிதாக ஒரு டிவைஸ் கொண்டு வந்துள்ளார். அதைப் பற்றிய டாஸ்க் ஒன்று சுவாரசியமாகப் போனது. தர்ஷனும் சாண்டியும் நன்றாக நடித்துக் காண்பித்தும், ஷெரினும் லாஸும் பெயர் கண்டுபிடிக்கத் திணறினர். கழுதை மாதிரி நடந்தும், காலை உதைத்தும் ‘டாங்கீ’ எனச் சொல்ல வரவில்லை. ‘ஏன்டா தர்சா? சூது கவ்வும்க்கு இதுவாய்யா ஆக்ஷன்? ரஜினி முருகன் பேரைச் சொல்ல வைக்க சாண்டி பட்ட பாடு இருக்கே!

அடுத்து லெவிஸ்டா இன்ஸ்டன்ட் காஃபி டாஸ்க். அவர்கள் கொடுக்கும் காபி மக்கில், ஹவுஸ்மேட்ஸ் தனக்குப் பிடித்த ஒருவருக்கு மெஸ்சேஜ் எழுதவேண்டும். அதில் கொஞ்சம் டைம் போனது.

மீண்டும் கமல் வருகை. வரிசையாக எண்ணிப் பார்த்துவிட்டு, ‘என்னாச்சு?’ எனக் கேட்க, ‘நீங்க தான் சார் சொல்லணும்’ என எல்லோரும் கோரஸாகச் சொல்ல, ‘முதல்ல உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க, அப்புறம் நான் சொல்றேன்’ என ஆரம்பித்தார். கவின் போனதைப் பற்றிப் பேசிக் கொண்டே, போட்டியாளர்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் வாய்ப்பு பற்றியும் பேசினார். போன சீசனில் இருந்தவர்கள் வந்து தங்கள் படத்தை ப்ரோமோட் செய்துவிட்டுப் போனதை வைத்து ஊக்கப்படுத்தினார்.

லாஸ்லியாவிற்கு எல்லோரும் சப்போர்ட்டாக இருந்ததை வெகுவாகப் பாராட்டினார். ‘மிடில் பென்ச்சுல இருந்து சரசரன்னு ஃபர்ஸ்ட் பென்ச்சுக்கு வந்துட்டீங்க’ என ஷெரினிடம் சொன்னார். அனேகமாக ஓட்டிங்கில் லீடிங் வந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்.

‘தர்ஷன்லாம் ஸ்ட்ராங் கன்டெஸ்டன்ட்யா, அவன்லாம் ஃபைனலுக்கு வந்துருவான். நாம ஷெரினைக் காப்பாத்துவோம்’ என நினைத்து பலர் தர்ஷனுக்கு ஓட்டு போடாமல் ஷெரினுக்குப் போட்டிருப்பார்கள் போல.

அடுத்ததாக திருவாளர் கவின் வருகை. அதற்கப்புறம் கமல் மேடையில் இருந்தாலும், மொத்த மேடையையும் கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டார் என்று தான் சொல்லவேண்டும். கமலே நடுநடுவில் எட்டிப் பார்த்து, சில கவுன்ட்டர் கொடுத்து, ‘நானும் இருக்கேன்’ எனச் சொல்ல வேண்டியதாகப் போய்விட்டது. இந்த ஓவர் ஸ்மார்ட்டாக இருக்கிற ஆளுங்களிடம் இருக்கிற ஒரே பிரச்சினை, எதிரில் இருக்கிறவங்களுக்கும் சேர்த்துத்தானே பேசிவிடுவது.

சரவணன் மீனாட்சி சீரியயில், தன் கேரக்டரைப் பற்றிச் சொன்ன கவின், ‘அது நல்லா ரீச் ஆனதால, அதே மாதிரி, இந்த வீட்டுல இருந்து பார்க்கலாம்ன்னு ஆரம்பிச்சேன்’ எனச் சொன்னது மட்டும் தான் புதிது. மற்றபடி கவின் பேசினது எல்லாமே அடித்துத் துவைத்தது தான். ‘உள்ளே இருந்தாலும் இப்படித்தான் பேசற, வெளிய போனாலும் இப்படியே பேசிக் குழப்புற’ என லாஸே சொல்லும் அளவுக்கு இருந்தது கவினின் பெர்ஃபாமன்ஸ்.

கடைசியில் கமலே, ‘கட் பண்ணுங்கய்யா’ எனச் சொல்கின்ற வரைக்கும் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து சாண்டி ஃபைனல்ஸ்க்குப் போனதாகச் சொன்னதோடு கமல் விடைபெற்றுக் கொண்டார்.

மகாதேவன் CM