Search

பிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே!

bigg-boss-3-day-98

தர்ஷன்

சனி மாலை வாக்கில் இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த போது முதலில் நம்பவே இல்லை. ‘ச்சேச்சே, தர்ஷனாவது, எவிக்சனாவது!’ என்று தான் . ஆனால் நேரமாக ஆக, எல்லா இடத்தில் இருந்தும் இந்தத் தகவல் வரவும், ரொம்பம் சோர்வாக இருந்தது.

எவ்வளவோ முயற்சி பண்ணியும், நேர்மையாய் இருந்தும், தகுதி இருந்தும், திறமை இருந்தும், நமக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாய்ப்பு, கைநழுவிப் போகும் போது, ‘என்னடா வாழ்க்கை இது?’ எனத் தோன்றுமே, அப்படியொரு மனநிலை தான் நேற்று இருந்தது. இன்னொருத்தருக்கு வாய்ப்பு பறிபோனதற்காக வருத்தப்பட்டது, இதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு மனநிலை.

நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிக்கும் போது, மனம் கொஞ்சம் சாதாரணமாகத் தான் இருந்தது. தெரிந்தது தானே எனக் கொஞ்சம் அசால்டாகத் தான் இருந்தேன். ரொம்ப ட்ராமா செய்யாமல் தர்ஷனை வெளியே கூட்டிக் கொண்டு வந்த கமல், மேடையில் பாசிட்டிவாகப் பேசும் போது கூட ஒன்றும் தோன்றவில்லை. தாமரை இலை தண்ணீர் மாதிரி மனதளவில் ஒட்டாமல் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், தர்ஷனுக்காக ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுததைக் காட்டின அந்த நொடி, என்னையும் அறியாமல் கலங்கிவிட்டேன். தர்ஷனும் அந்த இடத்தில் தான் கொஞ்சம் முகம் மாறினார். இந்த ஏமாற்றம் எனக்கே நடந்த மாதிரி தான் இருக்கு. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

எப்படி நடந்திருக்கும் இது? ஏன் தர்சனுக்கு இது நடக்கவேண்டும் என நிறைய கேள்வி வருது.

தியரி 1

தர்ஷன் கடைசியாக நாமினேஷனுக்கு வந்து சில வாரங்கள் ஆகிவிட்டது. கவின், சேரன், லாஸ், ஷெரின் இவங்க நாலு பேரும் தான் தொடர்ந்து சில வாரங்கள் நாமினேஷனில் இருந்தார்கள். வனிதாவுக்கு அப்புறம் யார் வெளியே போவார்கள் என்ற ஆர்டர் யூகிக்க முடிந்தது. ஆனால் போன வாரமே, அந்த ஆர்டர் மாறிப்போய், சேரன் வெளியே போனார். அவர் வயது காரணமாக, உடல்நிலை காரணமாகத் தான் வெளியே போனார் என்பதால், அதை ஏற்றுக் கொள்ள்ந் முடிந்தது. இந்த வாரம் முகினைத் தவிர எல்லோரும் நாமினெட் ஆகிறார்கள். இந்த வாரம் நடந்த எல்லா டாஸ்க்லையும் தர்ஷன் தான் வென்றார்.

ஆனாலும் எல்லா வாரமும் போல், ஃபோகஸ் எல்லாமே கவின் – லாஸ் மேலே தான் இருந்தது. வார நடுவில் கவின் வெளியே போனதும், லாஸைத் தவிர யாருக்கும் உதவியாக இருக்காது. கவின் வெளியே போனதும் ஓட்டிங் பேட்டர்னும் மாறியிருக்கும். கவின் ரசிகர்கள் மொத்த ஓட்டையும், சாண்டி லாஸ்க்கு மட்டும் தான் போட்ருப்பார்கள். ஆக, மீதி இருக்கிறது ஷெரின் – தர்ஷன் மட்டும் தான். கவின் – லாஸ் மேலே வெறுப்பில் இருக்கிறவர்களின் முதல் சாய்ஸ் சேரனும் ஷெரினும் தான். இதில் சேரன் வெளியே போனதுக்கு அப்புறம், அவரோட பங்கும் ஷெரினுக்குத் தான் போயிருக்கும் என்பது என் கணிப்பு. அதில்லாமல் எவிக்சனுக்கு வந்ததில் இருந்தே ஷெரின் ஓட்டிங்கில் முன்னேறிக் கொண்டே தான் வருகிறார்.

ஆக, இதை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கவின் ரசிகர்கள் சாண்டி & லாஸைக் காப்பாற்ற; கவின் – லாஸ் வெறுப்பாளர்கள், சேரனை விரும்புபவர்கள் ஷெரினை காப்பாற்ற; தர்ஷன் தனியாக விடப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே தர்ஷன் தான் வின்னர் எனச் சொல்லிக் கொண்டே இருந்ததால், அவர் வெளியே போவாரென யாருமே நினைக்கவில்லை. அதனால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வும் யாரிடமும் இல்லை. அந்தக் குழப்பத்தில் இப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கு.

அதில்லாமல் ஷெரினை தர்ஷன் ட்ரீட் பண்ற விதத்தைப் பற்றியும் நிறைய விமர்சனங்கள் இருக்கு. தங்க முட்டை டாஸ்க் போது கவின் – லாஸும் வெளிய உட்கார்ந்து விடிய விடியப் பேசிக் கொண்டிருந்ததை தர்ஷன் விரும்பவில்லை என்பது, அவர் ரியாக்சன்லேயே தெரிந்தது. அதே மாதிரி கவின் வெளியே போகும் போதும் பெரிதாக எத்வும் ரியாக்ஷன் கொடுக்கவில்லை. இந்தக் காரணங்களால் கூட கவின் ரசிகர்கள் தர்ஷனை கை விட்டிருக்கலாம். கடந்த சில வாரங்களாகவே, தர்ஷனையும் ஷெரினையும் ரொம்பவும் கீழ்த்தரமாக விமர்சித்ததும் கவின் ரசிகர்கள் தான். இதெல்லாமே சேர்ந்து தான் தர்ஷன் வெளிவரக் காரணமாக இருந்திருக்கலாம்.

இல்லை இது விஜய் டிவியின் சதி என முழுதாக நம்புகிறவர்களுக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்படியும் நடந்திருக்கலாம் என லாஜிக்கலான ஒரு தியரி இது. அவ்வளவு தான்!

தியரி 2

50வது நாளில் இருந்தே பாய்ஸ் டீமோட க்ரூப்பிசம் பத்தி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அவங்க 5 பேர் ஃபைனல்ஸ் போக எல்லோரையும் பலி கொடுக்க முடிவு பண்ணினதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. விதிமுறைப்படி அது தப்பா என நமக்குத் தெரியவில்லை. விஜய் டிவியோ, கமலோ அதைப் பெரிதாகக் கண்டுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. ஒருவேளை தர்ஷன் எவிக்ட் ஆகவில்லை என்றால், கவின் சொன்ன மாதிரியே பாய்ஸ் டீம் தான் ஃபைனல்ஸ்க்கு போயிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால், வெளிய போனதுக்கு அப்புறமும் கவின், தான் நினைச்சதை சாதித்துக் காட்டி, ஜெயித்து விட்டாரென்று தான் சொல்லவேண்டும்.

அதைத் தடுக்கிறதுக்காகக் கூட தர்ஷன் வெளியேற்றபட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சரி அதற்கு ஏன் தர்ஷன், லாசை கூட வெளியே அனுப்பிருக்கலாமே என்று தோன்றும். கமல் சொன்ன மாதிரி ஷாக் வேல்யூ பார்க்கும் போது, லாஸை விட தர்ஷன் தான் பெஸ்ட். இது நடந்திருக்கலாம் என்பது என்னோட அனுமானம்.

லாஸையும் ஷெரினையும் விட ஃபைனல்ஸுக்கு போவதற்கு தர்ஷன் தான் தகுதியான நபர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

தர்ஷனுக்குக் கிடைத்த வரவேற்பும் கைதட்டலும் கண்ணீரும் இன்னொருத்தருக்குக் கிடைக்குமா என்பது ஐயம் தான். வாழ்த்துகள் தர்ஷன். 

மகாதேவன் CM