32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கூலி விமர்சனம் | Coolie review

Dinesh R சேலம் Published: 14/08/2025 4 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

மேன்ஷன் ஓனரான தேவா, தன் நண்பன் ராஜசேகர் இறந்ததாகக் கேள்விப்பட்டு விசாகப்பட்டினம் செல்கிறார். ராஜசேகர் கொல்லப்பட்டிருக்கிறார் என அறிந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். கொலையாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஃப்ளாஷ்-பேக்கில், 5821 என்ற எண் கொண்ட வில்லையை அணிந்த கூலியாக இளம் ரஜினியை அசத்தலாக ரீ-கிரியேட் செய்துள்ளனர். அவருக்கும் சக கூலியாக வரும் ராஜசேகருக்குமான நட்பு நன்றாக இருந்தாலும், அழுத்தம் போதவில்லை. ராஜசேகராக சத்யராஜ் நடித்துள்ளார். ரஜினியின் அறிமுக பாடல் தவிர்த்து, ரஜினியிசம் எனும் மேஜிக்கையோ, ரஜினியின் வசீகரத்தையோ தூண்டி விடும் எழுத்தோ, பிரத்தியேக ஷாட்ஸோ படத்தில் இல்லை. அதையும் மீறி ரஜினி, தன்னிருப்பை அட்டகாசமாகப் படம் முழுவதும் நிறைக்க முயற்சித்துள்ளார். அதற்கு அவருக்கு ஒரு வசன உச்சரிப்போ, ஒரு விசிலோ கூடப் போதுமானது. தயாளாக நடித்துள்ள ஷெளபின் ஷாகிர் கலக்கியுள்ளார். நாகார்ஜுனாவின் மகனாக நடித்துள்ள கண்ணா ரவிக்கும், அவரது காதலி கல்யாணியாக நடித்துள்ள ரச்சிதா ராமிற்கும், ஸ்ருதி ஹாசனுக்கும், லொள்ளு சபா மாறனிற்கும் சிறப்பான பாத்திரத்தை அளித்துள்ளனர்.

கொல்வதை வில்லனிசமாகவும், ஹீரோயிஸமாகவும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு அது நிறையவே உள்ளதால்தான், ‘No compromise in violence’ என உறுதியாகச் சொல்லமுடிகிறது. LCU-இல் புழங்கும் போதைப் பொருட்கள் உட்கொள்ளாமலே லோகேஷின் பாத்திரங்கள் வன்முறையில் ஊறித் திளைத்தவர்களாக உள்ளனர். ஹெலிகாப்டரில் இருந்து செம ஸ்டைலிஷாக இறங்கி எதிரிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் தாஹா கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடித்துள்ளார். 

கூலி, உழைப்பிற்கோ, உரிமைக்கோ, உறவுக்கோ முக்கியத்துவம் அளிக்காமல் வன்முறையைக் கொண்டாடித் தீர்க்கிறது. பார்வையாளர்களின் கேளிக்கை உணர்வைத் தூண்டுவதற்காகக் கொலை செய்தலைக் கொண்டாட்டமாகக் காட்டும் படம் ஒரு சமூக சாபம். இதற்கு முன்னும் பல படங்கள் வந்துள்ளன, இனியும் வரும். அசலான கலையைத் திரைப்படத்திற்குள் கொண்டு வரும் கலைஞர்களின் வரவே இச்சாபத்தைப் போக்கும். ஆக்‌ஷன் காட்சிகளைத் தூக்கி நிறுத்துவது என்பது அதற்கான தருணத்தைத் திரைக்கதையில் உருவாக்கும் பொழுதுதான்! ஒரு சாதாரணனின் சமநிலை குலைந்து அவன் எடுக்கும் அவதாரமே மாஸ் மொமன்ட்ஸ்க்கான உணர்வெழுச்சியை அளிக்கும். தற்போதைய பெரிய படங்களில் வரும் நாயகர்கள், வானில் இருந்து நேரடியாகக் குதித்த சூப்பர் மேன் போல் வெல்ல முடியாதவர்களாகவும், சர்வசக்தி மிக்கவர்களாகவும் முதல் ஃப்ரேமில் இருந்தே உள்ளனர். அதுவும் லோகேஷின் படங்களில், நாயகனின் குடும்பத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் உயிரைக் கொடுக்க ஆபத்துதவிகள் தயாராக உள்ளனர். விக்ரம் படத்து ஆபத்துதவிகள் ஏஜென்ட்களாகவும், இப்படத்தில் கூலிகளாகவும் உள்ளனர். ‘ஏம்ப்பா 30 வருஷத்துக்கு முன்னாடி உங்களைத் தலைமை தாங்கி வழிநடத்தியதற்காக, நீங்க யாரும் குடும்பம் குட்டின்னு உங்க வாழ்க்கைய பார்க்காம, ஏன் என் காலையே சுத்தி வர்றீங்க?’ எனக் கேட்பதில்லை. மாறாக, ‘இது தானா சேர்த்த கூட்டம். அன்புக் கூட்டம்’ என உளறிக் கொண்டுள்ளார்கள். பாட்ஷா படத்தில், 5 பேர் எப்பவும் உடன் இருந்தார்கள் என்றால் அது வேற கதை. இந்தப் படத்திலோ, மொத்தம் 18 பேர். கழுத்தில் கத்தி வைக்கப்பட்டாலும், முதலாளி விசில் ஊதின பின் தான் கோபப்படுவார்கள். விக்ரம் படத்தில் பரவாயில்லை, 1986 பிளாக்-ஆப்ஸ் பேட்ச்சைச் சேர்ந்த மூவர்தான் ஆபத்துதவிகளாக இருப்பார்கள்.

மாற்றம் (Transition) இல்லாத மையக் கதாபாத்திர வார்ப்பும், கதையின் ஓட்டத்தைத் தக்கவைக்க காரணகாரியமின்றி எதையாவது செய்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்களும், திரைக்கதையில் மிகப் பெரிய சிக்கலையும் தடங்கலையும் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, இப்படத்தில், நண்பனைக் கொன்றவன் யாரெனத் தெரிந்தும், அவன் நண்பனின் மகளைக் கடத்திச் சொல்லொண்ணா இன்னலை ஏற்படுத்தியும், வருபவனை ஏதும் செய்யாமல் அம்போவென விட்டுவிடுகிறார் ரஜினி. கருணை அடிப்படையில் விட்டாரா நாயகன் என்றால் அதுவுமில்லை. பிறகு ஏன் விட்டார்? கதையை நகர்த்த அந்தப் பாத்திரம் தேவை என்பதால் இயக்குநர் விட்டுவிடுகிறார்! ஆனால், நாயகன் படம் தொடங்கியது முதல், ‘நண்பனுக்கு ஒன்னுன்னா, கூலிகளுக்கு ஒன்னுன்னா சும்மா விடமாட்டேன்’ எனப் பேசுபவராக மட்டும் உள்ளார். ‘நீ யாரை வேணா கொல்லு! என்ன பிசினஸ் வேணா பண்ணு. கூலிகள மட்டும் தொந்தரவு செய்யக்கூடாது’ என படத்தின் முடிவில் நாயகன் ஒரு டீல் போடுகிறார்.

நல்லவனாக இருப்பது நாயகத்துவத்திற்கான அடிப்படையோ அல்லது குறைந்தபட்ச குணமாகக் கூட வரையறுக்காமல், எத்தனை பேர் வந்தாலும் கொல்லும் உடல்வலுவை ஹீரோயிசமாக முன்னிறுத்துகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியை ஒரு கில்லிங் மெஷினாக்கி, கொல்வதை ஹாபி போல் செய்யும் தாஹாவிற்கு அடியாளாக்கி, ரஜினி படத்திற்குக் குடும்பத்தோடு குழந்தைகளை அழைத்து வர முடியாமல் செய்து, லோகேஷ் கனகராஜ் என்ன சாதித்துள்ளார் என்று தெரியவில்லை. போதைப்பொருள் இல்லாச் சமூகம் என்பதையாவது LCU படங்கள் வற்புறுத்தும். ஆனால், கதையோ, அறமோ முக்கியம் இல்லை, அக்கண (instant) கேளிக்கை மட்டுமே போதுமென்ற நிலைப்பாட்டில் உள்ளது லோகேஷின் இந்தக் கூலி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.