இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் – இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது.
நடிகை ஸ்ருதி பெரியசாமி, “ஒரு புதுமுகத்திற்கு இவ்வளவு பெரிய கேரக்டர் தருவது மிகப்பெரிய விசயம். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை எனக்குத் தந்தார் இயக்குநர் சரவணன் சார் திரைத்துறைக்கு வந்த பிறகு, இது மிகப்பெரிய இண்டஸ்ட்ரி, இதில் தினமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. நான் இனிமேல் நாயகியாக நடிப்பேனா என்பது தெரியாது. ஆனால் என்றென்றைக்கும் இந்தத் திரைப்படம், என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். சசிகுமார் சாரை, வேறு நிறைய படங்களில் ஹீரோவாக பார்த்திருக்கிறேன். ஆனால் கூட நடிக்கும் போது, மிக மிக எளிமையாக என்னிடம் பழகினார். நிறைய சொல்லித் தந்தார். மிக ஆதரவாக இருந்தார்” என்றார்.
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், “இந்தப் படத்தைப் பற்றி எனக்கு முதலில் எதுவுமே தெரியாது. சசி சார் கூப்பிட்டு, ‘சார் ஒரு படம் செய்திருக்கிறேன். வந்து பாருங்கள்’ என்றார். படம் ஆரம்பிக்கும் போது, ‘ டைட்டில் கூட இன்னும் ரெடியாகவில்லை. இது கமர்சியல் படம் இல்லை. வித்தியாசமான படம் பாருங்கள்’ என்றார். படம் பார்த்து அதிர்ந்து விட்டேன். தமிழ் சினிமாவுக்கு என சில மரபுகள் இருக்கும், படம் ஆரம்பிக்கும் போது, கோயில், பசு மாடு என காட்சி வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் காலணியை க்ளோசப்பில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். படம் முடிக்கும் போது எனக்கு அத்தனை பிரமிப்பாக இருந்தது. எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக இந்த படத்தை நாம் தான் வெளியிடுகிறோம் என்று சொல்லி ஒப்பந்தம் செய்து விட்டேன். ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டுவர மிகவும் மெனக்கெட்டு இப்படத்தைச் செய்துள்ளார்கள். படத்தில் யாருமே நடிகர்களாக இல்லை, ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். சசிகுமார் அப்படியே உருக்கிவிட்டார். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து நான் பிரமிப்பது புதிதாக இருந்தது” என்றார்.