Shadow

“எது நல்ல படம்?” – இயக்குநர் ஹெச். வினோத்

இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் – இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், “இயக்குநர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தைத் தொடங்கினார். அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்தப் படத்தைத் தொடங்கினார் என்பது எனக்குத் தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார். இந்தக் கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், ‘சோப்புலிங்கம்’ கேரக்டரை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார். நான் தயங்கினேன். முதன்முதலில் சமுத்திரக்கனி தான் என்னை நடிக்கக் கேட்டார். ஆனால் நான் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டேன். ஆனால் வெற்றிமாறனின் படத்தில் நடித்த பிறகு, அனைவரும் என்னை நடிகனாக நம்பி விட்டார்கள். நான் நல்ல நடிகன் என்ற நம்பிக்கை இல்லை. நான் ஒரு இயக்குநர் தான். நன்றாக நடித்தேன் என அவர்கள் சொன்னால் மகிழ்ச்சி. இயக்குநர் சரவணன் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருப்பது, அவருக்கு சமூகப் பொறுப்புடன் கூடிய அக்கறையெல்லாம், படத்தில் உண்மையாக வந்திருக்கிறது.

சரவணன் தயாரிப்பாளர் என்பதால், எந்த சமரசம் இல்லாமல், இந்தத் திரைப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். ’16 வயதினிலே’ படத்திற்குப் பிறகு, அப்படி ஒரு உழைப்பை சசிகுமார் இந்தத் திரைப்படத்திற்காக தந்திருக்கிறார். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதால் சொல்லவில்லை. உண்மையாகவே மிக அற்புதமான திரைப்படம்” என்றார்.

இயக்குநர் ஹெச். வினோத், “நண்பர் இரா. சரவணன் இப்படத்தைப் பார்க்கச் சொல்லி கடந்த சில மாதங்களாக என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன். அவரது முந்தைய படம் “உடன்பிறப்பே” படத்தில் பாசம் அதிகம். அதனால் அவர் படமே வேண்டாம் எனத் தவிர்த்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன். அந்த வகையில் இந்தத் திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது.

சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்” என்றார்.