Shadow

நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா

இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் – இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இந்தப் படத்திற்காக யோசித்து வைத்திருந்தார் இயக்குநர் இரா. சரவணன். அவரில்லாத பட்சத்தில், அவருக்கு நிகரான ஒருவர் வேண்டுமென ஒளிப்பதிவாளர் சரணை அணுகியுள்ளார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் சரண், ” ‘கிடாயின் கருணை மனு‘, ‘விழித்திரு’ திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சமுத்திரகனியுடன் பணியாற்றியதும் நல்ல அனுபவம். ஜிப்ரானின் இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

கலை இயக்குநர் உதயகுமார், “இந்தப் படத்தில் என்னைப் பரிந்துரை செய்த இணை இயக்குநர் குரு அவர்களுக்கு நன்றி. அண்ணன் சசிகுமார் அவர்களுடன், நான் மூன்று வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் வினோத் அவர்களின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நான் அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றினேன். அவர் இருக்கும் மேடையில் கலை இயக்குநராக நான் இருப்பது எனக்குப் பெருமை” என்றார்.

நடிகர் துரை சுதாகர், “எத்தனையோ இயக்குநர்கள் இங்கு வசூலை முன்வைத்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அண்ணன் சரவணன் அவர்கள், சமூகம் சார்ந்து படத்தை எடுத்திருக்கிறார். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவராக அண்ணன் சரவணன் இருக்கிறார். தன் மண்ணைப் பற்றிய வேதனையைப் பதிவு செய்யும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் மக்களுக்காக சிந்திக்கும் சசிகுமார் அவர்கள் மிக அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள். வாழ்வியலைச் சொல்லும் படமாக, இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சரவணன் மற்றும் சசிகுமார் அவர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமை. அதே போல் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது” என்றார்.

தின்க் ம்யூசிக் சந்தோஷ், “இந்த மேடை ரொம்ப ஸ்பெஷல். இரா. சரவணன் மிக நெருக்கமான நண்பர். நான், வினோத், சரவணன் எல்லோரும் நண்பர்கள். ஒரு நாள் நண்பர் வினோத், ‘சரவணன் ஒரு படம் எடுத்திருக்கிறார். நீங்கள் பாருங்கள்’ என்று என்னை அழைத்தார். அப்போது மியூசிக் எல்லாம் ஃபிக்ஸ் செய்யாமல் இருந்தது, எந்த எஃபெக்ட்டும் இல்லாமல், டப்பிங் கூடச் செய்யாமல், அந்தப் படத்தைப் பார்த்தேன். மிக அதிர்ச்சியாக இருந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். ‘இப்படி எல்லாம் ஊர்ப்பக்கம் நடக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ஆம். ஊர்ப்பக்கம் எல்லாம் இது மிக சாதாரணம்’ என்றார்கள். படத்திற்கு இசை பற்றி பேச்சு வந்தது, எனக்கு ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. சரவணனும் அவர் கண்டிப்பாக சரியாக இருப்பார் என்றார். ஜிப்ரான் படத்தின் உணர்வுகளைக் காட்சிகளை மேலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்” என்றார்.

இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், “ஒரு சினிமா நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கும் என்பதை மீண்டும் மீண்டும் ஒரு நல்ல சினிமா சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாங்க எல்லாம் சென்னையிலேயே பிறந்து எதுவும் தெரியாமல் வளர்ந்து விட்டோம். ஆனால் கிராமத்துப்பக்கம், இன்னும் இது மாதிரி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதை ஒரு படமாக உங்கள் முன்னால் கொண்டு வரும் இயக்குநர்களில் ஒருவராக இரா. சரவணன் போன்ற இயக்குநர்கள் இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் இரா சரவணனின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அவரது எழுத்துக்களுக்கு நான் ரசிகன். விஷுவலாகவும் திரைப்படத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். மாற்றத்தை பேசும் மாமன்னர்கள் இருக்கும் சமூகத்தில் அதை அடிமட்டத்தில் இருந்து சமத்துவத்தைப் பேசும் நந்தனார்களும் நமக்குத் தேவை” என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, “இயக்குநர் இரா. சரவணன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். நாம் நிறைய பேரோடு பழகுவோம், ஆனால் சிலருடன் மட்டும்தான் நெருக்கமாக இருப்போம். அந்த வகையில் இரா. சரவணன் மிக அற்புதமான நண்பர். அவரோடு நிறைய சினிமா பற்றி பேசுவேன். ‘உடன்பிறப்பே‘ படத்திற்குப் பிறகு, அவர் பெரிய இடத்தை அடைவார் என வாழ்த்தினேன். இப்போது ‘நந்தன்’ படத்திற்குப் பிறகு, அவருக்கு அந்த இடம் கிடைக்கும். பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி, இந்தப் படத்தை அவர் செய்துள்ளார்” என்றார்.