Shadow

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

காதல், நெருக்கம், பாலினப்பண்பு முதலியவற்றை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டுவதில் வல்லவரான 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Glimt) -இன் மிகவும் புகழ்பெற்ற ஓவியமான The Kiss இலிருந்து படத்தின் ஃப்ரேம் தொடங்குகிறது. படத்தின் மையமும், காதல், நெருக்கம், பாலினப்பண்பு ஆகியவற்றைச் சுற்றியே!

இனியனின் அறைச்சுவரில், ‘தி கிஸ்’ ஓவியமும், பின்னணியில், கறுப்பினப் பெண்மணியான நினா சிமோனின் (Nina Simone) பாடலும் ஒலிக்கிறது. பாடகியும், இசையமைப்பாளருமான நினா சிமோன் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் கூட! அதாவது, இனியன் என்பவர் நவீனத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட முற்போக்காளன் என்றறியலாம். தனது இசையின் மூலமாகவும், பிரபல்யத்தின் மூலமாகவும், சமூக உரிமைகளுக்காகப் போராடிய நினா சிமோனோடு ஒப்பிட்டு, இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டின் மீது விமர்சனம் உள்ளவன் இனியன். அவனது காதலியான ரெனே, இனியனின் சாதி சார்புநிலை காரணமாகவே அவனுக்கு இளையராஜாவைப் பிடிக்காமல் போய்விட்டதென நம்பி எள்ளல் செய்கிறாள். விவாதத்தின் முடிவில், ‘சாதி புத்தி மாறாது’ என ரெமியை உடைத்துவிடுகிறான் இனியன்.

(தமிழ் என்ற பெயரை, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலில் வரும் ரெனேட்டா ரெமேதியோஸ் என்ற பாத்திரத்தால் கவரப்பட்டு, ரெனே என மாற்றிக் கொள்கிறாள்.)

நாயகனாகும் ஆசையில் நடிப்புப் பயிற்சி பெற, பாண்டிச்சேரியில் ஒரு தியேட்டர் க்ரூப்பில் சேருகிறான் அர்ஜூன். பழம்பெருமைகளிலும், அவனைச் சுற்றியுள்ள சமூகம் திணித்த ஆதிக்கத்திலும் உழலும் அர்ஜூன்க்கு அங்கே கலாச்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. இரண்டு ஆண்களுக்கு இடையே காதல் (Gay), முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாடும் திருநங்கை – ஆண் ஜோடி, லெஸ்பியன் ஜோடி, இனியன் – ரெனி ப்ரேக்கப் ஜோடி என அர்ஜூன்க்கு அந்த ட்ரூப்பில் உள்ளவர்களோடு ஒட்ட முடியாமல் போகிறது. ஆணவக்கொலை என அவர்கள் பேசினால், இல்லை அது நாடகக்காதல் என அலறுகிறான் அர்ஜுன். அய்யாதுரையும், சேகரும் மட்டும் கொஞ்சம் சிநேகமாக உள்ளார்கள். அவர்களது நட்பையும் குடிபோதையில் பறிக் கொடுக்கிறான் அர்ஜுன். அந்தத் தியேட்டர் ட்ரூப் அர்ஜூன்க்குள் எத்தகைய மாற்றம் ஏற்படுத்துகிறது, அவர்கள் உருவாக்கும் காதல் பற்றிய மேடை நாடகத்தின் போக்கும் தான் படத்தின் கதை.

காதல் என்பது சாதியற்ற (Casteless), பால்பேதமற்ற (Genderless) விஷயம், ‘அது ஓர் அரசியல்’ என்பதையும், ஒரு காதலைச் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பமும் உறவுகளும் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற உரையாடலில் இருந்து நாடகம் உயிர் கொள்கிறது. காட்சிகள், குறியீடுகள், இசை என விஷுவலாகப் படத்தைச் சிலாகிக்க முடிந்தாலும், அதையும் மீறி வசனங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இனியனாகக் காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ளார். முற்போக்காக யோசிப்பதற்கும், சமூக யதார்த்தத்திற்கும் உள்ள போதாமையைச் சுட்டிக் காட்ட இயக்குநர் ரஞ்சித் பயன்படுத்தியிருக்கும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். ரெனேவால், அதாவது ரஞ்சித்தால், சுலபமாக அர்ஜுனை மன்னிப்பது போல், இனியனை மன்னிக்க முடியாமல் போகிறது.

அய்யாதுரையாக ஞானபிரசாத்தும், மெட்ராஸ் படத்தில் நடித்த சேகராக வரும் வினோத்தும், அர்ஜுனைக் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஜாலியாகக் கலாய்த்துத் தள்ளுகின்றனர். தியேட்டர் ட்ரூப்பில் அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தும், அத்தனை பேருக்கும் ஒரு வாழ்க்கை, தனித்த குணாதிசயங்கள் எனக் குழப்பமின்றி வடிவமைத்துள்ளார். ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையைத் தொடர்ந்து, இப்படத்திலும் கதாபாத்திர உருவாக்கத்தில் அவர் காட்டியுள்ள நேர்த்தி பிரமிக்க வைக்கிறது.

LGBTQIA+ இலுள்ள அனைத்தையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்துள்ளார் ரஞ்சித். ஆனால், ரெனே பாத்திரத்தைத் தவிர மற்றவர்களுக்கு ஒரு முழுமையையோ, அழுத்தத்தையோ கொடுக்கவில்லை. சொல்லப் போனால், படத்தில் குறியீடுகளுக்கு உள்ள முக்கியத்துவம் கூட டீட்டெயிலிங்கில் கொடுக்கப்படவில்லை. அதாவது எது, எங்கே, எப்பொழுது நிகழ்கிறது, யார் யார் எங்கெங்கு இருந்து தியேட்டரில் குழுமியுள்ளனர் முதலிய தகவல்கள். ஆக, மொத்த படத்திலும் எந்தக் கதாபாத்திரத்துடனும் பொருத்திப் பார்க்க முடியாமல், ஒரு பார்வையாளராகவே இருக்கிறோம். ஆனால் அது ஒரு குறையாகத் தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரும், படத்தொகுப்பாளர் RK செல்வாவும், இசையமைப்பாளர் தென்மாவும்.

படத்தின் முதற்பாதி கலகலப்பிற்கு உதவுவது அர்ஜுனாக நடித்துள்ள கலையரசனே! நாடகக் காதலை நம்புபவராக, பெண்கள் தங்கள் விருப்பப்படி உடை அணிவதைப் பொறுத்துக் கொள்ளாதவராக, ஓரின காதலை அருவெருப்புடன் பார்ப்பவராகப் பொதுச் சமூகத்தின் வார்ப்பாக வருகிறார். குடித்துவிட்டு அவர் செய்யும் அலப்பறை ரசிக்க வைக்கிறது. ‘அரசியல் சரித்தன்மை ஒரே நாளில் வராது; அது வாழ்நாள் பயணத்தில் வரவேண்டிய ஒன்று’ என ரெனி கலையரசனின் பிற்போக்குத்தனத்தை மன்னித்து ஒரு வாய்ப்பளிக்கிறாள். ஆணவக்கொலைகளால்  பாதிக்கப்பட்டவர்களை அழைத்துப் பேசுவதால் அவருக்கு மனமாற்றம் ஏற்படுகிறது என வைத்துக் கொண்டாலும், அவரது இன்ஸ்டன்ட் மாற்றமும், ரெனே மீது உடனடியாகக் காதல் வருவதையும் ஏற்க சிரமமாக உள்ளது.

ரெனேவாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். ‘பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துகள் என உணர்ந்தால் ஜாலியாக இருக்கலாம்’ என நம்புபவர். ஆனால், நம்மைப் பற்றி நாம் நம்புவது போல் நாம் பெரும்பாலும் இருப்பதில்லை. ‘இந்தச் சமூகத்தில் இளையராஜா வென்றதே ஒரு கெத்தான பெரிய கலகம்’ என தான் நம்புவதை இனியனும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற பிடிவாதம் அவரிடமுள்ளது. அதை அவரால் ஜாலியாகக் கடக்க முடியவில்லை. தனது அரசியல் சரித்தன்மையினின்று தான் புரிந்து கொண்டதே சரி என்பதில் உறுதியாகவும், மற்றவர்களுக்கு அது வாழ்நாள் பயணம் என நம்பும் முரண் ரெனே கதாபாத்திரத்தில் உள்ளது. வாழ்க்கை முழுவதும் சாதியத்திமிரால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படும் ரெனே, தன்னை ஓர் உடைந்த கண்ணாடியின் ஒன்றிணைக்கப்பட்ட வலுவானதொரு பிம்பம் என நம்புகிறார். தனது பிடிவாதமான கான்சிஷயஸையும் மீறி இனியன் மீதான காதலை உணர்கிறாள் ரெனே. ‘இது காதல் படமல்ல; காதலைப் பற்றிய படம்’ என ரஞ்சித் சொல்லியுள்ளார். ஆதலால், படத்தில் ’96 போல் மருகும் காதல் அத்தியாயம் எல்லாம் இல்லை. ‘இன்று நீ, நாளை வேறொருவர்’ என கமிட்மென்ட்களில் ஆர்வம் காட்டாமல் நகரும் தலைமுறையின் புது யதார்த்தத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆதிக்கச் சாதியனருக்குக் காட்டுப்பூனை என்றும், பிற்படுத்தப்பட்டவருக்கு நாட்டுப்பூனை எனவும் பெயர் சூட்டி நாடகமியற்றத் திட்டமிடுகிறார் மாஸ்டர் சுபீர். கலகத்தைக் கலையாகக் கூட அனுமதிக்காத பெரிய பூனையாக, சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோஸாகக் கலக்கிய சபீர் கல்லாரக்கல் நடித்துள்ளார். பெரிய பூனை என்பது சமூகத்தில் எந்த மாற்றத்தையும் விரும்பாத ஒரு சமூகக் கட்டமைப்பின் குறியீடு; நாட்டுப்பூனையையும், காட்டுப்பூனையையும் அதனதன் இடத்திலேயே உள்ளபடிக்கு வைப்பதில் கவனத்துடன் இருக்கும் சமூகத்தின் கூட்டு மனநிலை. தனது அரசியலை அழகியலோடு பேசியுள்ளார் பா. ரஞ்சித். படம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் அழுத்தமாக இல்லை. ஆனால், சமூகம் பேசத் தயங்கும் பல விஷயங்களை விவாதப் பொருளாகப் பொதுவெளியில் தூக்கிப் போட்டுள்ளார்.

எரி நட்சத்திரத்திற்குத்தான் (Meteor), ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனக் கவித்துவமாகப் தலைப்பிட்டுள்ளார் ரஞ்சித். எரிந்து விழும் விண்கல்லைக் கதாபாத்திரங்கள் அதிசயமாகப் பார்ப்பதோடு படம் நிறைவுறுகிறது. அப்பொழுது ஏதாவது வேண்டிக் கொண்டால், அது அப்படியே நடக்குமென மாஸ்டர் ஷபீரின் மகளுக்குச் சொல்லித் தரப்படுகிறது. இயற்கையின் நிகழ்வு ஒன்றை அதிசயம் என நம்ப வைப்பதும், அதைக் காணக் கிடைக்கும் வாய்ப்பை அதிர்ஷ்டத்தோடு முடிச்சு போடுவதும், விண்கற்களைக் காட்டி நட்சத்திரங்கள் என நம்ப வைப்பதும் தொடரும் வரை பெரிய பூனையின் பாடு கொண்டாட்டம்தான்.