
டார்கெட்டைக் குறி வைத்துவிட்டால், அதற்காக எவ்வாறாயினும் உருமாறி, கணித ஞானத்தைக் கொண்டு இலக்கைக் கச்சிதமாகத் தாக்கும் கான்ட்ராக்ட் கொலையாளிக்கு ‘கோப்ரா’ எனக் காரணப் பெயர் சூட்டப்படுகிறது. அதி ரகசியமாகச் செயற்படும் கோப்ராவின் திட்டங்கள் ஒரு ஹேக்கரால் இன்டர்போலுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. யார் அந்த ஹேக்கர், ஹேக்கருக்கும் கோப்ராவிற்கும் இடையே என்ன பிரச்சனை, ஹேக்கர் – கோப்ரா இருவரையும் ஏன் தொழிலதிபர் வேட்டையாட நினைக்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதிலே படத்தின் முடிவு.
படத்தில் மூன்று கதாநாயகிகள். பாடல் காட்சிகளுக்கென்று நேர்ந்து விடப்படாமல், மூவருக்குமே பிரதான பாத்திரங்கள் கொடுத்து வியக்க வைத்துள்ளார் அஜய் ஞானமுத்து. ஹீரோயிசப் படமென்பதால் நாயகிகளை அழுத்தமாகக் கதையில் உபயோகிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று கூட வகைமைப்படுத்தலாம். சதா சர்வகாலமும் மூளைக்குள் கேட்கும் குரல்களில், உண்மை எது, பொய் எது என கவனமாகப் பிரித்தறிவது கடினம். கணிதத்தில் புலி, ஆக்ஷனில் சிங்கம் என்பதைத் தாண்டி கோப்ராவின் ஹீரோயிசம் என்பது அவனது உளச்சிக்கல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதிலேயே அமைந்துள்ளது. கோப்ராவிடம் பேசும் கற்பனை உருவங்களில் ஒன்று ஆனந்த்ராஜுடையது. கோப்ராவின் மூளையிடம் கூச்சலுக்கு, ஆனந்த்ராஜும் விக்ரமும் லயம் தப்பாமல் சிங்க் (Sync)-உடன் ஒரே மாதிரி உடற்மொழியை வெளிப்படுத்துவதைக் காண ரசனையான அனுபவமாக உள்ளது.
படத்தின் பிரம்மாண்டம், ஹாலிவுட் படத்திற்கு இணை வைக்கப்பட்டுள்ளது. ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் என கோப்ராவின் டார்கெட்கள் அனைவருமே ஹை-ப்ரொஃபைல் மதிப்பு மிக்க நபர்கள். அதை விசாரிக்கும் இன்டர்போல் அதிகாரி அஸ்லானாக இர்ஃபான் பதான் நடித்துள்ளார். ஆனால், கோப்ராவின் வழித்தடத்தையே ஹேக்கரின் உதவியோடு தெரிந்து கொள்ளுமளவே உள்ளது அவரது விசாரணை. க்ளைமேக்ஸின் பொழுது, எலி வளைக்குள் புகுவதைத் தவிர்த்து, ரோஷன் மேத்யூவின் வில்லத்தன நடிப்பு ரசிக்க வைக்கிறது. பல கெட்டப்களில் அசத்தலாக நடித்துள்ளார் விக்ரம். எத்தனை வேடம் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற விக்ரத்தின் பகாசுரப் பசிக்குத் தீனி போட்டுள்ளார் அஜய் ஞானமுத்து. ஆனால், எந்த விக்ரத்துடன் கனெக்ட் செய்து கொள்வது என்று ஆடியன்ஸ்க்குக் குழப்பம் ஏற்படுத்தாமல், சற்று கவனத்துடன் அதைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர். கதை எழுதுபவருக்குத்தான் நல்லவன், கெட்டவன், ட்விஸ்ட் எல்லாம் அவசியம். படம் பார்ப்பவர்களுக்குத் தேவை ஒரு நாயகன் மட்டுமே!
ஃப்ளாஷ்-பேக்கில் வரும் மதியழகன், கதிர்வேலன் சகோதரர்களின் அத்தியாயம் ஆடியன்ஸோடு கனெக்ட் ஆகியிருந்தால், படத்தின் விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும். க்ளைமேக்ஸில் எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட பின், கணித மேதைத்தனம் வெளிப்படாமல், உணர்ச்சிகளுக்குக் கட்டுண்ட சராசரி மனிதனாகி விடுகிறார் கோப்ரா. குற்றவுணர்வினின்று எடுக்கப்படும் மனிதனின் முடிவுகள் குழப்பத்தையே விளைவிக்கும். அப்படி இல்லாமல் இருந்திருந்தால், கோப்ராவின் சீற்றம் கூடுதல் ஆக்ரோஷத்துடன் இருந்திருக்கும்.