Shadow

’96 விமர்சனம்

96-movie-review

பத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் உணர்ந்தாலும், அதைப் பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும் முன்பு ஒரேடியாகப் பிரிந்து விடுகின்றனர். சரியாக 22 வருடங்களுக்குப் பின், ஓர் ஒருங்குகூடலில் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் ஓரிரவு, காலத்தை உறைய வைத்து, இசையாயக் கரைந்து, அவர்களோடு பார்வையாளர்களையும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடுகிறது.

மனதில் பதிந்துள்ள மிக மென்மையான பதின் காலத்து இனிய நினைவுப் பொக்கிஷங்களைக் கச்சிதமாக மீட்டுகிறார் கோவிந்த் வசந்தா. இசையால் என்னென்ன மாயம் செய்யமுடியும் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், அப்படி க்யூட்டான பால்யம் வாய்க்கப் பெறாதவர்களுக்குக் கூட, அந்தக் குறுகுறுப்பான ஓர் இனிய அவஸ்தையை உண்டாக்கிவிடுவது தான் 96 படத்தின் சாதனை. பள்ளிப்பருவத்தில், ஜானகி பாடும் பாடல்கள் அனைத்தும் மிக அட்டகாசம். இளையராஜாவை ஏன் போன மில்லியனத்தின் இறுதியில் பிறந்தவர்கள் கொண்டாடுகின்றனர் என்பது இந்த மில்லியனத்தில் பிறந்தவர்களும் உணர்வார்கள். ஓர் எதிர்பாரா இடத்தில், ஜானு பாடும் “யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே” பாடலுக்குக் கரையாத மனங்களே இருக்காது! இயக்குநரின் திறமையை வியக்க அந்த ஒரு காட்சி  போதும்.  

வார்த்தைகளில் அடைக்க இயலாத பதின்மத்தின் அழகான இனிய ரகசியங்களை, காதலென மகத்துவப்படுத்துவது (glorify) எந்தளவுக்கு அறமான செயலென அறுதியிட்டுக் கூற இயலாது. இளசுகள் ஊரை விட்டு ஓட துணிவைத் தந்து கதவைத் திறந்து வைத்தவர் எனும் குற்றச்சாட்டு பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை (1981)” படத்திற்கு உண்டு. 96 படத்தில், பத்தாம் வகுப்பை நாயகனும் நாயகியும் 1994இல் படிக்கின்றனர். செல்ஃபோன் இல்லாத, தூர்தர்ஷன் காலத்து பதின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று அழகாக ஆவணப்படுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் C.ப்ரேம் குமார். இரண்டு நாளாக ஜானகியைப் பார்க்காத ராம், திங்கள் காலை அரக்கப் பறக்கப் பள்ளிக்குக் கிளம்புவான். அப்பொழுது ஷேவிங் செய்து கொண்டிருக்கும் அவரது அப்பா, கண்ணாடியில் பார்த்து “டேய்ய்..” என்பார். உடனே ராம் டிஃபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு ஓடுவான். இப்படிச் சின்னச் சின்ன ஷாட்களிலும் ஓர் அழகியலான யதார்த்தத்தை இழையோட விட்டுள்ளார் ப்ரேம் குமார். 

பிரதான பாத்திரங்கள் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்கின்றனர். காதல் என்ற வார்த்தையைப் பள்ளிக்காலத்தில் உபயோகப்படுத்தவே இல்லை. அந்த அழகான குறுகுறுப்பை மிக மிக நுட்பமாகக் (subtle) கையாண்டுள்ளனர். அவர்களது இறுதிச் சந்திப்பில் கூட, சட்டையில் இன்க் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பிரியும் அந்த இன்னசென்ஸ் அவ்வளவு அழகு. 22 வருடங்களுக்குப் பின், அவர்கள் சந்திப்பையும் மெச்சூர்டாகச் சித்தரித்துள்ளனர். ஆனால், பதின்மத்தில் இருந்த மிக இயல்பான நகர்வு வளர்ந்த பின் சிற்சில காட்சிகளில் மிஸ் ஆகிறது. நாற்பதை நெருங்கும் வயதில், விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் சந்தித்துக் கொள்கின்றனர். விஜய் சேதுபதி தயக்கத்துடன் வீட்டிற்கு அழைக்கிறார். ‘ஏன்?’ என இழுக்கிறார் த்ரிஷா. ‘ஐய்யய்யோ, அதுக்கில்ல!’ எனப் பதறுகிறார் விஜய் சேதுபதி. ‘தெரியும், உன்னை நம்பி மேனகை, ஊர்வசி, ரம்பையை விட்டுட்டுப் போலாம். ஒன்னும் பண்ண மாட்ட. அவ்ளோ நல்லவன் நீ’ என்று சான்றிதழ் தந்து விட்டே வீட்டுக்குச் செல்கிறார். மேம்போக்காகப் பார்த்தால், நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சிதான் என்றாலும், ஆணும் பெண்ணும் தனியாக ஓர் அறையில் நட்பாகப் பேசுவதாகக் காட்சி வைத்தால், இந்தச் சமூகம் என்ன நினைக்குமோ என்ற பதற்றம் இயக்குநருக்கு ஏற்பட்டிருக்குமோ என்று தெரிகிறது. பால்யத்தில் மிதந்து கொண்டிருக்கும் அந்த இன்னசென்ஸான ஃப்ளோவைக் கொச்சைப்படுத்துவது போல் அல்லவா உள்ளது? வளர்ந்த விட்ட முன்னாள் காதலர்களால் செக்ஸ் நினைப்பின்றிப் பேசிக் கொள்ளவே முடியாதென்ற பொதுப்புத்தியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். ஜானகி பற்றிய சின்னச் சின்ன விஷயம் எல்லாம் சேகரிக்கும் ராம், ஒரே ஒரு முறை நேரில் சென்று பார்த்திருந்தால்? 96 எனும் படம் கிடைத்திருக்காது, எனினும் ராமின் முட்டாள்த்தனத்திற்குப் ‘பளார்’ என ஓர் அறை விட்டுத் தன் ஏமாற்றத்தையாவது உணர்த்தியிருக்கலாம் ஜானகி. 

சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும், சிறு வயது த்ரிஷாவாக நடித்திருக்கும் கெளரியும் அசத்தியுள்ளனர். சிறுவர்களின் கள்ளம் கபடமில்லா அன்பைப் பார்ப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம்! அதற்கு, அவர்களின் நடிப்பு ஒரு காரணம் என்றால், ரசவாதம் புரிவது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையே! எல்லை மீறிடாத வண்ணம் கவனமாக இருந்துள்ள இயக்குநரின் சாமர்த்தியமும் பிரமிக்க வைக்கிறது. சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே பாதி வெற்றி கிடைத்துவிடும் என்பதற்கு இப்படம் நல்லதொரு உதாரணம். குறிப்பாக, சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருக்கும் அவரது மகள் நியாதி சேத்தன், அச்சு அசலாகத் தேவதர்ஷினியை வார்த்தெடுத்துள்ளது போலவே உள்ளார்.

‘நீ ஆம்பள நாட்டுக்கட்ட’ என த்ரிஷா சொல்லும்பொழுது, விஜய் சேதுபதியின் வசீகரமான கலையான முக பாவனைகள் மிகவும் அழகாய் உள்ளது. வாய்ஸ் மாடுலேஷனாலும், முகத்தில் தரும் ரியாக்‌ஷன்களாலுமே எந்தவொரு காட்சியையும் அழகாக்கி விடுகிறார். ஆனால் அவரது உடல்மொழியும் நடையும் தான், பாண்டியன், சேதுபதி, கதிர், மைக்கேல், தர்மதுரை, வேதா, கருப்பன், ஜுங்கா போன்று எல்லாப் பாத்திரங்களிலும் ஒரே போலவே உள்ளது. த்ரிஷா, நிறைவேறாத தன் காதலுக்கு ஒரு கற்பனை வடிவம் கொடுக்கும்பொழுது, ‘ராம் சிங்கம் போல் என்னைப் பார்க்க வந்தான்’ எனும் பொழுது, ஆதித்யா தன் நடையில் ஒரு கம்பீரத்தைக் காட்டி அசத்தியிருப்பார். நாயகன்களை நடக்க வைத்து அழகு பார்க்கும் அமீரின் படத்தில் நடித்தால் விஜய் சேதுபதி என்ன செய்வார் என்று தேவையில்லாத யோசனை எட்டிப் பார்க்கிறது? இடைவேளைக்குக் கொஞ்சம் முன் தான் திரையில் அறிமுகம் ஆகிறார் த்ரிஷா. கரடு முரடாய் சால்ட் & பெப்பரில் இருக்கும் விஜய் சேதுபதி பக்கத்தில், த்ரிஷா இளமையாக அழகாக செம க்யூட்டாக மிளிர்கிறார். ஹோட்டல் விட்டு வெளியில் வந்ததும் காரை நோக்கிப் போகும் விஜய் சேதுபதியைப் பார்வையாலேயே தடுத்து, நடந்து வரும்படி சைகை செய்வதென த்ரிஷா தன் பாத்திரத்தை மிக நிறைவாகச் செய்துள்ளார்.

இயக்குநர் C.ப்ரேம் குமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் கதை. அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருப்பார். அவரும் ஒளிப்பதிவார் என்பதாலோ என்னவோ, ஷாட்களை எல்லாம் மிக ரசனையாக வைத்துள்ளார். ‘கரை வந்த பிறகே’ என்ற கார்த்திக் நேத்தாவின் வரிகளில், “லைஃப் ஆஃப் ராம்” பாடல் காட்சிகளை மிக மிக அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சண்முகசுந்தரம். இப்படத்தைக் கண்ணை மூடியும் ரசிக்கலாம், இசையை ம்யூட் செய்தும் ரசிக்கலாம் எனச் சொல்லுமளவு எல்லா அம்சத்தையும் தனித்தனியாக ரசிக்கும்படியாகப் படத்தை மிகவும் அற்புதமாக எடுத்துள்ளனர்.

படம் முடிந்து வெளியே வரும் பொழுது, வயது குறைந்து, சின்ன சிரிப்பைக் கண்ணில் அடக்கி, ஒரு மென்சோகம் மனதில் பரவ, மனம் பதின்மத்தில் ஏதோ ஒரு புள்ளியில் சுற்றிக் கொண்டிருக்கும்.

1 Comment

Comments are closed.