Shadow

“பாரதிராஜாவும் வடிவுக்கரசியும்” – நடிகர் நட்டி | நிறம் மாறும் உலகில்

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் சாண்டி மாஸ்டர், ”இங்கு வருகை தந்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் நடிப்பில் ஜாம்பவான்கள். நான் மட்டும்தான் நடிப்பைப் பொறுத்தவரை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கலைஞர். கொரோனா காலகட்டத்தின் போது தான் நடிகர் மைம் கோபி எனக்கு நடிப்புப் பயிற்சியை வழங்கினார். அவர் வழங்கிய சின்ன சின்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன விதமும், கதையும் நன்றாக இருந்தது. ஏனெனில் ‘லியோ’விற்கு பிறகு என்னைத் தொடர்பு கொள்ளும் இயக்குநர்கள் அனைவரும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் அணுகினார்கள். அதனால் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டேன். இந்தப் படத்தின் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. ‘எனக்குப் பாடல் இருக்கிறதா?’ எனக் கேட்டேன். ‘இருக்கிறது’ என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். இந்தப் படத்தில் நடிகை ஐரா கிருஷ்ணன் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகர் ரியோ ராஜ், ”நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராகப் போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதிச் சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும், என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை, இந்தப் படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன்.

நானும், சாண்டி மாஸ்டரும் எப்போதும் ஜாலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம். அது இந்த படத்தில் சாத்தியமாகி இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்றுவோம்” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ், ”அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையைச் சொல்வார்கள். கதையைக் கேட்டு விட்டு, ‘இரண்டு நாள் கழித்து சொல்கிறேன்’ என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய காட்சியிலும் இயக்குநர் தன் தனித்திறமையைக் காண்பித்து இருக்கிறார்.

நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்குப் பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்குச் சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். அவருக்கும் இந்தத் தருணத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.