Shadow

“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration

ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை (AASNS – Asian Australasian Neurosurgery) கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் டாக்டர் B. ராமமூர்த்தி சொற்பொழிவில், முன்னாள் ஆளுநரும், இராஜதந்திரியும், சிறந்த நிர்வாகியுமான திரு. கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வு, 23 ஃபிப்ரவரி 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது.

காவேரி மருத்துவமனையின் வழிகாட்டியும், நரம்பியல் இயக்குநரும் மருத்துவருமான கிரிஷ் ஸ்ரீதர், “டாக்டர் B. ராமமூர்த்தி இந்தியாவின் முன்னோடி நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், இந்திய நரம்பியல் சங்கம் (NSI – Neurological Society of India) & ஆசிய – ஆஸ்திரலேசியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினராவர். அவர் குருவாகவும், வழிகாட்டியாகவும், நண்பராகவும் பலருக்கு வழிகாட்டியுள்ளார்” என்றார். மேலும், ‘கோபத்தின் தந்திரமான வழி (The Wily way of Anger)’ எனும் தலைப்பில் பேசிய திரு. கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் பற்றி அறிமுகம் செய்து சொற்பொழிவாற்ற வரவேற்றார்.

திரு. கோபால்கிருஷ்ண காந்தி, “நாம் ஐந்து பேரிடம் பொய் சொல்லக் கூடாது. அம்மா, மனைவி, ஆடிட்டர், வக்கீல், மருத்துவர் ஆகியாரோ அந்த ஐந்து நபர்கள். இவர்களிடம் பொய் சொன்னால், நாம் ஏதோ ஒரு கணத்தில் அவர்களிடம் சிக்கிக் கோள்வோம். மருத்துவர்கள் குழ்மியுள்ள இந்த அரங்கில், நான் உண்மையையே பேசப் போகிறேன். இல்லையென்றால் நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள். கோபம் மூன்று வகைப்படும். அம்மூன்றோடு கூடுதலாக ஒரு கோபம் உள்ளது. அது நம் மீதே நமக்கு எழும் சுயத்தின் மீதான கோபம். முதல் வகை கோபம், தனிநபர் கோபம் அல்லது தனிப்பட்ட கோபமாகும். அடுத்து, கூட்டுக் கோபம். கடைசி வகை வன்மத்தால் எழும் கோபம் அல்லது பழிவாங்குதல் வகை கோபம். கோபத்தைத் திருப்பி அளித்தல் இவ்வகையைச் சேரும்.

வள்ளுவர் சொல்கிறார், வழுக்கி விழுதலிலே மிக மோசமானது, நம் உதட்டில் இருந்து வார்த்தைகளை விடுவதுதான். நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கும் பொழுது, அநு முதன்மை அதிகாரியாக இருந்தவர், மிகவும் மோசமாக நடந்து கொள்ளும் இயல்புடியவர். அம்மா, சகோதரியின் பிறப்புறுப்பைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு மண்டேலாவைத் திட்டுகிறார். மண்டேலாவிற்கு சினம் மூண்டு அடிப்பதற்குத் தயாராகிவிடுகிறார். அதை உணரும் சிறை அதிகாரில், காரில் ஏறிக் கிளம்பிவிடுகிறார். மண்டேலா கோபவயப்பட்டு அடித்திருந்தால், அவரது சிறைவாசம் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கும். கோபம் குறைந்ததும், ‘அந்த அதிகாரி கெட்டவன் இல்லை. சூழ்நிலைகளின் கைதியாக இருக்கான்’ என மண்டேலா உணர்ந்ததாகச் சொல்கிறார்.

கோபத்தால், சில சமயம் பலன்களும் உண்டு. வள்ளுவருக்குப் பெரும்கோபம் வருகிறது. அவரது 1062 ஆவது குறளில் அதைச் சொல்லியிருப்பார். ‘பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற சிலருக்கு நிலை ஏற்படுமாயின், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடட்டும்’ என்கிறார். அநீதியைக் காணும்போது இப்படியான கோபம் புரட்சியாளர்களுக்கு ஏற்படும். இது நல்ல கோபமாகும். கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் பட்சத்தில், நல்ல கோபத்தை உபயோகித்து பல அதிசயங்களை உண்டு பண்ணமுடியும்” என்றார்.

AASNS-இன் சர்வதேச சந்திப்பில், 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20க்கும் மேற்பட்ட சர்வதேச ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர். தலை மற்றும் முதுகுத்தண்டு காயம், முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை மற்றும் மூளைக் கட்டி அறுவைச் சிகிச்சை குறித்த ஆலோசனைகள் 2 நாட்கள் நடந்தன. இச்சந்திப்பில், இளம் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு இருந்தது.

AASNS கல்விக் குழுவின் துணை தலைவரும், NSI இன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர், “எந்தவொரு நரம்பியல் அறுவைச் சிகிச்சை சமூகத்திற்கும் கல்வி எப்போதும் ஒரு முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. மூத்த மற்றும் திறன் வாய்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் அனுபவமும் நிபுணத்துவமும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது முக்கியம். டாக்டர் ராமமூர்த்தி இளம் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் கல்வி மற்றும் வழிகாட்டுதலுக்கு முன்மாதிரியாக இருந்தார். இத்தகைய கல்வித் திட்டத்தின் பின்னணியில் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது மிகப் பொருத்தமானது” என்றார்.