Shadow

நிறம் மாறும் உலகில் – பாரதிராஜாவின் ஆசிர்வாதம் | இயக்குநர் பிரிட்டோ

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பிரிட்டோ, ”இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்தக் கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவைப் பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும்.

எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமாக பாரதிராஜாவைச் சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு மனதார பாராட்டினார். ‘வயதான தம்பதிகளைக் கதையின் நாயகனாகவும் நாயகியாகவும் உருவாக்கிக் கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய்’ என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்தப் படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்டி நட்ராஜ் இந்தப் படத்திற்காக பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். மும்பையைப் பின்னணியாக கொண்ட பகுதியில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தைப் பற்றி நான் இப்போது முழுமையாக விவரிக்க இயலாது. நான் கேட்டுக் கொண்டதற்காகவே முன்னோட்டத்திற்குப் பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். ரியோ என் நண்பன். அவருடன் இன்றும் இணைந்து பயணிக்கிறேன். ‘லியோ’விற்குப் பிறகு சாண்டி மாஸ்டரை இந்தத் திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக காண்பீர்கள். உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்தப் படத்தை ரசிகர்களிடம் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியைத் தேர்வு செய்தோம்” என்றார்.