“எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்தப் படிப்பைக் கற்ற நிபுணர்கள் தான் இருக்கணும், இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் இன்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி ட்ரேடிங்கில் இருக்கிறேன்” எனும் கணேஷ் தேசிங், விருதுநகரைச் சேர்ந்த ஓர் அக்மார்க் தமிழர்.
பார்ப்பதற்குத் தேர்ந்த கதாநாயகன் லுக்கில் இருக்கும் இவர் சினிமாவில் வைத்திருக்கும் முதல் படி நடிகராக அல்ல தயாரிப்பாளராக. மிகச் சிறப்பான கதையம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மலையாள சினிமாவில், ‘பீஸ்’ என்ற படத்தில் இணை தயாரிப்பாளராகப் பங்கெடுத்துள்ளார் கணேஷ் தேசிங். இப்படத்தில் ஜோதி ஜார்ஜ் நடித்துள்ளார். இவர், சிறந்த நடிப்பிற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஷன்பீர் இயக்கியுள்ளார்.
கணேஷ் தேசிங், தன்னைப் பற்றியும், ‘பீஸ்’ படத்தைப் பற்றியும், “
“உதயா ஃபார்மா (Udhaya Pharama) என்ற ஃபார்மாசிட்டிக்கல்ஸ் கம்பெனியில் டைரக்டராக இருக்கிறேன். பிட்ரிக்ஸ் க்ளோபல் கார்ப் (Bitrix global Corp) என்று சொந்தமாக ஒரு கம்பெனியும் நடத்தி வருகிறேன். க்ரிப்டோ கரன்ஸி என்ற விசயம் இப்போது பெரிய டாபிக்காக வலம் வருகிறது. அதைப் பற்றிய விவாதங்களும் விசாரணைகளும் அதிகம் வந்துள்ள நிலையில் நிறையபேர் அது சம்பந்தமாக என்னைத் தொடர்பு கொள்கிறார்கள்.
நான் சினிமாவிற்கு வந்தது ஆதாயத்திற்காக மட்டும் அல்ல. ஆத்ம திருப்திக்காகவும் தான். திரைக்கலை மூலமாக நிறைய நல்லவற்றை நாம் விதைத்துச் செல்ல முடியும். அதனால் தான் படத்தயாரிப்பு என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன். நிறைய தகுதி வாய்ந்த படைப்பாளிகள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது. எப்போதுமே வேலை செய்வதை விட வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமுண்டு. அதனால் தான் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.டி. வேலைக்குச் செல்லாமல் வேலை கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறேன். சினிமாவில் திறமையானவர்களை அடையாளம் காட்டுவதன் மூலம் நிறைய பேரின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். மேலும் பணம் அதிகம் புழங்கும் சினிமாவில், பணம் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் நிறைய பெற்ற என்னால் சரியாக நிர்வாகம் செய்ய முடியுமென நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்கு உரம் போட்டு கரம் கொடுப்பது போல எங்களின் முதல்படமான பீஸ் வந்துள்ளது.
ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தமிழில் விஜய்சேதுபதியும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் ரக்ஷன் ஷெட்டியும் வெளியிட்டு வாழ்த்தினார்கள். மேலும் நடிகர் ஜெய் அவர்களும் போஸ்டரை வெளியிட்டுப் பாராட்டினார். எனக்கு நடிக்கும் ஆர்வம் முன்னமே இருந்தாலும் தற்போது தான் அதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறேன். மதராஸி எவென்ட்ஸ் (Madarase events) என்ற மாடலிங் கம்பெனியின் இணை நிறுவனராகவும் இருப்பதால் மாடலிங் துறையில் பெரிய பரீட்சயம் உண்டு. அந்த அனுபவமும் நடிப்பிற்கு பெரிதாக ஊக்கம் கொடுக்கிறது. அந்த ஊக்கம் பிரகாசமான வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
கொரோனா கோர தாண்டவமாடும் சமயத்தில், கணேஷ் தேசிங் போல் நாயகர்கள் தோன்றி, தொழில் நம்பிக்கையை விதைப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அவரை இருகரம் கூப்பி வரவேற்போம்.