Shadow

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார்.

Karnan---Udhayanidhiஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக ‘கொடியன்குளம் கலவரம்’ பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்துறை அதிகாரி கண்ணபிரான் எனும் சாதித்திமிர் பிடித்த தனி நபரின் ஈகோ சீண்டலாகச் சுருக்கியுள்ளனர் இணைய திமுகவினர். அதிமுகவினரால் கூட, தங்கள் தலைமை மீதான களங்கத்தை இப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்திருக்க முடியாது. உள்ளபடிக்கு அவர்களுக்கு அந்த அவசியமும் என்றும் நேர்ந்ததில்லை. ஆனால், ‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’ என்று நித்திரையைத் துறந்த இணைய திமுகவினரோ, அதிமுகவின் ஸ்லீப்பர் செல்களாக ஓவர் டைம் பார்த்துள்ளதுதான் துயரம்.

படைப்பு என்றால் என்ன, புனைவென்றால் என்ன, உருவகமென்றால் என்ன என போதிய ஞானமில்லாததால் வந்த விளைவென்ன? இது கொடியன்குளம் கலவரத்தைப் பற்றிய வரலாற்றுப்படம் என நம்பியதோடு அல்லாமல், அதை அழுத்தமாக சமூகவெளியில் பதிந்தும் விட்டனர். பொருளாதாரத்தில் முன்னேறிய கொடியன்குளமும், ஒருவனாவது தங்களது கிராமத்தை விட்டு வெளியேறிக் காலூன்றி விடமாட்டானா என ஏங்கும் பொடியன்குளமும் ஒன்றல்ல. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போலீஸோடு குண்டர்களும் சேர்ந்து சூறையாடப்பட்ட கொடியன்குளம் கிராமமும், போலீஸின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த பொடியன்குளமும் ஒன்றல்ல. காவல்துறையினர் கையெறி குண்டுகளை வீசி ஊரே சிதைக்கப்பட்ட கொடியன்குளம் கலவரமும், லத்தி மட்டுமே பயன்படுத்தப்பட்ட பொடியன்குளம் அத்துமீறலும் ஒன்றல்ல.

கர்ணன் படத்தில் வரும் பொடியன்குளம் என்பது தமிழ்நாடெங்கும் பாதிக்கப்பட்ட/ இன்றளவும் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்டவர்களின் குடியிருப்பிற்கான ஓர் உருவகம் மட்டுமே.

உருவகத்தைப் புரிந்து கொள்ளாமல், ‘வரலாறு, வரலாறு’ எனக் கூப்பாடு போட்டு, “கர்ணன் படத்தில் காட்டப்படுவதுதான் கொடியன்குளம் கலவரம். இது 95இல் தான் நடந்தது” என மலையோடு மடுவை முடிச்சுப் போட்டு, அதிமுகவின் அரசபயங்கரவாதத்தை மூடி மறைக்க உதவியுள்ளனர் இணைய திமுகவினர். சினிமாவில் வரலாற்றைத் தேடி, சினிமா தான் வரலாறு என நம்பி, அதிமுகவிற்கு வெண்சாமரம் வீசியுள்ளனர் திமுக அனுதாபிகள். இனி வரும் காலங்களில், புனைவுகள் எல்லாம் வரலாற்றைச் சரி பார்க்கும் அரசுத் துறையில் சான்றிதழ் பெறப்பட்ட பின் தான் வெளியிடப்பட வேண்டும் எனச் சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Karnan-sarcasm