
ஜனவரி 28 அன்று, பேராசிரியர் B.ராமமூர்த்தி மூன்றாவது சொற்பொழிவினை, அட்வான்ஸ்ட் நியூரோசயின்ஸ் ஃபெளண்டேஷன் ட்ரஸ்ட், MGM ஹெல்த்கேருடன் இணைந்து நிகழ்த்தியது. இதில் 200 நரம்பியல் வல்லுநர்கள் பங்கு கொண்டனர். “Preservation and reconstruction of facial nerve in neurosurgery” என்ற தலைப்பில் மருத்துவர் மத்ஜித் சமீ (Madjid Samii) பேசினார்.
1950 இல், அரசு பொது மருத்துவமனையில், நரம்பியல்துறைக்கெனத் தனிப் பிரிவை உருவாக்கியவர் பேராசிரியர் B.ராமமூர்த்தி. 1967 இல், Head injury ward என தலைக்காயங்களுக்காகத் தனிப் பிரிவைத் தொடங்கினார். ‘குரு சமர்ப்பனம்’ என்ற பெயரில் அவரது வாழ்வும் பணியும் பற்றி, மருத்துவர் K.ஸ்ரீதரால் தயாரிக்கப்பட்ட சிறப்புக் குறும்படமொன்று நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.
“நவீன கருவிகளால் மூளை அறுவைச்சிகிச்சை எளிமையாகி விட்டது என்றாலும், நான்கைந்து அடிப்படையான கருவிகளும், அறுவைச்சிகிச்சை செய்வதில் நல்ல திறனும் இருந்தாலே போதுமானது” என்றார் மருத்துவர் மத்ஜித் சமீ. மேலும், தொப்புற்கொடியின் குருத்தணுக்குளைச் (Stem Cells) சேமிக்கும் வழக்கம் மிகுகிறது என்றும், அதனால் சில மருத்துவர்கள் பணம் பார்க்கிறார்கள் என்றும், அப்படிச் சேமித்து வைப்பதால் பெரிய பலன்கள் உண்டென்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையென்றும் கூறினார். அவரது உரையைத் தொடர்ந்து, ‘Your Health Hand book on Brain Tumours’ எனும் புத்தகத்தை மருத்துவர் K.ஸ்ரீதர் வெளியிட்டார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advanced Neurosciences Foundation Trust-இன் நோக்கமே விழிப்புணர்வைப் பரப்புவதுதான். Head injury prevention and the Golden hour, Stroke prevention and management, The growing brain, Spine care, Brain tumour support group போன்ற தலைப்புகளில் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். “சிக்குபுக்கு” எனும் காமிக்ஸ் மூலம் குழந்தைகளிடமும் இத்தகைய விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் செய்து வருகிறது ANF ட்ரஸ்ட்.