Shadow

நிமிர் விமர்சனம்

Nimir movie review

எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல், அமைதியாய்த் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவனுக்கு எதிர்பாராமல் விழும் அடியை விடப் பெருத்த அவமானம் வேறேதும் இல்லை. அப்படியான அவமானத்துக்குக் காரணமாக இருக்கக் கூடிய மூலத்தை வேரறுத்தாலொழிய நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் அவனுக்குச் சொந்தமாகாது. நேர்ந்த அவமானத்துக்கு நிகராத்க தேர்ந்த பதிலடி கொடுத்து நிமிரும் செல்வனின் கதை ‘நிமிர்’.

தென்காசி வட்டாரத்தில் (தமிழ் சினிமாவையே ‘வட்டார சினிமா’ என்று சொல்லும் கமல்ஹாசனின் மொழி அல்ல இது), ஆத்மார்த்தமான ஒளிப்படக்கூடக் கலைஞர் நேஷ்னல் சண்முகத்தின் (மகேந்திரன்) மகன், செல்வம் (உதயநிதி) ஆத்மார்த்தமற்று புகைப்படக் கலையைக் கொண்டு வருமானம் ஈட்டுமொரு பணியைக் கடமைக்காகச் செய்து வருகிறான். ஆனால் அதே செல்வம் (உதயநிதி) பால்யத்தில் முளைத்த காதலொன்றைக் கடமை தவறாது ஆத்மார்த்தமாக செய்து வருகிறான். பணியின் நிமித்தம் செல்வத்தின் காதலி செண்பகவள்ளி (பார்வதி நாயர்) வெளியூரில் இருக்க, ஊரில் சுப துக்க நிகழ்வுகளைப் படம் பிடித்து, தனக்கு அருகில் கடை வைத்திருக்கும் வயதான சதாவிடம் (எம்.எஸ்.பாஸ்கர்) கொடுத்து சட்டம் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறான். இதற்கிடையில் ஊரில் வெல்டராக இருக்கும் வெள்ளையப்பன் (சமுத்திரகனி) எனும் முரட்டு ஆளுடனான எதார்த்தமான கைகலப்பு ஒன்றில் எதிர்பாராமல் அடிவாங்கிவிடுகிறான். அந்த அடி பின்னாளில் அவனை நிமிர வைப்பதற்கான வாய்ப்பொன்றை உருவாக்கித் தரும் வரை, தான் கால்களில் ‘செருப்பு அணியப் போவதில்லை’ என்று கழட்டி எறிகிறான்.

சபதத்தை கேட்டு பலரும் அதிர்வடைய, மறுபக்கம் காதல் என்ற காரணத்தினாலேயே காதல் முறிகிறது. வெள்ளையப்பனை மீண்டும் அடிக்கப் புறப்பட்டு ஆரவாரக் கூட்டத்துடன் செல்ல, கிடைக்கும் பதிலோ, ‘வெளிநாடு சென்றுவிட்டான் வெள்ளையப்பன்’. பிறகென்ன ‘ஜென்மத்துக்கும் செல்வத்துக்குச் செருப்புக்கும் இனி தொடர்பில்லை’ என நண்பர்கள் நையாண்டி செய்ய, ‘அணியா செருப்புடனும்’, வெள்ளையப்பனை அடித்துவிட வேண்டும் என்று நெஞ்சில் கொண்ட ‘அணையா நெருப்புடனும்’ வெற்றுக்கால்களுடன் வெறுமையாகக் காலத்தைக் கடத்துகிறான் செல்வம். வெள்ளையப்பனை அடித்து வேதனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டி தற்காப்புக் கலையைத் தவறாமல் கற்றுவர, தவறிப்போய் தன் புகைப்படக் கூடத்துக்கு வரும் மலர்விழியின் (நமீதா புரொமோத்) மான்விழிக்குள் விழுகிறான். முதலில் படப்பதிவுக் கலை தனக்குக் கைவரவில்லை என்பதை உணர்த்தும் மலரின் வார்த்தைகளால் செல்வம் தன்னைத் தேடுகிறான், தந்தையின் சொற்களால் தன் கலையில் தன்னிறைவடைகிறான். செல்வத்தின் பின்புலத்தை அறியும் மலர்விழி, தான்தான் செல்வம் அடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் வெள்ளையப்பனின் தங்கை என்றும், தனக்கும் செல்வத்தின் மீது காதல் இருக்கிறது என்றும் செல்வத்தின் முன்னாள் காதலியை தான் நன்கு அறிவதாகவும் சொல்லி செல்வத்தின் ஒட்டுமொத்த வட்டத்துக்கும் மையப்புள்ளி ஆகிறாள். இறுதியில் மலரின் வேண்டுதலின்படி செல்வம் தன் சபதத்தைக் கைவிடுகிறானா அல்லது காதலை கைவிடுகிறானா? அல்லது வெள்ளையப்பனை அடித்து கால்விட்ட செருப்பை மீண்டும் கரம் பிடிக்கிறானா? என்ற மானத்திமிரின் கதை நிமிர்.

வாழ்வியலைப் பற்றிய எதோ ஒரு புரிதலுடன் மெளனத்தை அசைபோட்டபடியே தனக்கான உலகத்தில் லயித்திருக்கும் செல்வத்தின் தந்தை சண்முகத்தைத் தவிர, ஆரவாரமில்லாமல் இருக்கும் செல்வம், தான் நினைத்தபடி வெகு இயல்பாக வலம் வரும் விகடகவி (கருணாகரன்), விகடகவி பெயர் வாயில் நுழையவில்லை என்றதும் அதை விடு என்று சொல்லும்- வாய்மொழியாய் ‘ரங்கநாதன் இன்னும் உயிரோட சும்மா தெம்போட இருக்காரே’ என்று சொன்னால் கூடத் துக்கமாகிவிடும் வாய் படைத்த சதா, என்ன ரகம் என்று காதலுனுக்கே புரிய வாய்ப்பளிக்காத செண்பகவள்ளி, முகத்தில் நவரசமும் கொப்பளிக்கும் மலர்விழி, பந்தாவாக வீண் பிரச்சனையில் தலையிட்டு- ‘நா யாரு பிரச்சனையிலும் தலையிடுறதில்ல’ என்று தன் அனுபவத்தைப் பார்வையாளருக்குக் கடத்தும் கோபி (அருள்தாஸ்), ‘பிக்பாஸ் பாப்பியா?’ என்று மனைவியை உதைக்கும் கஞ்சா கருப்பு (சதாவின் மைத்துனன்), ஒவ்வொரு முறையும் செல்வம் வெள்ளையப்பனை அடித்து விட மாட்டானா என்று ஆர்வமாக செல்லும் செருப்புக் கடைக்காரன் சுப்பிரமணி (ஜார்ஜ்), சதாவின் நெஞ்சுவலி நாடகத்தை உணர்ந்தவனாக சதாவுக்கு முதலுதவி என்ற பெயரில் மருத்துவம் செய்யும் காவல்துறை ஆய்வாளர் (சம்பத் ராம்), மாங்காயை திருடிக்கொண்டிருக்கும் மலரை, ‘என் அப்பாவி பொண்ணு’ என்று செல்வத்திடமும்- ‘எப்படியும் அவன் முழுசா சாப்பிட மாட்டான். வெச்சிடுவான்’ என்று விருந்தாளியின் உளவியலை மகள் மலரிடமும் சொல்லும் வெள்ளையப்பனின் அம்மா துளசி சிவமணி, ‘மனைவிக்காக ஒரு பேச்சு-தனக்காக ஒரு பேச்’சு என்று மாற்றி மாற்றிப் பேசி கோபியை மாட்டிட்டு ‘இன்னைக்கு சோறு உண்டா இல்லையா?’ என்று கேட்கும் வெளிநாட்டுவாழ் அண்ணாச்சி (இமான் அண்ணாச்சி), ஒட்டுமொத்த சிக்கலுக்கும் காரணமான ‘சிறு துரும்பாக வரும்’ ஆட்டோக்காரன் (செண்ராயன்), யதார்த்த புரிதலுடன் விகடகவியிடம் ‘கல்லூரிக்கு நேரமாச்சு’ என்று சொல்லிவிட்டு- விகடகவி செல்லும் அதே திரையரங்கத்துக்கு சென்று மாட்டிக் கொண்ட பின், ‘உத்து பாக்க வேணாம், இது நான்தான்’ என்று எப்போதும் அழகு காட்டி சிரிக்கும் சதாவின் மகள் என எத்தனை கதாபாத்திரங்கள். அத்தனையும் நேர்த்தியான வடிவத்துடன் இயக்குநரின் புனைவுவட்டத்துக்குள், எனினும் ஒருவித ஆழமற்ற போதாமையுடன் இயக்கம் பெற்று நிற்கின்றன.

‘இந்த உலகத்தில் எல்லாமே அழகுதான். இயற்கையின் படைப்பில் உருவான இந்த எல்லை கடந்த அழகினைக் காணும் பொருட்டு ஒளிப்படக்காரனுக்கு தனித்துவமான பார்வை இருத்தல் அவசியம். ஒரு நல்ல நிழற்படத்துக்கான ‘மொமண்ட்’ வருவதற்கு ஒரு நொடிக்கு முன்னர் தயாராகும் ஒளிப்படகாரன், அந்தத் தருணம் வரப்போவதை உணரும் கணம் கலைஞன் ஆகிறான்’ என்று சமுத்திரக்கனியின் வசனத்தை பேசும் சண்முகம் ‘மகேந்திரன்’- ‘அப்படின்னா?’ என்று கேட்கும் செல்வம் ‘உதயநிதி’ இருவருக்குமான பிணைப்பு தனித்துவமானது. ஒரு கணத்தில் அதை உணர்ந்து செல்வம் மலரை மறைந்திருந்து புகைப்படம் எடுத்து ‘மங்கை’ எனும் மலருக்கு (மாத இதழுக்கு) அனுப்பும் காட்சி உட்பட படம் முழுவதும் படப்பதிவில் அற்புதம் செய்கிறார் என்.கே.ஏகாம்பரம். படத்தொகுப்பாளர் அய்யப்பன் நாயரின் அளவான ‘வெட்டுகள்’ படத்தில் எவ்வித கீறலையும் உண்டாக்கவில்லை. அஜினீத் லோக்நாத் மற்றும் தர்புகா சிவா ஆகிய இருவரின் ‘இன்னிசையும் ரோனி ராஃபேலின் பின்னிசையும் கதைக்களத்துடன் கச்சிதமாக கைகோர்க்கின்றன. மனதில் பதியாவிட்டாலும் பாடல்கள் சூழலில் பதிகின்றன. தாமரையின் வரிகளில் ‘எப்போதும் உன்மேல்’ பாடல், ‘ரீதிகவுளை ராகத்தில்’ தர்புகா சிவாவின் இசையில் மோகன்ராஜ் வரிகளில் இதயத்தை வருடும் ‘கீதார கிளியே’ பாடல் என எல்லாமே மென்மை.

கதையையும் இயக்கத்தையும் கவனித்துக் கொண்ட பிரியதர்ஷன் கூடுமான வரையில் காட்சிகளை முழுமைப்படுத்தியுள்ளார். மலையாளப் படத்தின் தமிழ் மறுஉருவாக்கம் என்ற எண்ணத்தை வர விடாமல் பார்த்துக் கொள்ள மெனக்கெடுகிறார். செல்வத்தின் ஸ்டுடியோவுக்கு நேஷனல் ஸ்டூடியோ என்று பெயர் வைத்திருப்பதும், கஞ்சா கருப்புவின் நெல்லிக்கனிகள் தவறும்பொழுது தேசிய கீதம் ஒலிக்கும் பொருட்டு அவர் அசையாமல் நிற்பதுவும், வைதீக மரபுடன் சிலர் வருவதுமென தனது இந்திய தேசிய பார்வையை வலிந்து திணித்திருக்காமல் இருந்திருக்கலாம். அடுத்ததாக செருப்பு. தன் கெளரவம் பறி போனதால் செருப்பணியப் போவதில்லை என்னும் ஒரு முடிவு, ஒரு பெருத்த முடிவாக நமக்குள் வீரியமிக்க ஒன்றாக பதிவாகவில்லை. ‘என்னை அவமதித்த அவன் வீட்டில் இனி கை நனைக்கப் போவதில்லை, என் சபதம் நிறைவேறும் வரை கூந்தலை அள்ளி முடிந்துகொள்ள போவதில்லை’ என்பன போன்ற ‘தன்மானக் குறியீடாக’ தமிழ் நிலத்தில் வாழும் செல்வத்தின் செருப்பைப் பதிய வைப்பதில் பற்றாக்குறையைச் சந்திக்கிறார் ப்ரியதர்ஷன். ஏனோ பாத்திர பிம்பங்களுக்கு உயிர்த்தன்மையை ஊட்டுவதில் சிரமப்படுகிறார். நாயகன் செல்வத்துக்கு நேரும் அவமானமும் அவன் எண்ணவோட்டமும் காட்சிகள் மற்றும் வசனங்களின் இறுக்கத்தாலொழிய, வேறு உணர்வுத் ததும்பல்களால் கடத்தப்படவில்லை. செல்வத்தின் அப்பா சண்முகத்தின் (மகேந்திரன்) கலாபூர்வ மனோநிலைக்கு பதில் கடந்த கால குற்றவுணர்ச்சி போன்றவொன்று வெளிப்படுகிறது. ‘அடித்தவனை திருப்பி அடிக்கும் வரை அணியப்பவதில்லை காலணியை’ என்னும் ஒற்றை வரிக்குள் முரண் இருந்தாலும், பார்வையாளருக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் முரணியக்கத்தை படம் முழுவதும் கோரித் தவிக்கிறது. காட்சிகளினூடே தைக்கப்பட்ட கதையால் கதாபாத்திரங்களின் தாங்குதிறன்களால் சந்தோஷ் T.குருவிலாவின் தயாரிப்பில் ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான இப்படம் ‘நிமிர்’கிறது .

– சிவசங்கர்