‘டார்கெஸ்ட் ஹவர் (Darkest Hour)’ என்பது இரண்டாம் உலகப் போர் உருவாக்கிய நெருக்கடியைக் குறித்துச் சொல்ல வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய பதம்.
நெவில் சேம்பர்லைன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக அறிவிக்கப்படுகிறார். ஏன் சர்ச்சில் என்று விருப்பமின்றி அரசர் ஜார்ஜ் VI வினவ, ஹிட்லர் பற்றிய அவரது யூகம் சரியாக இருந்ததென அவருக்குச் சொல்லப்படுகிறது. டன்கிர்க்கில் சுமார் 3 லட்சம் பிரிட்டிஷ் வீரர்கள் ஜெர்மனியரால் சூழப்பட, அவரது கட்சி உறுப்பினரோ ஹிட்லருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கிறார். அத்தகைய குழப்பமான இருண்ட காலகட்டத்தைச் சர்ச்சில் எப்படி அணுகினார் என்பதே படத்தின் கதை.
படத்தின் முதல் ஃப்ரேமிலேயே அசரடிக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரூனோ டெல்பொன்னெல் (Bruno Delbonnel). அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்களின் ரூஸ்வெல்ட்டிடம் சர்ச்சில் ஃபோனில் பேசும் காட்சியில் அதி அற்புதமான ஃப்ரேமை வைத்திருப்பார் ப்ரூனோ. ஒளிப்பதிவில் விளையாடுவது என்றால் என்னவென்று இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளிக் கலவை, பீரியட் ஃப்லிம் பார்க்கிறோம் என்ற மனநிலையை ஒரு கணம் கூட மாறாமல் பார்த்துக் கொள்கிறது. படத்தின் டோன், மங்கிய ஒளிக் கலவையை மீறி, டார்கெஸ்ட் ஹவரைப் பார்வையாளர்களுக்கும் கடத்தி விடுகிறது.
டாரியோ மரியனெல்லியின் (Dario Marianelli) இசை மனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிக்க உதவியுள்ளது. படத்தின் அரசியல் புரியாவிட்டாலும் பாதகமில்லை. ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் உங்களைப் படத்திற்குள் இழுத்துக் கொள்வார்கள்.
சர்ச்சிலாக நடித்து பல விருதுகளைக் குவித்துக் கொண்டுள்ளார் கேரி ஓல்ட்மேன் (Gary Oldman). இது சர்ச்சில் எனும் ஒன் மேனைப் பற்றிய படமென்பதால், எல்லாப் புகழையும் தன்னகத்தே எடுத்துக் கொள்கிறார் கேரி ஓல்ட்மேன். சர்ச்சிலும், அரசர் ஜார்ஜ் VI -உம் சந்தித்துக் கொள்ளும் மூன்று காட்சிகளுமே அதகளம். சர்ச்சிலாகக் கேரி ஓல்ட்மேனின் உடல்மொழி அட்டகாசம்.
க்ளைமேக்ஸில் தனது உரையை முடித்துவிட்டு அவர் வெளியேறும் காட்சி செம மாஸ். ட்ரெயினில் மக்களோடு பேசுவதாகக் காட்டப்படும் காட்சி கற்பனை தான் என்றாலும், மக்களிடம் பிரதமர் உரையாடினால் ஏற்படும் பரவசத்தை அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளதுதான் இயக்குநர் ஜோ ரைட்டின் வெற்றி.