Shadow

பத்மாவதியின் காவியமும்; நெருப்பில் வெந்த திரையும்!

Padmaavat review

பல தடைகளைக் கண்டு எதிர்ப்புகளைச் சம்பாதித்துத் தனக்காகக் காத்திருந்த திரையை அடைந்திருக்கிறாள் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே (பத்மாவதி), ரன்வீர் சிங் (சுல்தான் அலாவுதீன் கில்ஜி), ஷாகித் கபூர் (ராவல் ரத்தன் சிங்) மற்றும் பலர் நடித்துள்ள இந்தி மற்றும் தமிழின் மொழிமாற்று வடிவமான ‘பத்மாவதி’ ‘பத்மாவத்’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது. ‘பத்மாவத்’ என்று பெயர் மாற்றினால் சிக்கல்கள் சரியாகிவிடுமா என்பதை விமர்சிக்கும் வகையில் கோலிவுட் நடிகர் சித்தார்த், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கண்ணாடியைத் திருப்பினால் எப்படிப்பா ஆட்டோ ஓடும்?’ என்று கேட்டிருந்ததெல்லாம் ஒருபக்கம் இருக்க, ‘எப்படி இருக்கிறாள் பத்மாவதி?’ என்கிற ஆர்வம் மறுபக்கம் உந்தித் தள்ளுகிறதல்லவா? முதலில் கதை என்ன? எதற்காக இந்தியத் தேசம் முழுக்க இத்தனை சிக்கல்கள் இந்த பத்மாவதியால்? என்கிற கேள்விகளுக்கல்லாம் தக்க பதில்களுடன் வந்திருக்கிறாள் பத்மாவத் எனும் பத்மாவதி.

ராஜபுத்திர மன்னர் ராவல் ரத்தன் சிங் என்று விளங்கப்பட்ட ரத்ன சிம்மாவின் வெண்கொடைக்குக் கீழ், இருந்தது மேவார் சாம்ராஜ்ஜியம். இந்த மேவார் சாம்ராஜ்ஜியத்தின் கீழ்வரும் சித்தோடு அல்லது சித்தோர்கார் கோட்டையை திறம்பட ஆண்டு வரும் ராஜா ரத்தன் சிங் அழகு பத்மாவதியினை மணந்து தன் கோட்டைக்கும் ராணியாக்குகிறார். ராஜபுத்திர மன்னர்களுக்கேயுரிய போர்நெறி, நெற்றித் திலகம், அறம், கொடை, வீரம், தயை, தாம்பத்தியம் என்று ரத்தன் சிங்கும் ராணி பத்மாவதியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மற்றொரு புறம் முகலாய ஜலாலுதீன் முகமது கில்ஜியைக் கொன்று தன் தளபதி மாலிக் கபூருடன் இணைந்து பலதரப்பட்ட நிலவளங்களை கைப்பற்றி அடக்கமற்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அலாவுதீன் கில்ஜி. இந்நிலையில் ராஜா ரத்தன் சிங்கின் அரசவைக் குருவாக இருக்கும் பிராமணர் ரத்தன் சிங்கின் அந்தரங்கத்தை நுகர, ராணி பத்மாவதியின் கோப வார்த்தைகளின்படியும், ராஜா ரத்தன் சிங்கின் உத்தரவின்படியும் நாடுகடத்தப்படுகிறார் பிராமணர். வஞ்சக நரியின் போர்வையில் குறி வைத்துத் தாக்கக் காத்திருக்கும் பிராமணரின் குழலிசை சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் காதுகளில் இனிமை வார்க்கிறது. கில்ஜி, பிராமணரை அடைந்து பத்மாவதியின் அழகுத் தோற்றத்தைக் கேட்டு வியந்து அவளை அடையத் துடித்து, சித்தோடுக்கு படையெடுத்துப் பறக்கிறார். ஆனால் ராஜா ரத்தன் சிங்கின் கோட்டையின் வலிமையை அறிந்து புரிந்த பின்பு, சூழ்ச்சியால் சமாதானக் கொடி பறக்கவிட்டு, ரத்தன் சிங்கைச் சந்திக்கிறார். ராணி பத்மாவதியைக் காண நினைத்தவருக்கு பத்மாவதியின் பிம்பத்தோற்றம் மட்டுமே காணக் கிடைக்கிறது. வெறுப்பான கில்ஜி, ரத்தன் சிங்கை நாடு கடத்திக் கொண்டு தில்லி செல்ல, பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு ராணி பத்மாவதி சில நிபந்தனைகளுடன் தில்லி வருவதாக கில்ஜிக்கு ஓலை அனுப்புகிறாள். இவ்விடம் ராணி பத்மாவதியின் எண்ணம் ரத்தன் சிங்கை ரகசியமாக மீட்டு வரும் யுத்தியுடன் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதே தவிர, ராணி விருப்பப்பட்டுக் கில்ஜியை காணவோ, அல்லது கில்ஜியின் விருப்பத்துக்கு இணங்கவோ அவர் சம்மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது (பத்மாவதியின் படப் பிரச்சனைக்கு காரணமான இடம்).

800 படைவீரர்கள் பணிப்பெண்கள் வேடத்தில், பல்லக்கில் சென்று தில்லியில் இருக்கும் ராவன் ரத்தன் சிங்கை இரவோடு இரவாக மீட்டுக்கொண்டு வரும் ராணி பத்மாவதிக்கு உதவி, சிலர் வீரமரணமும் அடைகின்றனர். எனினும் ராஜபுத்திர நெறியுடன் ரத்தன் சிங் அலாவுதீன் கில்ஜியை சந்தித்து முறைப்படி போர் தொடுக்கச் சொல்லி அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து கோட்டைக்கு வருகிறார். பத்மாவாதியும்தான். அந்த வீரமங்கையைக் கவர கள்வன் கில்ஜி மீண்டும் போர் தொடுத்து வர, பல உயிர்கள் அழிவதை விரும்பாத ரத்தன் சிங் கில்ஜியுடன் நேருக்கு நேர் போரிட்டுக் கில்ஜியை வீழ்த்துகிறான். எனினும் மாலிக் கபூரின் சதியால் புறமுதுகில் அம்பு பாய்ந்து இறக்கிறான். அடுத்தென்ன? ராணியைத் தேடி கோட்டைக்குள் ஏறும் கில்ஜிக்கு வரலாறு கொடுத்த பெருத்த அடிதான் ராஜபுத்திர பெண்களின் மானச்செயல். ஆம், ராணி பத்மாவதி உட்பட 75 ஆயிரம் பெண்கள் கோட்டைக்குள் தீ வைத்து சதி எனும் உடன் கட்டை எறி உயிர் நீத்த மாண்புமிக்க பெண்களின் மகத்தான கதை `பத்மாவத்` எனும் பத்மாவதி.

வரலாற்று ஓவியமாக பத்மாவதியைத் தீட்டியிருக்கிறார் இயக்குனர். சஞ்சித் பலஹாரா மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் இரைச்சல் இல்லாத இன்னிசையும் பின்னிசையும் படத்துக்குப் பக்கவாட்டில் பலமான தூணாக நிற்கின்றன. சித்தோர் கோட்டையையும், கில்ஜியின் புதுமுறை போர்க் கருவிகளையும், ஆடைகளையும் வடிவமைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்திப் படத்துக்கே உண்டான தனித்திரைமொழிக்கு உதவும் வகையில் பணிபுரிந்துள்ளனர். ராஜ்புத்திர மன்னர்களின், `பிராமணனை வதம் செய்வது எம் கொள்கைக்கு எதிரானது. நெறிப்படி போர் செய்திருக்கலாமே? எப்போதெல்லாம் அறப்பிறழ்ச்சி நிகழ்கிறதோ? அப்போதெல்லாம் ராஜபுத்திர வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து காத்துள்ளனர், இந்து தர்மம் என்பது அறத்தினைக் காப்பதற்காக இருத்தல் அவசியம்` என்று ரத்தன் சிங் பேசும்பொழுதும் சரி, `கண்ணீர் என்பது சுக துக்கங்களின் எல்லைக்கோடு`, `போர் என்பது உயிர்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் வதம்` என்று தத்துவார்த்தமான பார்வையில் பேசிவிட்டு, `கோட்டைக்கு வெளியே மன்னர் செய்வது மட்டுமல்ல கோட்டைக்குள் அடைந்து கொண்டிருக்கும் மாதர் செய்வதும் போர்தான்` என்று இறுதிக்காட்சிகளில் முழங்கும்போது ராணி பத்மாவதியின் ஆளுமையும் சரி செறிவாக வந்துள்ளன.

`வடக்கு ஆசியாவில் செங்கிஸ்கானுக்கு இணையாக தெற்காசியாவில் கில்ஜிதான்` என்று சொல்லுமளவுக்கு அக்கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்துள்ளார் ரன்வீர் சிங் (சுல்தான் அலாவுதீன் கில்ஜி). பிராமண ராஜ குருவைப் பார்த்து `இங்கு வா, உனக்கு சுன்னத் செய்கிறேன்` என்று கிண்டலடிக்கும் போதும், ராணி பத்மாவதியின் நிபந்தனைகளுள் ஒன்றான `ராஜகுருவின் தலையைக் கேட்கும்போது` சம்மதம் என்று சொல்லும்போதும், சோர்ந்து போன வீரர்களுக்கு இசுலாமிய தேசியக் கொடியைக் காட்டி தேசப் பற்றூட்டுவது போல் வஞ்சகமாகப் பேசும்போதும், அத்தனை ரசங்களையும் அள்ளித் தெளிக்கிறார். வசனங்களே இல்லையென்றாலும், கில்ஜியின் மொத்த குற்றவுணர்ச்சியையும் சேர்த்து தன் பார்வையில் பிரதிபலிக்கிறார் அதிதி ராவ் (மெர்ஹூனிசா). பண்பாடுமிக்க முகலாயர் ஷெர்ஷா, யமுனை நதிக்கரை தொடங்கிப் புராண கிலா என்ற இடம் வரை ஆட்சியை பிடித்து ஆண்டுகொண்டிருக்கும் வேளை அவைப்புலவராக இருந்த மாலிக் முஹமது ஜெயசி எனும் கவிஞர் 16ம் நூற்றாண்டில் `அவதி` மொழியில் எழுதிய பத்மாவத் எனும் இக்காவியம்தான் பன்சாலி இயக்கத்தில் படமாகியுள்ளது.

மற்றபடி கர்னி சேனா அமைப்பினர் உட்பட சில இந்துத்துவவாதிகளின் அனுமானத்தின்படி இல்லாமல், படம் தெளிவாகவும் நேர்த்தியாகவும் வரலாற்றுப் பிழையற்றுமே எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வரலாற்றாசிரியர்களின் ஆய்வுப்படி பத்மாவதியின் கதைப்புலம் பலவாறு மாறிவந்திருந்தாலும், பத்மாவதி தன் கணவர் ரத்தன் சிங் போருக்குச் செல்வதற்கு முன்பு, சிவலிங்கத்தைப் பிரார்த்தித்து `திரும்பி வராவிடின் உடன் கட்டை ஏறுவதற்கு அனுமதி வேண்டும்` என்று கேட்கும்போது, அரசநெறிக்குட்பட்டு முகத்தை மறைத்தபடி இருக்கும்போதும், கம்பீரமிக்க பெண்ணாகக் கணவனை வேற்று மத மன்னரிடம் இருந்து மீட்டெடுத்து வரும்போது உயர்ந்து நிற்கிறார். இறுதிக்காட்சியில் நெருப்புப் பொறி பறக்க அதில் சென்று வீழும்போது ராஜ்புத்திர மனோதர்மத்தை வரலாற்றில் பொறித்துவிட்டுச் செல்லும் கதாபாத்திரமாக தீபிகா படுகோன் சிறப்பாக நடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்துக்கான புனைவு வட்டத்தை இன்னும் சற்று இயக்குநர் பெரிதாக வரைந்திருக்கலாம் என்றே தொன்றுகிறது. அக்னியைத் தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரப் பெண்கள் அவ்வக்கினியின் குணத்தோடு வேற்று ஆடவர் தொடுகைக்கு உட்படாது, அக்கினிக்கே இரையாவதை மேலாகக் கருதிய புனிதத் தன்மையை இழக்காமல் நிற்கிறாள் பத்மாவத்.

ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகளில் வீரியம் குறைவாக இருப்பினும் கதைக்குள் இருக்கும் கனலே காட்சிகளைக் காப்பாற்றுகிறது. குறிப்பாக இக்கதையைப் பற்றியும், இக்கதையினால் சென்னை ஆல்பர்ட் திரையரங்கம் வரை, நெருப்பில் வெடித்த வன்முறைகளைப் பற்றியும் ஏதுமறியாத தமிழ் நிலத்து உள் சமூகத்தினரின் ஆழ்மனதில் எவ்வித சலனத்தையும் எற்படுத்த வழியில்லாத மொழிமாற்றுப் படமாகவே பத்மாவத் நின்றாலும், ரத்தன் சிங்கின் கன்னத்தில் மை வைத்து, தலையில் சொடுக்கி திருஷ்டி கழிக்கும்போது தமிழ்ப்பெண்ணாகக் காட்சியளிப்பது போன்ற காட்சிகளால் பத்மாவதியை தமிழ் சமூகம் அறிமுக-அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பிருக்கிறது. எனினும் ஒரு படம் வெளியாவதற்கு முன்னரே தவறான அனுமானம், புரிதல் இல்லாத தூண்டுதல்கள் பேரினாலான வன்முறைகளால் கொளுத்தப்பட்ட திரைகளின் சுவாலைகளைப் போலவே அறத்தை நிலைநாட்டை தன்னை அக்னிக்கு இரையாக்கியிருக்கும் பத்மாவதியைக் காண அந்தத் திரைகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்துவிட்டன, அவற்றைக் கொளுத்திய கரங்கள்!

– சிவசங்கர்