Shadow

நிர்வாகம் பொறுப்பல்ல – மோசடி பேர்வழிகளிடம் உஷார்

அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும் நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இவ்விழாவில் பேசிய நடிகர் பிளாக் பாண்டி, ”நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்குக் கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும், என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, என் மனைவி அவருடைய செல்ஃபோனுக்கு வந்த ஒரு லின்க்கைத் தவறுதலாகத் தொட்டுவிட, என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த அனைத்துப் பணமும் திருடப்பட்டிருந்தது.‌ எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதைப் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்-அப்பைப் பயன்படுத்துகிறார்கள். அதில் ஏபிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள்.‌ நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது” என்றார்.

தணிக்கைக் குழு உறுப்பினர் சௌதாமணி, ”நான் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர். தற்போது மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றுகிறேன். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு திரைப்படங்களைத் தணிக்கைச் சான்றிதழுக்காக பார்ப்போம். இந்த சமுதாயத்தில் புரையோடி இருக்கின்ற, அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை படக்குழுவினர் கையாண்டிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது தொடர்பாகத் தினந்தோறும் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிறது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், ட்ரேடிங் ஸ்கேம், முதலீடு தொடர்பான மோசடி என நாள்தோறும் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். நம் நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகராக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

தணிக்கைக் குழுவை பொருத்தவரை கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது, யாரையும் அவமதிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களைப் பற்றித் தவறாக பேசுவதோ சித்தரிப்பதோ கூடாது. எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்குப் படிப்பினையையும் விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்தப் படக்குழுவினரை மீண்டும் பாராட்டுகிறேன்” என்றார் .

இயக்குநர் கௌரவ் நாராயணன், ”முதலில் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு நன்றி. இந்த ஆண்டு தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் தென்னிந்திய பிரதிநிதியாகத் தமிழ்நாடு சார்பில் நான் இடம் பெற்றிருந்தேன். இந்த நடுவர் குழுவில் நான் தான் மிகவும் இளையவன். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கும் பட்டியலில் ‘பார்க்கிங்’ படத்துடன் வேறு சில படங்களும் போட்டியில் இருந்தன. இந்தத் தருணத்தில் கே. பாக்யராஜ் படங்களில் இடம் பிடித்திருக்கும் திரைக்கதை நுட்பங்களால் உந்தப்பட்ட நான் அவருடைய திரைக்கதை மேஜிக்கை உதாரணமாக பேசி தான் ‘பார்க்கிங்’ படம் தேசிய விருதுக்குத் தேர்வானது. எனவே ‘பார்க்கிங்’ படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் கே. பாக்யராஜ் இருக்கிறார். திரைக்கதை என்றால் தமிழ் சினிமா தான் நிகரற்றது. இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை போன்ற சில விஷயங்களைப் பேசிப் பரிந்துரைத்தேன்.

மோசடி குறித்து படம் இயக்குவது கடினம். ஏடிஎம் பண மோசடி குறித்து நான் முதன்முதலாக ‘சிகரம் தொடு’ படத்தை உருவாக்கினேன். ஒரே ஒரு விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு ஒரு நபர் 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் ‘சிகரம் தொடு’ படத்தை உருவாக்குவதற்கான இன்ஸ்பிரேஷன். இதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபரைச் சந்தித்து பல விஷயங்களைக் கேட்டு அந்தப் படத்தை உருவாக்கினேன். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர். இங்கு 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து அவர் அங்கு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டியிருந்தார்.

சம்பாதிப்பது கடினம், அதைச் செலவழிப்பது எளிது, அதைத் திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களைச் சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் இந்தப் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இன்று கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது” என்றார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, “இந்தப் படத்தில் மோசடி குறித்து பேசி இருக்கிறார்கள். இன்று அனைத்து துறையிலும் மோசடி இருக்கிறது. இதில் யார் அதிகம் ஏமாறுகிறார்கள் என்றால், படித்தவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும் பேராசை தான். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் என்னைத் தேடி வந்து பலரும் பத்து லட்சம் கட்டினோம் மோசடி செய்து விட்டார்கள் என்று புலம்புவார்கள், புகார் அளிப்பார்கள். நான் காவல்துறையில் புகார் அளிக்குமாறு பரிந்துரைப்பேன்.

நமக்கு எது தேவை என்பதை நன்றாகத் திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதைத் தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும். தமிழக மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். சிறப்பானவர்கள். இந்த படத்தை பார்த்து, எதிர்காலத்தில் எந்த மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநரும் நடிகருமான எஸ்.கார்த்தீஸ்வரன், ”எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்தப் படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் எனச் சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்திற்குப் பத்துப் பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்தப் படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாகச் சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்துச் சொல்லி இருக்கிறேன்” என்றர்.

இயக்குநர் கே. பாக்யராஜ், “மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாகப் பயன்படுத்தாமல் எதிர்மறையாகப் பயன்படுத்துகிறார்கள். நான் ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.

மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு. ‘இந்தப் படத்தின் கதை என்ன?’ என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. “நான் ஏமாற்றப்பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன்” என்றார். அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.‌ உண்மைச் சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.