Shadow

ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapaadanum review

திருமலை புரொடக்ஷன் தயாரிப்பில், சுகவனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ ஆகும். கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் ஓர் உலக சினிமாவாக உருவாகியுள்ளது இந்தப் படம்.

சிறுவயதில் கிணற்றில் விழுந்த தன் மகன் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார் நல்லபாடன். ஆனால் இரு பண்ணாடிகளின் அதிகார மோதலால் பல வருடங்களாக அந்த ஒண்டிமுனி கோவில் திருவிழா நடக்காமலே இருக்கிறது. காலம் உருண்டோட அந்த மகன் இளைஞனாகிப் படித்து முடித்து வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த நேர்ந்து விட்ட ஆட்டை ஒண்டிமுனிக்குப் படைப்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் அந்த ஆட்டை ஒண்டிமுனிக்கு படைத்தாரா, அந்தப் பண்ணாடிகள் மோதல் ஊரை எப்படி பாதிக்கிறது, திருவிழா நடந்ததா என்பதே மீதிக்கதை.

பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் ஓரிரு காட்சிகளில் வந்து போகும் நடிகர் ‘பரோட்டா’ முருகேசன் இந்தப் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்தில் நல்லபாடனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படம் முழுக்க வெறும் காலிலே காடு மேடுகளில் நடந்து, அந்தக் கிராமத்தானாகவே மனதில் பதிகிறார். அவரது மகனாக விஜயன். எளிய கிராமத்து வீட்டுப் பையனாக அப்படியே பொருத்தமாக இருக்கிறார். விஜயனின் சகோதரியாக சித்ரா. கிராமத்துப் பெண்களை அப்படியே பிரதிபலிக்கிறார். குடும்பத்துக்காக அப்பாவுக்காகப் பாசத்துடன் நிற்கும் மகளாக அவரது கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது. கார்த்திகேசன், முருகன், விஜய் சேனாபதி, கெளசிகா, தமிழினியன் விகடன் என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே, அச்சு அசல் கிராமத்து மனிதர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

ஜெ.டி. விமல் ஒளிப்பதிவு அந்த நிலப்பரப்பை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது. வறண்ட நிலப்பகுதியையும், அதில் கால் கடுக்க நடக்கும் மனிதர்களையும் மிக யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார். ‘மூடர்கூடம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் NTR என்ற பெயரோடு இசையமைத்துள்ளார். மிக எளிமையான கிராமத்து இசையை எந்த இரைச்சலும் இன்றி அழகாகத் தந்திருக்கிறார். இரண்டு மணி நேரத்துக்கு ஓடும் அளவுக்குக் கச்சிதமான படத்தைத் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் குரோசோவா.

இயக்குநர் சுகவனம் தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதி பின்னணியில் இதுவரை சொல்லப்படாத ஒரு கதையை மிக இயல்பாகச் சொல்லிப் பாராட்டைப் பெறுகிறார். கொங்கு வட்டார மக்களின் வாழ்வியில் முறை, சிறு தெய்வ வழிபாடு, கடவுள் நம்பிக்கை, நேர்த்திக் கடன் செலுத்துதல், கிடா விருந்தும் அதன் மீதான மக்களின் ஆர்வமும் என பல விஷயங்களையும் மிக நெருக்கமாகப் பேசுகிறது. பணக்காரர்களின் அதிகாரப் போட்டி, உழைப்புச் சுரண்டல் போன்றவற்றையும் அதிகாரம் செலுத்தும் நபர்கள் அதை எப்படி நயவஞ்சமாகச் செய்கிறார்கள் என்பதையும் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. வசனங்களும் அந்த வட்டார வழக்கில் இருப்பது இன்னும் நெருக்கத்தைத் தருகிறது. மொத்தத்தில் இயல்பாக நகரக்கூடிய உலகத்தரமான ஒரு படமாக உருவாகியுள்ளது ஒண்டிமுனியும் நல்லபாடனும் படம்.

– மாறன் செ