Shadow

சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

தமிழில் வெளிவரும் அமேசான் ப்ரைமின் முதல் வெப் சீரிஸ் இது. புஷ்கர் – காயத்ரி இணை எழுதிய இத்தொடரை, பிரம்மாவும் அனுசரணும் இயக்கியுள்ளனர். குற்றம் கடிதல், மகளிர் மட்டும் இயக்கிய பிரம்மா, முதல் நான்கு அத்தியாயங்களையும், கடைசி நான்கு அத்தியாயங்களை இயக்குநர் அனு சரணும் இயக்கியுள்ளனர்.

மலைகள் சூழ்ந்த சாம்பலூர் எனும் சின்ன ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவி நிலா கடத்தப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கும் சக்கரை எனும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திருப்பமாக அமைகிறது. சக்கரையாக மிகத் திறம்பட நடித்துள்ளார் கதிர். இந்தத் தொடரின் நாயகன் இவரே! சின்னச் சின்ன முக பாவனைகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸாக நடித்துள்ள ஷ்ரேயா ரெட்டி தான் தொடரின் நாயகி. இன்ஸ்பெக்டராக அவர் காட்டும் கம்பீரமும், ஓர் அம்மாவாக அவர் இளகும் இடமும் என கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

தொழிற்சங்கத் தலைவர் சண்முகமாக வருகிறார் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். தொடரின் மிகப் பிரதானமான பாத்திரம் என்றாலும், அவரைத் தேவைக்கேற்ப மட்டும் உபயோகித்து, அவரது பாணிக்குள் அவரைச் செல்லவிடாமல், சண்முகமாகவே கடைசி வரை இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளனர் இயக்குநர்கள். தொழிற்சங்கத் தலைவராக அவர் காட்டும் வேகத்தை விடவும், தந்தையாக நெகிழும் இடங்களில் அவரது நடிப்பு மிக நன்றாக உள்ளது.

எலியும் பூனையுமாக அடித்துக் கொள்ளும் ரெஜினா தாமஸுக்கும், சண்முகத்திற்கும் இடையேயான உறவில் இருந்தே படம் தொடங்குகிறது. காலம், அவர்களது வாரிசுகளின் ரூபத்தில் அவர்களை ஒன்றிணைக்கப் பார்க்கிறது. ஆனால், அதற்கும் முன்பாக மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் இணையும் ஒரு புள்ளிதான் படத்தின் ஆகப் பெரிய ட்விஸ்ட்.

விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியாகச் சாதித்ததை விட, இத்தொடரில், இன்ஷ்யூரன்ஸ் ஆஃபீஸ் சார்பில் தீ விபத்தைப் புலனாய்வு செய்யும் கோதண்டராமன் பாத்திரத்தில் அதிகமாகச் சாதிக்கிறார் சந்தானபாரதி. இடையிடையே மின்னி மறைவது போன்ற பாத்திரம் என்றாலும், அவர் கண்டுபிடிக்கும் உண்மையும், அதன் பின் அவர் எடுக்கும் நடவடிக்கையும், கோதண்டராமன் பாத்திரத்தைக் கிளாஸிக்காக மாற்றுகிறது. சந்தானபாரதியின் எபிஸோடில், இரண்டொரு சின்ன ஷாட்டில், சாம்பலூர் எனும் சின்ன கிராமத்திலும் நுழைந்து விடும் வடமாநில இளைஞர்களால் நம்மவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நுண்ணரசியலைப் போகிற போக்கில் சொல்லியுள்ளது சிறப்பு.

காணாமல் போகும் நிலாவாக கோபிகா ரமேஷ், அவரது சகோதரி நந்தினியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கதிருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் லக்‌ஷ்மியாக நிவேதிதா சதீஷ், நிலா – நந்தினியின் அம்மா தேவியாக இந்துமதி, நிலா – நந்தினியின் சித்தப்பா மனைவியாக லதா ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அழகான பின்னங்கதை இருந்தாலும், ஆசிரமவாசியாக மாறிவிடும் தேவி மட்டும் தனியாகத் தெளிவில்லாமல் தொக்கி நிற்கிறார்.

கதை நிகழும் காலக்கணக்கை அறிவிக்கும் விதமாக, பின்னணியில் மயான கொள்ளை திருவிழாவைக் காட்டுகின்றனர். கலை இயக்குநர் அருண் வெஞ்சுரமூடும், ஒளிப்பதிவாளர் முகேஷும் படம் மிளிரப் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளனர். சாம் CS, தனி ஆவர்த்தனமே புரிந்துள்ளார்.

நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியும் என்ற மாயையில் உழுலும் போக்கினைப் படம் துகிலுரித்துக் காட்டுகிறது. நம் கண் முன்பாகவே நிகழும் பலதும் நம் கவனத்திற்கு வருவதே இல்லை அல்லது நாம் கவனிப்பதே இல்லை. சமூகப் பழக்குமுறைக்கு (Social conditioning), நாம் எந்த அளவு அடிமையாகி இருக்கிறோம் என்ற முக்கியமான கேள்வியையும் இத்தொடர் முன்வைக்கிறது. இன்னார், இன்னின்னார் இப்படித்தான் என்ற காரணகாரியங்களற்ற முன்முடிவுகளை எடுக்க, கண்ணுக்குத் தெரியாக் கன்னியாக இருக்கும் சமூகப் பழக்கமுறையே அச்சாணியாக உள்ளது. அந்த அச்சாணியே, நம்மைப் பெரும்பாலும் அதன் போக்கிற்கு நம்மையும் சேர்த்து சுழற்றி ஒரு சுழலில் சிக்க வைக்கிறது. அச்சுழலிலிருந்து மீண்டு, கோதண்டராமனும் சக்கரவர்த்தியும் உண்மையை எப்படிக் கண்டடைகின்றனர் என சுவாரசியமாக முடிகிறது தொடர்.