Shadow

ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம்

Oru Iyakkunarin Kadhal Diary Movie Review

வேலுபிரபாகரனின் காதல் கதையையே கொஞ்சம் மாற்றங்களுடன் ஒரு இயக்குநரின் காதல் டைரியாக மாற்றிவிட்டார்.

பெண் ஆணின் உடைமை அல்ல; அப்படி ஆண்கள் நினைப்பதால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்து காணப்படுவதோடு, கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகமாக உள்ளது. “காதல்” என்பது பெண்களை அனுபவிக்கவும், அவர்களின் உடலைத் தெரிந்து கொள்ளவும், முதிரா இளம் ஆணின் மனம் கற்பித்துக் கொள்ளும் கற்பனை. அக்கற்பனையில் இருந்து ஆண்கள் மீள (பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தால் தேவலை என முந்தைய படத்தில் சொன்னவர்), சிற்பங்களில் ஓவியங்களில் திரைப்படங்களில் எனக் கலைகளில் பெண்ணின் நிர்வான உடம்பைப் பரவலாக பதின் பருவத்தினர்க்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன். அப்படிச் செய்வதன் மூலம், பெண்களின் உடல்கள் அறிமுகமாகி விடுவதால் அதன் பின் ஆராய ஆண்களுக்குத் தோன்றாது; பாலியல் கொடுமைகள் சமூகத்தை விட்டுப் போய் விடும் என்கிறார்.

ஆனால், அவரது ஒட்டுமொத்த கருத்தியலுமே சாத்தான் வேதம் ஓதிய கதையாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு, இந்த உவமையைப் பிரயோகிப்பதைப் புரட்சிகரப் (!??) படைப்பாளியான அவர் ரசிக்கமாட்டார். ஆகவே, பி.ஜே.பி. எச்.ராஜா பெரியாரிசத்தை வியந்தோதுவது போலுள்ளது படம் என மாற்றிக் கொள்ளலாம் (படைப்பாளிக்கு மரியாதை).

நிர்வானத்தைக் கலையில் கொண்டு வந்தாலே, அதைப் பார்க்கும் ஆணின் மனம் பாலியல் கொடுமைகள் புரியாது எனச் சொல்பவரின் படம் எப்படித் தெரியுமா தொடங்குகிறது? 60 வயது இயக்குநரான அவர் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கொடுக்கிறார். அவருக்கு பெண்ணுடல் முதல் முறையன்று. தேவையான அளவுக்கு 30 வருடங்கள் பல பெண்களின் உடலை ஆராய்ச்சி புரிந்தவரே! அவர் வீட்டுச் சுவர்களில் நிர்வானத்தை ஆராதிக்கும் கலை வடிவங்கள் தான் சுற்றிச் சுற்றியுள்ளது. ஏன் அவரே அப்படித்தான் படமும் எடுக்கிறார். ஆனாலும் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகச் சில்மிஷம் செய்து, காவல் நிலையத்தில் அவமானப்படுவதில் இருந்து படத்தைத் தொடங்குகிறார் சளைக்கச் சளைக்கக் காமத்தை அனுபவித்த மகானுபவர்.

என்ன இருந்தாலும், ‘ஊருக்குத்தான் உபதேசம்; தனக்கில்லை’ என்று பதிந்திருக்கும் அவரது நேர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

போன படத்தில், கற்புடைய பெண்கள் தான் அதிக சுகம் தருவார்கள் என அழுத்திச் சொல்லியிருப்பார். அதையே இப்படத்தில், இன்னொருவரிடம் வாழ்ந்தவளை மணந்த தன்னைச் “சமூகம்” இளக்காரமாகப் பார்த்ததால், அடுத்த கல்யாணத்திற்குக் கற்புடைய பெண்ணாகத் தேடினேன் என்கிறார் (இந்தச் சமூகம்தான் சார் அந்த அப்பாவி வேலுபிரபாகரனைக் கெடுத்துள்ளது). அந்தக் கற்புடைய பெண், முதல் மனைவியின் அண்ணன் மகளாம்!!

வேலுபிரபாகரனின் முதல் மனைவி விஜயாவாக, விஜயாவின் அண்ணன் மகள் பத்மாவாக, விஜயாவாகவும் பத்மாவாகவும் அவரது படத்தில் நடிக்கும் சுவாதியாகவும் நடித்துள்ள ‘பொன் சுவாதி’ பிரமாதப்படுத்தியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியதுடன், படம் நெடுகே வேலுபிரபாகரனின் கைப்பாவையாகத் துணிச்சலாகவும் ஒத்துழைத்துள்ளார். வேலுபிரபாகரனுக்கும் வசதியாகிவிட, கேமிரா கோணத்தை அங்கே இங்கே என இஷ்டத்திற்கு வைத்துள்ளார். இப்படித்தான் படமிருக்கும் என நம்பிச் செல்பவர்களைக் கடைசி ஃப்ரேமில் கூட ஏமாற்றவில்லை இயக்குநர்.

போன படம் போலவே, இப்படமும் அரை நிர்வான காட்சியிலிருந்தே தொடங்குகிறது. மருத்துவமனையில் ஒரு பெண் தாயாகும் கணத்தைக் காட்டி, அதிலிருந்து தன் சமூக அக்கறையை மடையவிழ்க்கிறார்.

பெரியாரின் வேடத்தில் வந்து கருத்துகள் சொல்வது, சொந்த முகத்துடன் கருத்துகளைப் பகிர்வது, வாழும் ஊரில் நடக்கும் கலவரத்தைப் பற்றிப் பேசுவது, புராணக் கதைகளைக் காட்டுவது, சுயசரிதத்தைப் பார்வையார்களிடம் சொல்வது, பழைய காதல்களை நினைவு கூர்வது, அதை நிஜத்தில் படமாக்குவது, அப்படத்தில் நடிக்கும் நாயகியைப் படுக்கைக்கு வீழ்த்துவது என பல அடுக்குகள் படத்தில். அதைச் சிக்கலில்லாமல் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளதில் ஒரு தேர்ந்த இயக்குநராகக் கோலேச்சுகிறார். ஆனால் பாடுபொருளில்தான் அவ்வளவு குழப்பங்களும் முரண்களும்.

ஊரை விட்டு ஓடிப் போகும் ஜோடிக்கு இப்படியாக அட்வைஸ் செய்கிறார்: “காதல்ங்கிறது பொய். உடலுறவு சுகத்தை அனுபவிக்கத்தான் காதல்னு கற்பனையை வளர்த்துக்கிறீங்க. ஊரை விட்டு ஓடாமல் இங்கேயே பலமுறை உடலுறவு கொள்ளுங்கள். காமம் வடிந்த பின்னும் ஒருவரை ஒருவருக்குப் பிடிச்சிருந்தால், சேர்ந்து வாழுங்க” என்கிறார். இவர் தன் படத்தில் நடிக்கும் நாயகியிடம், “இந்தச் சமூகம் இருக்கே சமூகம், 60 வயசுக்கு மேல் ஒருத்தன் காதலிக்கக் கூடாதுன்னு நினைக்குது” என தனது கையை நாயகியின் தொடையில் வைத்துத் தடவிக் கொண்டே மேலே செல்கிறார் (நாயகி கையைத் தட்டி விட்டுவிடுகிறார். தனக்கு எப்பவுமே பெண் என்பது ஒரு உடல் தானென ஒத்துக் கொள்ளும் இயக்குநரின் நேர்மை பளிச்சிடும் மற்றொரு தருணம்).

காதலென்பது பெரும் பொய்; ஆகவே மக்களே, இது இயக்குநரின் காம டைரி என்றறிக! காமத்தில் தப்பு சரி எதுவும் இல்லை என்பதே அவரது டைரி தனக்குள் பொதித்து வைத்திருக்கும் மறைப்பொருள்.