Shadow

கிச்சன் கில்லாடியான கதை

One Pot One Shot

விறகு அடுப்பு, மண்ணெண்னை ஸ்டவ், ரம்பத்தூள் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் சிலிண்டர், மைக்ரோவேவ் ஓவன், இண்டக்ஷன் ஸ்டவ் என அத்தனையும் பார்த்த ஒரே தலைமுறை என்பதில் எனக்கு எப்போதுமே பெருமைதான். அடுப்புகள் மாறியதால் சமைக்கும் நேரத்தோடு சமையலின் ருசியும் தரமும் குறைந்து போனதென்னவோ உண்மை. போதாத குறைக்கு உடனடி உணவுகள் என்கிற பெயரில் கெமிக்கல் குப்பைகள் நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. என்ன செய்வது? எல்லோருக்கும் அவசரம். நேரமின்மை.

நாக்கிற்கு ருசியாக, மனதிற்கு இதமாக, உடலுக்கும் தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான சமையல் என்பது வீட்டில் சமைத்தால்தான் உண்டு. நம்முடைய இந்திய உணவு வகைகள் எல்லாமே ஏகப்பட்ட முன் தயாரிப்புகள், பக்குவம், படிநிலைகள் எனச் சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடியவை. இதை நினைத்தே பல பெண்கள் அயர்ச்சியாகி இன்ஸ்ட்ண்ட் உணவுகளை நாடுகின்றனர். வார இறுதியில் ஏதாவது ஒரு உணவகம் போய்ப் பிடித்த உணவை கொள்ளை விலை கொடுத்தாவது சாப்பிடலாமென்கிற மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அம்மாவின் கைப்பக்குவத்தில் ருசியாகச் சாப்பிட்டு வளர்ந்து விட்டு திருமணத்திற்குப் பிறகு சமையல் என்பதே எனக்கெல்லாம் மலைப்பாக இருந்தது. விதவிதமாகச் சமைக்கவும் தெரியாது. அம்மா கொடுத்த சமையல் குறிப்புகளைத் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில், பத்திரிகைளில் வந்த குறிப்புகள் ஓரளவிற்கு உதவினாலும் வேலைச்சுமை, சோம்பேறித்தனம், செய்து பார்ப்பதிலும் நாட்டம் இல்லாமல் மேற்சொன்ன வெளியில் சாப்பிடும் கும்பலில் நானும் ஒருத்தியானேன். ஒரு கட்டத்தில் இதனால் உடல் மற்றும் பர்ஸ் ஆரோக்கியம் குறைவதை உணர்ந்த போதுதான் சமைக்கும் ஆர்வமே எனக்குள் துளிர் விட்டது.

அமெரிக்க வாசியான பிறகு அதுவும் இண்டர்நெட் போன்ற ஊடக வெளிச்சம் என் சமையல் ஆர்வத்தைக் கொளுந்து விட்டெறிய வைத்தன. புதிதாய் எந்த ரெசிப்பி கிடைத்தாலும் அதைச் செய்து விடுவேன். சமையலறை போர்களமாகிவிடும். டைனிங் டேபிளைப் பார்த்தாலே என் குடும்பம் அலறிய நாட்களை இப்போதும் பெருமையோடு நினைத்துக் கொள்கிறேன். தெய்வச்செயலாய் சில நாட்களில் அருமையான சமையல் அமைந்து விடும். அன்றைய நாட்களில் குழந்தைகள் ஆர்வமாய்ச் சாப்பிடுவதைப் பார்க்கும் தருணம் மகத்தானதாக இருக்கும்.

வெளிநாட்டு வாழ்க்கை, புதிய கலாச்சாரம், அலுவலகம், வேலை நெருக்கடிகள், அடுத்தடுத்த இலக்குகள் என மூச்சுத் திணற வைக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் சமையல் ஆகப் பெரிய சவாலாகவே இருந்தது. வேலை முடித்து களைப்புடன் வீட்டிற்கு வந்தால் குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வியே, ‘சாப்பிட என்ன இருக்கும்மா?’ என்பது தான். ஏதாவது மேஜிக் செய்து வாய்க்கு ருசியாகச் சுடச்சுட செய்து கொடுக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று தவித்து தேடிக்கொண்டிருந்த அந்த வேளையில்தான்,

ஆபத்பாந்தவனாக, அனாதரட்சகனாக நண்பரொருவர் ”One Pot One Shot” அதாவது சுருக்கமாக ”OPOS” என்கிற சமையல் முறையை முன்வைக்கும் ”United by Food” என்றொரு முகநூல் குழுமத்தை அறிமுகம் செய்தார். திரு.ராமகிருஷ்ணன் a.k.a ராம்கி (RK) என்கிற மகானுபாவர் தன்னுடைய தொடர் முயற்சியில் தானே உருவாக்கிய சமையைல் முறையை உலகிற்குச் சொல்லிக்கொடுக்கும் முயற்சிதான் அந்த முகநூல் குழுமம். நினைத்த மாத்திரத்தில் அங்கே யாரும் உறுப்பினராகிவிட முடியாது. அத்தனை கட்டுப்பாடுகள்.

நம்முடைய பாரம்பரிய சமையலை அதன் தரம், சுவை மாறாமல் அப்படியே, நினைத்தே பார்க்க முடியாத நேரத்தில், அதுவும் ஒரே பாத்திரத்தில் ஒரே மூச்சில் சமைக்கும் முறைதான் OPOS. என்னைப் போல வெளிநாட்டு வாசிகள், வேலைக்குச் செல்பவர்கள், திருமணமாகாதவர்கள், பிசியாக இருப்பவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்தச் சமையல் முறை வாராது வந்த மாமணி.

இக்குழுமத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பலரும் இங்கு அறிமுகம் செய்யப்பட்ட செய்முறைகளைச் செய்து பார்த்து எப்படி இருந்தது, செய்முறையை மேலும் மெருகூட்டி அடுத்தடுத்து என்ன செய்யலாம் எபப்டிச் செய்யலாமென விவாதிக்கிறார்கள். எரிபொருள் சிக்கனம், நேரச்சிக்கனம், தரம், ருசி என எல்லா வகையிலும் எந்தச் சமரசமும் இல்லாத சமையல் முறை OPOS.

2 லிட்டர் குக்கர், இண்டக்ஷன் அல்லது கேஸ் ஸ்டவ், தேவையான பொருட்கள் இருந்தாலே போதும். காய்கறிகளை நறுக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் விதவிதமான ரெசிபிகளைச் சமைத்து விட முடிகிறது. சமையல் குறிப்புகளில் கூறியது போல் அட்சரம் பிசகாமல் அதே வரிசையில் சமையல் பொருட்களைச் சேர்த்து குக்கர் விசில் கணக்கை மட்டும் கவனித்தால் போதும். சுவையான சமையல் சட்டென ரெடியாகிவிடும்.

முதலில் சோதனை முயற்சியாகக் கணவருக்குப் பிடித்த கேரட் அல்வாவை முயற்சி செய்ததில் அது வெற்றியடைய, ஒவ்வொரு ரெசிபிகளையும் செய்து கொண்டிருக்கிறேன். சில உணவுகளில் மசாலாக்கள் சேராமல் பச்சை வாசம் வருகிறது என்று கமெண்ட்ஸ் வந்தாலும் பெரும்பாலான ரெசிபிகள் நன்றாக இருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இச்சமையல் முறையில் மணக்க மணக்க அம்மா செய்தது போலவே மணல்மணலாக நெய் உருக்கிவிட முடிகிறது, மூன்று நிமிடங்களில் flash cook முறையில் வேகவைத்த காய்கறிகள், பல்வேறு ஊறுகாய், தொக்குகள், வட, தென் இந்திய ஸ்பெஷல் உணவுகள், நூடுல்ஸ், பாஸ்டா வகைகள், சைவ, அசைவ உணவுகள் என எல்லைகள் விரிவடைந்து கொண்டே போகிறது. எல்லா புகழும் திரு.ராமகிருஷ்ணனுக்கே! அவருடைய அயராத ஆர்வம்தான் என் போன்றவர்களின் சமையல் சங்கடங்களை ஊதித் தள்ளியிருக்கிறது. சமீபத்தில் ”கிருஷ்ணா ஸ்வீட்ஸ்” தரத்திலான மைசூர்பாகு சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.

Vegeterian Noodles by OPOS method

அதிக வெப்பம், குறைந்த தண்னீர், துல்லியமான நேரத்தில் நீராவியில் வேகவைக்கப்படுவதன் மூலமாக எந்தவொரு உணவு வகையையும் சமைத்து விட முடிவது எத்தனை சிறப்பு. வேறு யாராக இருந்தாலும் இந்நேரத்திற்கு இதையெல்லாம் காசாக்கிக் கல்லா கட்டியிருப்பார்கள். திரு.ராமகிருஷ்ணன் அத்தனை ரெசிப்பிகளையும் தன் வலைப்பக்கத்தில் எல்லோருக்கும் பொதுவாய் வைத்திருக்கிறார். இது தவிர எப்படிச் செய்வது என்கிற வீடியோக்களையும் யூட்யூபில் பதிவேற்றி வைத்திருக்கிறார்.

இணையதள முகவரி: https://sites.google.com/site/oposrecipes/home
யூட்யூப் சேனல்: https://www.youtube.com/user/Thesiramki
ஆண்ட்ராய்ட் அப்ளிக்கேஷன்: https://play.google.com/store/apps/details?id=opos.chef.app.com.mobile.cookptest

நான் கிச்சன் கில்லாடியாய்ட்டேன். நீங்க?

– லதா