மார்க்கெட் தண்டபாணி எனும் ரெளடியை, யாரெனத் தெரியாமல் மார்க்கெட்டில் வைத்துச் செமயாக அடித்து விடுகிறான் கார்த்திக். அந்த வீடியோ வைரலாகி தண்டபாணியின் மானம் ஆன்லைன் ஏறிவிடுகிறது. இழந்த தன் கெளரவத்தை மீட்க கார்த்திக்கை மார்க்கெட்டில் வைத்துக் கொல்லத் திட்டமிடுகிறான் தண்டபாணி. அவனது திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கார்த்திக்காக ராஜன் தேஜேஸ்வர் எனும் அறிமுக நாயகன் நடித்துள்ளார். நடிப்பும் நடனமும் கை கூடியிருந்தாலும், அவரது தமிழ் உச்சரிப்பு ஓர் அந்நியத்தன்மையைத் தருகிறது. அதுவும் கதைப்படி அவர் வடச்சென்னைவாசி எனும் போது, அவரது பேச்சு குழந்தைத்தனமாக ஒலிக்கிறது. அவரது அம்மா லக்ஷ்மியாக வரும் ரேணுகோவோ தனது வழக்கமான பாணியில் பேசியே தன் இருப்பை அழுத்தமாகப் பதிகிறார்.
இது முழுநீள ஆக்ஷன் படமன்று. ஒரு கட்டத்திற்கு மேல், மார்க்கெட் தண்டபாணி முனீஷ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியோடு இணைந்து காமெடி செய்ய ஆரம்பித்துவிடுகிறார். ஆக, நாயகனின் செயல் என்பது ரெளடிகளை அடித்து வெளுப்பது இல்லை. மருத்துவக் கல்லூரி மாணவி ஆர்த்தியாக வரும் தருஷியைக் காதலிப்பதே நாயகன் புரியும் செயல். தருஷிக்குக் காதல் மலர்வதாகக் காட்டப்படும் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வைத்திருக்கலாம் இயக்குநர் ரவி அப்புலு.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. ‘மாட்டிக்கிட்டேன்‘ பாடலில் உள்ள இளமைத் துள்ளலை உதாரணமாகச் சொல்லலாம். V.இளையராஜாவின் ஒளிப்பதிவில் கேரளா, வடச்சென்னை என இரண்டுமே அழகாய் மிளிர்கின்றன. ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் இயக்கத்தில் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கின்றன.
மார்க்கெட் தண்டபாணியாக நடித்துள்ள சமக் சந்திரா நல்ல தேர்வு. அரடம்ளராக வரும் தீப்பெட்டி கணேசனின் அறிவுரை கேட்டு அவரெடுக்கும் முடிவுகள் அவரைப் படத்தின் காமெடியன் ஆக்குகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ரவி அப்புலு, கதைக்கு இன்னும் கொஞ்சம் யதார்த்த சாயலைக் கொடுத்திருக்கலாம். அல்லது ஒரே ஜானரில் பயணிக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கலாம். நன்றாகச் செயல்பட்டிருந்தும் பார்வையாளர்கள் மையல் கொள்ளுமளவு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளார் ரவி அப்புலு.