Search

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

ponmagal-vandhal-ott

திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், “பொன்மகள் வந்தால்” படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். “எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்குப் பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்குப் பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொந்த பணத்தையே போட்டுத் தயாரித்துவிடுகிறோம். ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு நிறைய பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் வந்தது. அதைத் தயாரிப்பது சில பேர் மட்டுமே.

இப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றித் தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள் தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி பிளாட்ஃபார்ம் பற்றித் தெரிந்து வைத்துள்ளார்கள். திரையரங்கில் வெளியாகும் போது அனைத்துத் தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும். இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பிற்கும் எது நன்மையோ அதைத் தான் கவனிக்க முடியும்.  கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள் – இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். ஓடிடி பிளாட்ஃபார்ம் என்பது கதையை மையமாகக் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன். பெண்களை மையமாகக் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். அதில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையமாகக் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.

சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஹீரோ படத்தோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறையப் பேர் செல்ல மாட்டார்கள். வழக்கமான என் படங்களுக்கான ரசிகர்களை விட, இப்போது அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும். என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்தத் தீர்வு அவ்வளவே! கொரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்கள் படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை எந்த இடைவெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சனை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம்” என்றார்.

இப்படம், ஜோதிகாவின் நடிப்பில் வெளிவரும் 49 ஆவது படமாகும்.