Shadow

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

Ponmagal-Vandhal-review

குழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால், அக்குழந்தைகளுக்கு ஏற்படும் வாழ்நாள் மன அதிர்ச்சியைப் (mental trauma) பற்றிப் படம் பேசுகிறது. போலீஸ் எப்படி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சோடிக்கும் என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது.

இரட்டைக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதியை, சைக்கோ என முத்திரை குத்தி, 2004 இல் என்கவுண்ட்டர் செய்து விடுகிறது போலீஸ். அந்த வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ். இறந்துவிட்ட ஜோதிக்கு ஆதரவாக வெண்பா எனும் வக்கீல் களமிறங்க, 15 வருடத்துக்கும் முன் நிகழ்ந்த உண்மையைப் பார்வையாளர்களுக்குக் கதையாகச் சொல்கிறார் வெண்பா. வெண்பாவாக ஜோதிகா நடித்துள்ளார். பாதி படத்திற்கு மேல், நீதிபதியாக வரும் பிரதாப் போத்தனை, விஜய் டிவி ஜட்ஜ் என நினைத்துக் கொண்டு ஜோதிகா அழுது தீர்க்கிறார். படத்தின் சீரியஸ்னஸை அது நீர்த்துப் போகச் செய்கிறது.

‘அந்தக் கேரக்டரையும் நானே நடிச்சிடவா?’ என்பதை இப்போ நாயகிகளும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள் போல். ஃப்ளாஷ்-பேக்கில் ஜோதியாக, ஜோதிகாவே தோன்றுகிறார். வெண்பா அடிக்கடி ஜோதியின் தாயன்பை நினைத்துப் பார்த்துக் கொள்கிறார். நீதிமன்றத்தில் வெண்பா, ‘நான் தான் ஜோதியின் மகள்’ எனச் சொன்னதும், மிகப் பெரும் ட்விஸ்ட்டைப் பார்வையாளர்களுக்குத் தந்துள்ளோம் என்ற பெருமிதத்தில் INTERMISSION விடுகிறார் இயக்குநர். இதுதான் இன்டர்வெல் ட்விஸ்ட் என முடிவெடுத்த பிறகு, ஜோதி பாத்திரத்தில் வெறொருவரை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், இடைவேளைக் காட்சி உள்ளபடிக்கே ட்விஸ்ட் தான் என்பதைக் க்ளைமேக்ஸ் காட்சியில்தான் புரிகிறது. அதற்காக, க்ளைமேக்ஸ் வரை பொறுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.

மிகச் சிறந்த கோர்ட் டிராமாவாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால் திரைக்கதையின் தொய்வால் அயர்வு உண்டாகிறது. குறிப்பாக, இந்த லாக்-டவுன் காலத்தில், சினிமா பார்ப்பது மட்டுமே ஒற்றைப் பொழுதுபோக்காகி விட, அமேசான் ப்ரைமிலே மிகச் சிறந்த திரைப்படங்களைத் தேடிப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் சூழலில், இப்படம் மனதைத் தொட மிகவும் மெனக்கெடுகிறது. பார்வையாளனை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளாமல், பேசியே கதை சொல்லி மாய்கின்றனர். வக்கீல் ராஜரத்தினமாகப் பார்த்திபன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்குப் பின்னான தமிழ்ப் படங்கள், தன் நிறத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் பூதாகரமாய் எழுந்துள்ளதை இப்படம் உணர்த்துகிறது.