Shadow

பாம்புசட்டை விமர்சனம்

Paambusattai review

வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், ‘அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?’ என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோமசுந்தரம், பூக்காரப் பாட்டி சாப்டூர் விஜயலெட்சுமி என படம் முழுவதும் அசலான மனிதர்கள். அவர்கள்பேசும் வசனமும் ஆங்காங்கே பளீச்சிடுகின்றன. இயக்குநருடன் இணைந்து மன்னம் பிரேம்கமலும், பாரதி தம்பியும் வசனத்திற்கு உதவியுள்ளார்கள்.

வாட்டர் கேன் போடும் பாபி சிம்ஹாவும், அவரது முதலாளியாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் மட்டும் அசலான மனிதர்களுடன் ஒட்டாத தாமரை இலையாக உள்ளார்கள். முதற்பாதியில், நாயகியைக் கண்டதும் காதல் கொண்டு, விடாது தொடர்ந்து, நாயகியைப் பணிய வைத்துவிடும் வழக்கமான நாயகனாக பாபி சிம்ஹா. இரண்டாம் பாதியில், கள்ள நோட்டு கும்பலிடம் இழந்த பணத்தை மீட்க ஆவேச வேடம் கொள்கிறார். பணத்தை இழந்த கோபத்தையும், அதை மீட்க அவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் இயலாமையையும், தன் நடிப்பால் சுமக்க முடியாமல் திணறுகிறார் பாபி.

படம், ஒரே சீரான உணர்வுகளைத் தராமல் ஏற்ற இறக்கத்தோடு பயணிக்கிறது. ஒரு பக்கம் நாயகன் கோப ஆவேசம் கொண்டு துவளுகிறார், மறுபுறம் சார்லி தன் உயர்ந்த குணத்தால் நெகிழ வைக்கிறார். யதார்த்தம் என்றாலும், நாயகனின் ஹீரோயிசம் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடியும் பொழுது ஒரு மனச்சோர்வு ஏற்படுகிறது. படத்திலாவது நாயகனுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கவேண்டுமா? படம் சுபமாய்தான் முடிகிறது. எனினும், காட்சிகள் ஒரு சீரான ரிதத்தில் இல்லாதது சற்று அயற்சியைத் தருகிறது. நாயகனுக்கு பாக்ஸிங்கில் பயிற்சி வாய்ப்புக் கிடைப்பதும், அதற்கான சண்டைக் காட்சியையும் இன்னும் கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம். அதையும் வசனத்தாலேயே சமாளித்துள்ளனர்.

தேவையின் பொருட்டு, எத்தகைய சமாதானம் செய்து கொண்டாலும் அது அனைத்துமே, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற கருத்துடன் படம் முடிகிறது. படத்தொகுப்பாளர் S.P.ராஜாசேதுபதி, கொஞ்சம் கறாராக இருந்திருந்தால் படம் மறக்கவியலாதொரு அற்புதமான உணர்வைத் தந்திருக்கும். எழுதி இயக்கியுள்ளார் ஆடம் தாசன். ஷங்கரிடம் துணை இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.