“தோனுதேக்கு மூணு சுழியில்ல வரணும். ரெண்டு சுழிதான் தலைப்புல இருக்கு. ஏதாச்சும் அதன் மூலமா இயக்குநர் சொல்ல வர்றார் போல! படத்தைப் பார்க்கணும்னு தோணுது” என்றவர், தனது பாணியில் இறுதி பன்ச்சாக,
“கூட்டமில்லா ஏ.டி.எம். பார்க்கத் தோணுதே! தியேட்டரில் கூட்டம் பார்க்கத் தோணுதே!” என தன் உரையை முடித்துக் கொண்டார் ‘போங்கு’ பட நாயகன் நட்டி. ‘பார்க்க தோனுதே’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.ரமேஷ், நட்டியின் உதவியாளர் ஆவார்.
‘பார்க்க தோனுதே’ படத்தின் இயக்குநர் ஜெய்செந்தில்குமாரை அருகில் அழைத்து, “இந்தத் தலைப்பை யார் வைத்தது?” எனக் கேட்டார் இயக்குநர் கஸ்தூரிராஜா. “நானும் தயாரிப்பாளரும் சேர்ந்து வைத்தோம்” என்றார். “இந்தக் கதைலாம் வேணாம். யார் இந்தத் தலைப்பை வச்சது?” என மீண்டும் கேட்டார் கஸ்தூரிராஜா. “நான் நாலு தலைப்புக் கொடுத்தேன். அதில் இந்தத் தலைப்பைத் தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்தார்” என்றார் இயக்குநர் ஜெய்செந்தில்குமார்.
“அவ்வளவுதான். நீங்க தான் தலைப்பு வச்சீங்க. எப்படி இந்த மாதிரி ஒரு தலைப்பு வச்சீங்க? லவ் பண்றீங்களா?” என ஜெய்செந்தில்குமாரைக் கேட்டார். அனைவரும் சிரிக்க, “காதலில்லாதவன் கலைஞனே இல்லை. காதல் தான் பேனாவைப் பிடிக்க வைக்கிறது. என்னையும் அதான் பிடிக்க வச்சது. இந்தத் தலைப்பு என்னை, நான் காதலித்த காலத்துக்குக் கூட்டிப் போய்விட்டது.
இது அற்புதமான தலைப்பு. ஒரு மனிதனின் தொடக்கம் முதல் கடைசி வரை தொடரும் ஒரு விஷயம். குழந்தையாக இருக்கும்போது அம்மாவைப் பார்க்கத் தோணுதே; தேவைக்குப் பணம் தரும் அப்பாவைப் பார்க்கத் தோணுதே; பள்ளியில் நண்பனைப் பார்க்கத் தோணுதே; கல்லூரியில் காதலியைப் பார்க்கத் தோணுதே; திருமணம் ஆனதும் மனைவியைப் பார்க்கத் தோணுதே; பின் பிள்ளை பிறந்ததும் மகனையோ, மகளையோ பார்க்கத் தோணுதே; இப்போ பேரக் குழந்தைகளைப் பார்க்கத் தோணுதே!” என்று தலைப்பிற்காக இயக்குநரை மிகவும் பாராட்டினார் கஸ்தூரிராஜா.
வாசவி பிலிம்ஸ் சார்பில் V.K.மாதவன், தன் மகன் அர்ஷாவை நாயகனாக்கி, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நாயகனைப் போல் நாயகி சாராவும் புதுமுகமே! மணிஸ் இசையமைப்பில், பாடகர் வீரமணிதாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். “நாயகன் இன்னும் கொஞ்சம் வெயிட் போடணும்” எனக் கேட்டுக் கொண்டு, படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தினார் ஜாக்குவார் தங்கம்.