Shadow

“பான் இந்தியா படமென்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர்

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக மறு பிரேவசம் செய்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

படம் விரைவில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த 20 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரைக் கெளரவிக்கும் விதமாகப் படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

இயக்குநரும் நடிகருமான அமீர், “தமிழ்த் திரையுலகில் ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. துணிச்சலாகப் பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்தப் படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் என்னிடம் பேசாமல் இருந்தார்.

நான் கரை வேட்டி கட்டிய அரசியலைப் படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்தக் கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதே சமயம் ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை வெளியிடுகிறார் என்றதும் எனது படத்திற்காக வைத்திருந்த ‘உயிர் தமிழுக்கு’ என்கிற டைட்டில் இதற்குப் பொருத்தமாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டேன். இந்த சமயத்தில் இது சரியான ஒரு டைட்டில்.

ஆனந்த்ராஜ் வில்லனாக நடித்துப் பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்தப் படத்தில் அவருக்கு அப்படி சில காட்சிகள் இருக்கின்றன. சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி போல எனக்கும் இமான் அண்ணாச்சிக்குமான கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இது வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் இருந்து இந்தக் கூட்டணி தொடரும். இளையராஜாவுக்கு பிறகு, நான் வியந்து பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்தப் படத்திற்காக மெனக்கெட்டதை மறக்க முடியாது. படத்தில் எம்ஜிஆர் பாடல் உள்ளிட்ட நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்தப் படம் மொழியைப் பற்றிப் பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையைப் பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தித் திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்தத் தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டே இருக்கணும்.

நான் எப்போதும் கதையின் நாயகனாக தான் இருப்பேன். சினிமா என்பது இயக்குநரின் மீடியம். நாயகர்களால் தான் சினிமா என்கிற பிம்பத்தை தான் உடைக்க விரும்புகிறேன். அதேசமயம் ஒரு ரசிகனாக நடிகர்களைக் கொண்டாடுவோம்.

பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதைச் சாதித்துக் காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்.

விரைவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நான் ஒரு படம் இயக்க உள்ளேன். ஏற்கனவே ‘இறைவன் மிகப் பெரியவன்’ மற்றும் இன்னொரு படம் கைவசம் இருக்கிறது. அதை முடித்துவிட்டு இந்தப் படத்தை இயக்குவேன்” என்று கூறினார். மேலும், “உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை” என்றும் பேச்சின் இடையே அரசியலையும் தொட்டுச் சென்றார்.