Shadow

பனிவிழும் நிலவு விமர்சனம்

Pani Vizhum review

காதல், ஊடல், பின் இணைதல்தான் படத்தின் கதை.

‘ஆதியும் அந்தியும்’ படத்தின் இயக்குநர் கெளஷிக்கின் மற்றுமொரு படம். முதல் படத்திற்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? சைக்காலஜிக்கல் த்ரில்லரிலிருந்து எந்த சீரியஸ்னசும் இல்லாத ஜாலியான கதைக்குத் தாவியுள்ளார் கெளசிக்.

ஜம்போ என்கிற ஜம்புலிங்கமாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். நல்லவேளையாக இவரைக் கல்லூரிப் பேராசிரியராக நடிக்க வைக்காமல் போனார் இயக்குநர். ஆனால் தன்னைச் சுற்றியுள்ள ஆண் மம்முட்டிகளால் (மண்வெட்டி) தனக்கு ஏதேனும் சேதாரமாகிவிடுமோ என்ற திகிலுடனுள்ள கதாப்பாத்திரம்.

படத்தின் முதற்பாதியைத் தனது விபரீதக் கற்பனையால் ஓரளவு சுவாரசியப்படுத்துவது வெண்ணிறாடை மூர்த்தி என்றால், இரண்டாம் பாதியைக் கலகலப்பாக்குவது மீனா அக்காவாக வரும் கோவை சரளா. அவர் வந்த பிறகு படத்தின் வேகம் கூடுகிறது. அவரது கண்ணுக்கு மட்டும் தெரியும் அவரது கனவரது பெயர் கமல் என்கிற கமலக்கண்ணன். அவர் கமலுடன் பேசும் பொழுதெல்லாம், சதிலீலாவதி ‘மாருகோ..’ பாட்டின் இசைப் பின்னணியாக ஒலிக்கிறது.

எல்.வி.கணேசனின் பின்னணி இசை படத்தின் ஜாலித்தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. நா.முத்துக்குமாரின் வரிகளில், “நெஞ்சே.. ஓ” என்ற பாடல், D.S.வாசனின் ஒளிப்பதிவில் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஊடலின் காரணத்தை வரிகளில் அழகாகக் கொண்டு வந்திருக்கார் நா.முத்துக்குமார்.

Edenஉப்புசப்பில்லாத காரணங்களுக்கு எல்லாம் சண்டை போட்டுக் கொள்பவர்கள் மத்தியில், நாயகனின் கோபத்திற்கான காரணத்தை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் கெளஷிக். எனினும் படத்தில் லயிக்க உதவுவது கோவை சரளா, பாண்டியராஜன் போன்றவர்கள்தானே தவிர கதையோ திரைக்கதையோ அன்று.

நாயகன் ஹிருதய் நாயகி ஈடனைவிட பளிச்செனவுள்ளார். மாயாவாக நடித்திருக்கும் ஈடன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சாய்ஸ் என்ற போதிலும், க்ளைமேக்சில் காமெடி பீஸாகி விடுகிறார். நாயகனின் நண்பர்களான அருள்மொழி, வெங்கட், தினேஷ் ஆகியோர்கள் வழக்கமான சினிமா நண்பர்களாகவே உள்ளனர்.

பனிவிழும் நிலவு என்ற கவித்துவமான தலைப்பிற்கும் படத்தின் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நாயகனின் நண்பனை யாரோ அடித்ததும், நாயகன் அவர்களை அடிக்கிறார். திடீரென நாயகனின் விளையாட்டுத்தனத்தால்தான் எல்லாமே நடந்ததென அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். இதிலென்ன விளையாட்டுத்தனம் உள்ளது? ஆனால் மொத்த படமுமே ஒரு விளையாட்டுத்தனமாகத்தான் தோற்றமளிக்கிறது.