Shadow

பரிவர்த்தனை விமர்சனம்

திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து, கல்லூரியில் தன்னோடு படித்த தன் தோழியை பார்க்க வரும் நாயகி, தன் தோழி இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருப்பதையும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவதையும்,  அவள் வாழ்க்கையில் பள்ளி காலத்தில் நடந்த சோகக்கதையை தான் அவளின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதையும் அறிகிறாள்.  தன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் நாயகி தோழியின் வாழ்க்கைக்கும் தன் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பையும் அறிந்து அடுத்த என்ன முடிவு எடுத்தால் என்பதே பரிவர்த்தனை.

மீண்டும் ஒரு பள்ளிக்கூட வயது காதலை காவியமாக்கும் முயற்சி தான் இந்த பரிவர்த்தனை. உண்மையாகவே அந்த பால்ய வயதில் தோன்றும் பள்ளிக்கூட காலத்து காதல் ஒரு காவியமாக இருக்கலாம் தான்.  ஆனால் ஒரு திரைப்படம் அந்தக் காதலை கையாள்வதற்கான முயற்சியை பயிற்சியை அந்த இளம் சிறார்களுக்கு அளிக்க வேண்டும். அதைவிடுத்து வாழ்க்கையைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத அந்த இளம் சிறார்கள் மனதில் அவர்கள் நினைத்ததும் செயல்பட்டதும் தான் சரி, அவர்களைச் சுற்றி இருந்த சமூகமும் பெற்றோர்களும் நடந்து கொண்ட விதத்தால் தான் அவர்கள் இருவரின் வாழ்க்கையுமே கேள்விக் குறியானது என்கின்ற தவறான நம்பிக்கை விதைக்கின்ற இது போன்ற படங்கள் அந்த இளம் சிறார்களின் வாழ்க்கைக்கு ஆபத்தானது.

பத்தாம் படிவத்திலேயே தன் மகனோ மகளோ காதல் செய்கிறார்கள் என்று  தெரியும் போது, எந்தப் பெற்றோரும் இது போன்ற முடிவைத் தான் எடுப்பார்கள். யாரும் அதை ஆதரித்துப் பாராட்டவும் மாற்றார்கள்.  அதை ஆதரித்துப் பாராட்டவும் முடியாது என்பதே உண்மை.  தன் காதலி எங்கே சென்றாள் என்று தேடிச் செல்லும் நாயகன்,  வீட்டிற்கு வெளியே நின்றபடியே அவளின் தாயையோ தந்தையையோ அழைத்து விசாரித்து இருக்கலாம்.  ஏனென்றால் அவர்கள் சிறுவயதில் இருந்தே  வீட்டிற்கு தெரிந்தே நட்பாகப் பழகுபவர்கள்.  அதை விடுத்து அவன் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைவதை பார்வையாளர்களாக நம்மாலே கூட ஏற்றுக் கொள்ள முடியாத போது, நாயகியின் தாய் எப்படி ஏற்றுக் கொள்வாள். அவளுக்கு ஏற்கனவே தன் மகள் காதலில் விழுந்துவிட்டாளோ என்கின்ற பதைபதைப்பு இருக்கிறது. உடனே அவள் சிறுவயது நாயகன் மீது திருட்டுப் பட்டம் கட்டி அடிக்க வைக்கிறாள்.

நாயகியின் தாய் செய்த இந்த செயல் எவ்வளவு தவறானதோ, அதற்கு இணையான தவறு சிறுவயது நாயகன் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் சென்றது.  இந்த காரணத்தால் தான் நாயகனும் அவன் தந்தையும் ஊரை விட்டே சென்றார்கள், இதனால் தான் அவர்களின் காதல் பிரிகிறது என்று கதை செல்கிறது. அந்த கோணத்தில் பார்த்தால் கூட,  இந்த சம்பவத்தால் தான் நாயகன் எதிர்காலத்தில் ஒரு டாக்டராக உயர்கிறான்.  இல்லையென்றால் காதல் மாண்டேஜ்களில் காட்டியது போல கையில் புத்தகம் இல்லாமல் காற்றிலேயே பக்கங்களைப் புரட்டிக் கொண்டு, ஒரு கட்டத்தில் காதல்  இரு வீட்டுக்கும் தெரிந்து போய் இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போய், எங்கோ கூலி வேலை செய்து கொண்டு இருந்திருப்பார்கள்.  ஆக அந்த சம்பவம் அவன் வாழ்க்கையில் நல்லதைத் தான் செய்திருக்கிறது.

இவ்வளவு உருகி உருகி காதலித்தவன் வாழ்க்கையில் ஜெயித்தப் பிறகும் கூட தன் காதலியைத் தேடி ஒருமுறை கூட வரவில்லை.  அவளுக்கு தன் மீது இன்னும் காதல் இருக்கிறதா..? அவளை திருமணம் செய்து கொள்ள முடியுமா..? இப்படி எந்த முயற்சியும் எடுக்காமல் வேறொரு பெண்ணை திருமணமும் செய்து கொள்கிறான். காரணம் கேட்டால் அப்பா வற்புறுத்தினார் என்கிறான். தன் மனைவியுடன் மகிழ்ச்சியாகவும் வாழவில்லை.

இப்படி தவறை எல்லாம் அவன் செய்துவிட்டு பெற்றோர்கள் மீதும், சமூகத்தின் மீதும் பழி சுமத்தினால் எப்படி..? இது போக கடைசியில் பார்த்தால் நாயகனின் புது மனைவியும் முன்னாள் காதலியும் கல்லூரி காலத் தோழிகளாம். இந்தக் காதல் தான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ளும் மனைவி, தாலியை கழட்டி கணவன் கையில் கொடுத்துவிட்டு தன் கணவனையும் தோழியையும் சேர்த்து வைக்கிறாளாம்.  அதுமட்டுமின்றி தாலியை தோழி கையில் கொடுத்துவிட்டு, தோழி வளர்க்கும் மகளை தன்னோடு அழைத்துச் செல்கிறாள்.  கேட்டால் பரிவர்த்தனை என்கிறார்கள்.

எல்லாம் சரி, போகும் போது அந்த மனைவி கதாபாத்திரம் ஒரு வசனத்தை உதிர்த்துவிட்டு செல்கிறாள். தன் தோழி வளர்த்த மகளை நெஞ்சோடு கட்டிக் கொண்டு இனி இவள் தான் என் உலகம் என்கிறாள்.  அதாவது அந்த மனைவி கதாபாத்திரம் இனி திருமணம் செய்து கொள்ளாமல் தோழியின் மகளையே உலகமாக எண்ணி வாழப் போகிறாளாம். இது என்னடா கொடுமை, முழுத் தவறையும் காதலனும் காதலியும் செய்திருக்க, தண்டனை என்னவோ மனைவிக்கும்,  காதலி வளர்த்த குழந்தைக்கும் தான்…  அந்த குழந்தை என்ன பாவம் செய்தது.  இவ்வளவு நாள் இவர் தான் தன் அம்மா என்று நினைத்த குழந்தையை பிரித்து இனி இவர் தான் உன் அம்மா என்று சொல்வது எத்தனை பெரிய அநீதி, அதுமட்டுமின்றி அந்த மனைவி கதாபாத்திரம் ஏன் இந்த குழந்தையே உலகம் என்று வாழவேண்டும். ஓ… திருமணம் ஆன ஆண் மனைவியை துறந்துவிட்டு தன் காதலியை திருமணம்  செய்து கொள்ளலாம். ஆனால்  ஒரு பெண் வேண்டா வெறுப்பாக தன்னை திருமணம் செய்து கொண்ட ஆணை,  தனக்கு அவன் கட்டிய தாலியை கழட்டிக் கொடுத்துவிட்டுப் பிரிந்தாலும் மீண்டும் மறுமணம் செய்து கொண்டு, தன் வாழ்க்கையை இன்பமாக கழிக்கக்கூடாதோ…??  இதுதான் இவர்கள் சொல்ல வரும் நீதி போல…

இப்படி ஏதோ புரட்சி படம் எடுக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு ஏதோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.  பரிவர்த்தனை என்கின்ற தலைப்புக்கு நியாயம் சேர்க்க நினைத்து,  தாலியை கொடுத்து பிள்ளையை வாங்கிச் செல்கிறாள் என்று யோசித்த இயக்குநரும் கதாசிரியரும்,  கதைக்கும், தவறே செய்யாத அந்த நாயகிக்கும், கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைக்கும் நியாயம் சேர்க்க நினைத்திருந்தால் படம் ஓரளவாவது பேசப்பட்டு இருக்கும்.