Search

கெழப்பய விமர்சனம்

2014ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் WILD TALES என்று ஒரு படம் வெளியானது. 6 கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்.  அப்படத்தில் ஒரு கதை ஹைவேயில் நடக்கும்,  ஹாஸ்ட்லியான கார் ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும்,  ஒரு Porter போன்ற வண்டி ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும் ஒருவரையொருவர் முந்திச் செல்வதில் ஏற்படும் ஈகோ அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை கூறி இருப்பார்கள்.

அதே கதை தான் இந்த கெழப்பய திரைப்படத்திலும்.  கிராமம் நோக்கிச் செல்லும் குறுகிய சாலையில் சைக்கிளில் செல்லும் ஒரு பெரியவர், பின்னால் வரும் மோரிஸ் ரக கார் ஒன்றுக்கு வழிவிடாமல் தொந்தரவு செய்கிறார்.  இதனால் அந்தப் பெரியவருக்கும் காரில் செல்பவர்களுக்கும் இடையே கைகலப்பு ஆகிறது. ஆனால் இங்கு அவர் வழிவிடாமல் இருப்பதற்கு காரணம் ஈகோ இல்லை.  அதை மீறிய ஒரு விசயம். அது என்ன என்பதே இந்த கெழப்பய- திரைப்படத்தின் கதை.

ஒரு நல்ல சுவாரஸ்யமான கதைக்கரு.  ஆனால் அதற்கான திரைக்கதை அமைப்பதிலும்,  காட்சிகள் எழுதுவதிலும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும் தான் சில பல குழப்பங்கள்.  ஒரு படம் தொடங்கி ஒரு மணி நேரம் ஆனதற்குப் பின்னரும் அதே இடத்திலேயே இருக்கிறது, அடுத்து இன்னும் ஒரு அரை மணி நேரம் கடந்தப் பின்னரும் அதே இடத்தில் தான் கதை இருக்கிறது என்றால் அக்கதையும் திரைக்கதையும் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

படத்தின் தலைப்பையும் படம் துவங்கிய விதத்தையும் வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக விருதுகளுக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்குமோ என்றெல்லாம் தோன்றியது.  ஆனால் நேரம் செல்ல செல்லத்தான் நம் கணிப்பு தவறென்று புரிந்தது.

யதார்த்த சினிமாவாகவும் இல்லாமல், ஜனரஞ்சக சினிமாவாகவும் இல்லாமல்,  யதார்த்த சினிமாவிற்கான ஒரு முயற்சியாக மட்டுமே “கெழப்பய” சுருங்குவது அதன் மெதுவான திரைக்கதை மற்றும் வலுவற்ற அலுப்பூட்டும் காட்சிகளால் தான்.   சைக்கிளுடன் ஒரு வயதான பெரியவர், காரில் இருப்பவர்களோ ஒருவர் இருவர் இல்லை… ஒரு கர்ப்பிணி பெண்ணோடு சேர்த்து ஐந்து பேர்.  அவர்கள் நினைத்தால்  அந்த பெரியவரை மீறி எளிதாக கடந்துவிட முடியும்.  ஆனால்  போய் சேர வேண்டும் என்கின்ற எண்ணமே இல்லாமல், அந்த இடத்தை விட்டே நகராமல் அவர்கள் நிற்பதைப் போல் தான் திரைக்கதையும் நிற்கிறது.  அதிலும் தூக்கி எறியப்பட்ட கார் சாவியை அவர்கள் தேடும் இடத்தில் நடிப்பு படு செயற்கைத்தனம்.

ஒரு மோசமான காட்சியமைப்பு உள்ள திரைக்கதையைக் கூட சிறப்பான நடிப்பு காப்பாற்றிவிடும். அதற்கு சிறப்பான சமீபத்திய உதாரணம் “குஷி”  திரைப்படம். ஆனால் இங்கு நடிப்பும் கைகொடுக்கவில்லை.

கதையின் நாயகனாக  60 வயது கிழவராக நடித்திருக்கும் கதிரேஷகுமார் மட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார்.  வசனங்களே இல்லாமல் தன் முகபாவனையில் உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். ஆனால் இவர் அளவிற்கு ஈடு கொடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களில் ஒருவர் கூட நடிக்கவில்லை என்பதே உண்மை.  கதிரேஷகுமார் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகுமார்,  விஜயராணா தீரன், K.N . ராஜேஷ், பேக்கரி ‘முருகன்’,  அனுதியா, உறியடி ஆனந்தராஜ் என அனைவரின் நடிப்பிலும் செயற்கை சாயம்.

இசையமைப்பாளர் கெபி த்ரில்லர் வகைத் திரைப்படத்திற்கான ஒரு இசையையும் கதை நாயகனைக் காட்டும் போது ஒரு மாஸ் ஹீரோவிற்கான பின்னணி இசையையும் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் அவை இரண்டுமே கதைக்கும் காட்சிக்கும் வலு சேர்க்கவில்லை.  அஜீத்குமாரின் ஒளிப்பதிவு பெரும்பாலும் ஒரே ரோட்டில் நடக்கும் கதையை எந்த அளவிற்கு சுவாரஸ்யமான கோணங்களில் கொடுத்து காப்பாற்ற முடியுமோ அந்தப் பணியை சிறப்பாக செய்திருக்கிறது.

ஒரு நல்ல கதைக்கருவை தேர்வு செய்த இயக்குநர் யாழ் குணசேகரன், இன்னும் கொஞ்சம் திரைக்கதை, காட்சிகள்,  நடிகர் நடிகைகள் தேர்வில் கவனம் செலுத்தி மேம்படுத்தி இருந்தால்,  இந்த “கெழப்பய” –வை திரைப்படத்தில் போலீஸார் பாராட்டுவதைப் போல் ஒட்டு மொத்த ஊரும் பாராட்டியிருக்கும்.  இருப்பினும் ஒரு நல்ல முயற்சியை இயக்குநர் யாழ் குணசேகரன் தன் முதற்படத்தில் முன்னெடுத்திருப்பதால், அந்த முயற்சியை ஆதரிக்கலாம்.