Shadow

பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

Pariyerum-Perumail-is-a-dedication

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராம் பேசுகையில், “எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப் போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.

மாரிசெல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். திருநெல்வேலி என்ற ஊரையும் எனக்கு அறிமுகப் படுத்தியவன் மாரி செல்வராஜ். என் பாட்டன், அப்பன் வாழ்ந்த ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வீட்டில் என்னையும் என் மகனையும் அமர வைத்தவன் மாரி செல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.

இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ் என்பதை விட, மாரி செல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்குப் பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, “ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான் ‘பரியேறும் பெருமாள்’. நான் கல்லூரியில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், என் கதையை எழுதப் போய், எதிரில் இருப்பவன் கதையையும் சேர்த்து எழுதத் தொடங்கியதும், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக்கல்லூரி படிக்கும் போது நான் சந்தித்த, கடந்து போன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது. இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.

முதலில் இந்தப் படத்தின் இசை வேறு மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதற்காகத் தான் சந்தோஷ் சாரிடம் பேசினோம். அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களையும் கலைஞர்களையும் பயன்படுத்தி இருக்கிறோம். முதலில் 5 பாடல்கள் தான் திட்டமிட்டோம். ஆனால் அவராகவே முன்வந்து இன்னொரு பாடலையும் போட்டுக் கொடுத்தார்.

கேமரா மேன் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா இருவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கதிர், கயல் ஆனந்தி இருவரும் அந்த வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் யோகி பாபு அண்ணனின் பங்களிப்பு மிகப் பெரியது. இப்படத்தில் கருப்பி என்கிற நாயின் கதாபாத்திரம் விவாதங்களை உண்டாக்கும்.

நான் ராம் சாருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் நினைத்தது இந்தப் படம் தான். இன்று இங்கு என் குடும்பத்தார்கள் யாரும் இல்லை, ஆனால் மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்” என்று நெகிழ்வாகப் பேசினார்.

“எனக்கு இயக்குநர் ராமையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜைக் கண்டெடுத்து அவர் உருவாக்கி விதம் மிகவும் நெகிழ்ச்சியானது” என்று பூரித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.