Shadow

கர்ணன் கொடையாளியா ?

kunthi-sun (Image Courtesy: Quora.com)

கர்ணனின் வீரம்

மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம்.

கொடை என்றால் தியாகம் என்று அகராதி சொல்கின்றது. எந்த ஒரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்கு தானமாகத் தருவது. அப்படித் தொடர்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே வள்ளல் தன்மை.

சீதக்காதி வள்ளல் பற்றிய கதை தெரியும் இல்லையா? படிக்காசு புலவர் தன் வறுமைக்காக அவரிடம் சென்று உதவி கேட்க, ஏதோ காரணத்தால் உடனடியாகத் தரமுடியாமல் போனது. ‘ஒரு வாரத்தில் தருகிறேன்’ என்று அனுப்பி வைக்கிறார் சீதக்காதி. துரதிர்ஷ்டவசமாகப் புலவர் திரும்ப வரும் போது அவர் இறந்து விட்டார். அப்போது சீதக்காதியின் உறவினர் வீட்டின் உள் இருந்து ஒரு மோதிரத்தைக் கொண்டு வந்து இறக்கும் தருவாயில் அவர் நீங்கள் வந்ததும் கொடுக்கச் சொல்லி ஒரு மாணிக்கம் பதித்த பொன் மோதிரத்தைத் தந்தார் என்று சொல்லி புலவரிடம் தருகிறார். இதுவல்லவா வள்ளல் தன்மை? பிறரின் துயர் அறிந்து எந்தப் பிரதிபலனும் பாராது கொடுப்பதல்லவா கொடை?

கர்ணன் யார் எது வந்து கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்தானா ?

ஆம் கொடுத்தான்.

இந்திரனே வந்து கவச குண்டலம் கேட்ட போது கொடுத்தானே?

ஆம் கொடுத்தான்.

‘அப்படியானால் கர்ணன் கொடைவள்ளல் தானே?’ என்றால் கர்ணனுக்கு எப்போது கொடைத்தன்மை ஏற்பட்டது? ஏன் அவன் யார் எது கேட்டாலும் தருவேன் என்று உறுதி எடுத்தான்? அவன் இயல்பிலேயே கொடைத்தன்மை கொண்டவனா ?

இல்லை, கர்ணன் இயல்பிலேயே கொடைத்தன்மை கொண்டவன் இல்லை. அவன் எப்போது தன் கொடைத்தன்மையை ஏற்றான் என்பதை மஹாபாரதத்தின் துணையோடு பார்க்கலாம்.

கர்ணனின் சபதம்? – வனபர்வம் பகுதி 255

துரியோதனன், தர்மன் செய்த இராஜசூய வேள்வியைப் பார்த்து மனம் வெதும்பி தானும் ஒரு வேள்வியைச் செய்கிறான். ஆனால் அது பெரும்பாலோரால் தர்மன் செய்த அந்த யாகத்திற்கு ஈடில்லை என்று சொல்ல, கர்ணன், “கவலை வேண்டாம் துரியோதனா, நான் பாண்டவர்களை அழித்த பின் நாம் ராஜசூய யாகம் செய்வோம்” என்கிறான்.

// அந்த மன்னர்களில் சிறந்தவன் {துரியோதனன்}, தன்னைச் சூழ்ந்திருந்த குருக்களிடம், “கௌரவர்களே, பாண்டவர்களைக் கொன்று, பெரும்பொருட்களால் செய்ய வேண்டிய ராஜசூயம் என்ற முதன்மையான வேள்வியை நான் எப்போது செய்வேன்?” என்று கேட்டான். அப்போது, கர்ணன் அவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ மன்னர்களில் களிறே {யானையே} {ராஜகுஞ்சரா} {துரியோதனா}, நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன் [1], எவர் என்னிடம் எதைக் (எந்தப் பொருளைக்) கோரினாலும், “அது என்னிடம் இல்லை” என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.” என்றான் கர்ணன். //

இது தான் அவன் யார் எது கேட்டாலும் கொடுப்பேன் என்றதன் மூல காரணம் இது தானே தவிர அது அவனது இயல்பு கிடையாது. அவன் செய்த தருமங்களாக பாரதத்தில் சொல்வதை மட்டும் சொன்னால் நான் ஏற்க முடியும்.

சரி இப்போது கர்ணன் இந்திரனுக்கு தந்தது தானமா, கொடையா என்பதைப் பார்ப்போம்.

அந்தக் கவச குண்டலங்களே குந்தியின் வரத்தால் சூரியன் கர்ணனுக்கு அளித்தது.

கர்ணனுக்காக கவசகுண்டலங்கள் பெற்ற குந்தி! – வனபர்வம் பகுதி 305

அதற்குப் பின்னர்க் குந்தி {சூரியனிடம்}, “ஓ! இருளை அகற்றுபவரே {சூரியனே}, நான் உம்மிடம் இருந்து மகனை அடைந்தால், அவன் கவசத்துடனும், காது குண்டலங்களுடனும், வலிய கரங்கள் கொண்டவனாகவும், பெரும் சக்தி நிறைந்தவனாகவும் இருக்கட்டும்!” என்றாள். அவளது {குந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன், “ஓ மேன்மையான கன்னிகையே {குந்தி}, எனது மகன் வலிய கரங்கள் கொண்டவனாகவும், காதுகுண்டலங்கள் மற்றும் கவசம் அணிந்தவனாகவும் இருப்பான். அவனது காது குண்டலங்கள் மற்றும் கவசம் ஆகிய இரண்டும் அமிர்தத்தால் ஆனவையாக இருக்கும். அவனது கவசம் துளைக்க முடியாததாக இருக்கும்” என்றான் {சூரியன்}.

பிறகு குந்தி {சூரியனிடம்}, “நீர் என்னிடம் பெறும் மகனுடைய அந்தச் சிறந்த கவசமும், காதுகுண்டலங்களும் அமிர்தத்தாலானவை என்றால், ஓ! தேவரே, ஓ! வழிபடத்தகுந்த தெய்வமே {சூரியனே}, உமது நோக்கம் நிறைவடையட்டும்! அவன் {அந்த மகன்}, உம்மைப் போலவே சக்தியுள்ளவனாகவும், வலுவானவனாகவும், ஆற்றலுடையவனாகவும், அழகானவனாகவும் இருக்கட்டும்! அவன் அறம் நிறைந்தவனாக இருக்கட்டும்!” என்றாள். பிறகு சூரியன் {குந்தியிடம்}, “ஓ! இளவரசி, ஓ! சிறந்த காரிகையே {குந்தி}, இந்தக் காது குண்டலங்களை அதிதி எனக்குக் கொடுத்தாள். ஓ! அச்சமுள்ள பெண்ணே {குந்தி}, நான் இவற்றையும், சிறப்பான கவசத்தையும் உனது மகனுக்கு அளிப்பேன்!” என்றான். பிறகு குந்தி, “ஓ! வழிபடத்தகுந்தவரே, ஓ! ஒளியின் தலைவரே {சூரியனே}, எனது மகன் நீர் சொல்வது போல இருப்பானாகில், நான் உம்மை மனம் நிறையச் செய்வேன்!” என்றாள்.

அடுத்து இந்திரன் வந்து அந்தணனாய் நின்று கவச குண்டலங்களை யாசிக்கிறான்.

கவசத்தை உரித்தெடுத்த கர்ணன்! – வனபர்வம் பகுதி 308

//{கர்ணா}, நீ உனது நோன்பில் உண்மையுள்ளவனாய் இருக்கிறாய் என்றால், (உனது மேனியில் இருக்கும்) உன் உடலுடன் ஒட்டிப்பிறந்த இந்தக் கவசத்தையும், இந்தக் காது குண்டலங்களையும் அறுத்து எனக்கு அளிப்பாயாக!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! அந்தணரே, நான் உமக்கு வீடு தோட்டத்துடன் கூடிய நிலத்தையும், அழகிய காரிகைகளையும், பசுக்களையும், கழனிகளையும் {fields} கொடுப்பேன்; ஆனால் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் உமக்குத் தர இயலாதவனாக இருக்கிறேன்!” என்றான்.//

கர்ணனின் வார்த்தைகள் இவை. நான் தர மாட்டேன். என்கிறான்.

‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று;
‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று;

— புறநானூறு – வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.

///வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் பலவிதமான வார்த்தைகளில் மறுக்கப்பட்டாலும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்த அந்தணன் {அதாவது இந்திரன்} வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. கர்ணன் தன் சக்தியால் இயன்றவரை அவனைச் சமாதானப்படுத்தி, முறையாக வழிபட்டாலும், அந்த அந்தணர்களில் சிறந்தவன் வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. ///

ஆன மட்டும் மறுக்கிறான்.

//“ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, எனது கவசம் எனது உடலோடு பிறந்தது, இந்தக் காது குண்டலங்கள் அமிர்தத்தில் இருந்து எழுந்தவை. இவற்றாலேயே உலகங்களில் நான் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறேன். எனவே, அவற்றை என்னால் பிரிய முடியாது. ஓ! அந்தணர்கள் மத்தியில் உள்ள காளையே, செழிப்பு நிறைந்ததும், எதிரிகளற்றதுமான இந்த முழு உலகத்தின் அரசாட்சியை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீராக! ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, எனது காது குண்டலங்களையும், என்னுடலுடன் பிறந்த கவசத்தையும் நான் இழந்தால், எதிரிகளால் வெல்லத்தக்கவன் ஆகிவிடுவேன்!” என்றான் {கர்ணன்}.//

அப்புறம் பண்டமாற்று முறையில் கவசத்தை “தானமாக” வழங்க முற்படுகிறான்.

// வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பகனைக் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்தவன் {இந்திரன்} வேறு வரத்தைக் கேட்காத போது, கர்ணன் அவனிடம் {இந்திரனிடம்} மீண்டும் புன்னகையுடன், “ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! தலைவா {இந்திரா}, இதற்கு முன்பே நான் உன்னை அடையாளங்கண்டு கொண்டேன். ஓ! சக்ரா {இந்திரா}, நீயே தேவர்களுக்குத் தலைவனாதலால், உனக்கு நான் பயனில்லாத வரத்தை அளிப்பது முறையாகாது!

மறுபுறம், நீயே படைப்பாளனும், அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருப்பதால், நீயே எனக்கு வரங்களை அளிக்க வேண்டும்! ஓ! தேவா {இந்திரா}, நான் இந்தக் கவசத்தையும், காது குண்டலங்களையும் உனக்கு அளித்தால், நான் அழிவைச் சந்திப்பேன் என்பது நிச்சயம். நீயும் கேலிக்குள்ளாக்கப்படுவாய். எனவே, ஓ! சக்ரா {இந்திரா}, எனது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் எடுத்துக் கொண்டு அதற்கீடாக ஏதாவது ஒன்றை எனக்கு அளிப்பாயாக! இல்லையெனில், நான் அவற்றை உனக்குத் தர மாட்டேன்!” என்றான் {கர்ணன்}.

நன்றாகக் கவனிக்கவும். கர்ணன் செய்த சபதம் என்ன? ‘யார் எது கேட்டாலும் தரமாட்டேன் என்று சொல்ல மாட்டேன்’ என்பதே. மேலே கர்ணன் பலமுறை இந்திரனிடம் தன் கவசத்தைத் தரமாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறான். பின்பு இந்திரன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறான்.

உடனே சக்ரன் {இந்திரன் கர்ணனிடம்}, “நான் உன்னிடம் வருவதற்கு முன்பே, சூரியன் எனது நோக்கத்தை அறிந்து, அனைத்தையும் உனக்கு விளக்கிருக்கிறான் என்பதில் ஐயமில்லை! ஓ கர்ணா, நீ விரும்பியது போலவே ஆகட்டும்! ஓ மகனே, வஜ்ராயுதத்தைத் தவிர, நீ பெற விரும்புவது யாது என்பதை எனக்குச் சொல்!” என்று கேட்டான்.

//வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மகிழ்ச்சியில் நிறைந்து, தனது காரியம் நிறைவேறப் போவதைக் கண்டு வாசவனை {இந்திரனை} அணுகி, தடுக்கப்பட முடியாத கணையைப் பெற எண்ணி, இந்திரனிடம், “ஓ! வாசவா, எனது கவசத்துக்கும் காது குண்டலங்களுக்கும் ஈடாகத் தடுக்கப்பட இயலாததும், போரின் பொருட்டு அணிவகுக்கும் எதிரிக் கூட்டத்தை அழிக்கத் தகுதி வாய்ந்ததுமான கணையொன்றை எனக்குத் தருவாயாக!” என்றான் {கர்ணன்}. //

பேரம் பேச ஆரம்பிக்கிறான் கர்ணன். ‘நான் கவச குண்டலம் கொடுத்தால் எனக்கு நீ என்ன தருவ? அதைச் சொல்லு?’ என்று கேட்கிறான் கர்ணன்.

// உடனே, ஓ! பூமியின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, ஒருக்கணம் அந்தக் கணையை மனதில் நிறுத்தி (அதை அங்குக் கொண்டுவரும் பொருட்டு), வாசவன் {இந்திரன்} கர்ணனிடம், உனது காது குண்டலங்களையும், உனது உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசத்தையும் எனக்கு அளித்து, அதற்கு ஈடாகச் சில நிபந்தனைகளின் பேரில் இந்தக் கணையைப் பெற்றுக் கொள்! நான் போர்க்களத்தில் தைத்தியருடன் மோதும்போது, கலங்கடிக்கப்படாத இந்தக் கணை, எனது கைகளால் வீசப்பட்டு, எதிரிகளை நூற்றுக்கணக்கில் அழித்து, நோக்கம் நிறைவேறியதும் எனது கைக்கே திரும்பி வந்துவிடும். எனினும், உனது கையில் இந்தக் கணை, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உனது எதிரியில் பலமிக்க ஒரே ஒருவனைக் கொல்லும். அந்தச் சாதனையை அடைந்த பின்னர், அது உறுமிக்கொண்டும், சுடர்விட்டுக்கொண்டும் என்னிடம் திரும்பிவிடும்!” என்றான் {இந்திரன்}.

அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “நான் யாருக்கு அஞ்சி இருக்கிறேனோ, அந்தப் பெரும் கர்ஜனை செய்யும் தீ போன்று சூடான என்னுடைய ஓர் எதிரியைக் கடும்போரில் கொல்ல நான் விரும்புகிறேன்” என்றான். அதற்கு இந்திரன், “அப்படிக் கர்ஜிக்கும் பலம் நிறைந்த எதிரியை நீ போர்க்களத்தில் கொல்வாய். ஆனால், நீ கொல்ல நினைக்கும் அவன், சிறப்பு மிக்க ஒரு நபரால் பாதுகாக்கப்படுகிறான். “வெல்லப்படமுடியாத பன்றி {வராகம்}” என்றும், “புரிந்துகொள்ளப்பட முடியாத நாராயணன்” என்றும் {பஜ்ஞவராகன் என்றும் வெல்லப்படாத நாராயணன் என்றும்} வேதம் அறிந்தவர்களால் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன் அவனைப் பாதுகாத்து வருகிறான்!” என்றான். அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “அது அப்படியே இருந்தாலும், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, ஒரே ஒரு சக்திவாய்ந்த எதிரியை {நிச்சயம்} அழிக்கும் அந்த ஆயுதத்தை எனக்குக் கொடுப்பாயாக! எனது பங்குக்கு நான் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் எனது மேனியில் இருந்து அறுத்து உனக்குக் கொடுப்பேன். எனினும், இதனால் காயப்படும் எனது உடல் காணச்சகியாதது ஆகாமல் நீ அருள வேண்டும்!” என்றான்.

இதைக் கேட்ட இந்திரன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, நீ உண்மையை நோற்க {சத்தியத்தைப் பேண} உள்ளதால், உனது மேனி காணச்சகியாததாகவோ, வடு உடையதாகவோ ஆகாது. ஓ! பேச்சால் அருளப்பட்டவர்களில் சிறந்தவனே, ஓ! கர்ணா, நீ உனது தந்தையைப் போலவே சக்தியும் நிறமும் கொண்டிருப்பாய். கோபத்தில் பித்தேறி, உன்னிடம் வேறு ஆயுதங்கள் இருக்கும்போதோ, உனது உயிருக்கு உடனடி ஆபத்து இல்லாதபோதோ இந்தக் கணையை நீ ஏவினால், இது உன்மேலேயே விழும்” என்றான். கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, நீ சொல்வது போலவே, எனது உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கும்போது மட்டுமே நான் இந்த வாசவி {இந்திரசக்தி} கணையை வீசுவேன்! இதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன்!” என்றான். //

“எனக்கு நீ யாரையும் அழிக்க வல்ல அஸ்த்திரத்தைக் கொடு, அப்பொழுதுதான் நான் என் கவச குண்டலங்களைத் தருவேன்” என்பது தான் கொடையா? அது தான் வள்ளல்தன்மையா?

வேறு எந்த இடத்தில் மகாபாரதத்தில் கர்ணன் தான தருமங்கள் செய்தான்? கர்ணன் செய்த தானங்களாக சொல்லப்படுபவை எல்லாமே செவி வழியாக அவன் மீது ஏற்றப்பட்டவை. அது உண்மையா என்றால் இல்லை என்று தான் மகாபாரதம் சொல்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கர்ணன் கொடையாளியா?

– ஐயப்பன் கிருஷ்ணன்