Search

பார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு

otha-serUppU

தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். அவரது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

எழுத்தாளரும் இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், “நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கைச் சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். சமரசம் செய்வதன் மூலம், ஸ்கிரிப்ட் அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். ஒத்த செருப்பு சைஸ் 7 கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் செயல்முறைகள் உள்ளன, ஒன்று தணிக்கைக் குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை அவர்களிடம் முன்வைக்க ஒரு மாணவரைப் போல ஆர்வமாகக் காத்திருக்கிறேன். விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்” என்றார்.

இந்தப் படம் அதன் ‘ஒற்றை கதாபாத்திரம்’எனும் காரணிக்காக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும். ஆனால் பார்த்திபனின் கூற்றுப்படி, அதில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் இங்கே ஒரு கதாபாத்திரம் தான். சந்தோஷ் நாராயணனின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலி, அமரனின் கலை அமைப்பு, சுதர்சனின் படத்தொகுப்பு ஆகியவை ஒவ்வொன்றும் கதாபாத்திரங்களாகவே வெளிப்படுத்தப்படும். இந்த ஒரு ‘ஒற்றை கதாபாத்திரம்’ கான்செப்டை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவில் சில படங்கள் வந்துள்ளன. அதன் வெற்றிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அதற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் ஒரு அற்புதமான தொழில்நுட்பக் குழுவையே சாரும். படத்தின் இறுதி வடிவத்தை நான் காணும்போது, நிச்சயமாக அது எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு பதிப்பாக அமைந்திருந்தது” என்றார் கண்களில் குதூகலம் மின்ன.