32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

Dinesh R சேலம் Published: 03/07/2025 2 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்திலேயே வைத்துக் கொல்வதற்குக் கரிகாலனின் மனைவி மாயா முயற்சிகள் எடுத்தவண்ணம் உள்ளார். அவற்றிலிருந்து சூர்யா தப்பினானா, சூர்யா ஏன் ச.ம.உ.-வைக் கொன்றான் என்பதே படத்தின் முடிவு.

முன்னாள் ச.ம.உ.வாக முத்துகுமார் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அவரது ரியாக்‌ஷன்கள் போக்குகிறது. சூர்யாவின் அம்மாவாக தேவதர்ஷினியும், சூர்யாவின் பயிற்றுநராக வத்திக்குச்சி திலீபன் நடித்துள்ளார். ச.ம.உ. கரிகாலனாக சம்பத் ராஜும், கரிகாலனின் மனைவி மாயாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காவல்துறை உயரதிகாரி அறநெறியனாக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். அவர், ஹரிஷ் உத்தமனை அழைத்து வழக்கை விசாரிக்கச் சொல்கிறார். ஹரிஷ் உத்தமனோ, சூர்யாவிற்கு ஃபீனிக்ஸ் என்ற பட்டமளித்து, அப்படியென்றால் என்னவென்று பார்வையாளர்களுக்குச் சொல்லிவிட்டுக் காணாமல் போகிறார்.

இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் சண்டை இயக்குநர் அனல் அரசு, தான் கோலேச்சிய களத்தில் கதையை அமைத்துள்ளார். அதிரடிக் காட்சிகளை மையப்படுத்திய கதையென்பதிலேயே பாதி வெற்றியை ஈட்டிவிடுகிறார். நாயகனும், அவனது அண்ணனும் MMA வீரர்களாக வந்து, முழு நீள அதிரடி ஆக்‌ஷன் படத்திற்கு உத்திரவாதமளித்துள்ளனர். சூர்யாவின் அண்ணன் கர்ணாவாக காக்கா முட்டை விக்னேஷ் நடித்துள்ளார். தானேற்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அவரது காதலி அகிலாவாக, அயலி புகழ் அபி நக்‌ஷத்ரா நடித்துள்ளார்.

சூர்யா சேதுபதியை உடலளவிலும் மனதளவிலும் கச்சிதமாகத் தயார்ப்படுத்தியுள்ளார் அனல் அரசு. படத்தின் சண்டைக்காட்சிள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.-இன் பின்னணி இசையும் ஆக்‌ஷன் படத்திற்கான அடித்தளத்தை வலுவாக அமைக்க உதவியுள்ளன. முதற்படமே ஆக்‌ஷன் படமாக வாய்ப்பது ஒரு நாயகனுக்கு அதிர்ஷ்டம். அதை சூர்யா சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது, அவரது உழைப்பைக் காட்டுகிறது. வெற்றிக் கொண்டாட்டமாக வரும், ‘இந்தா வாங்கிக்கோ’ பாடலிற்குக் குத்தாட்டமும் செமயாகப் போட்டுள்ளார் சூர்யா சேதுபதி. படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில், ‘உங்களை விட உங்க பையன் நல்லா டான்ஸ் ஆடுறான் சார்’ என இயக்குநர் பாண்டிராஜ், விஜய் சேதுபதியிடம் சொன்னது மிகைப்படுத்தப்படாத உண்மை.

சிறுவர்கள் காண உகந்த படமில்லை என்றாலும் ஆக்‌ஷன் விரும்பிகள் தவற விடகூடாத படம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.