Shadow

பறந்து போ விமர்சனம் | Paranthu Po review

ஓர் இனிய ஆச்சரியம். தென்றல் தீண்டுவது போல் ஒரு ஜாலியான படம். இயக்குநர் ராமின் முந்தைய படங்களினின்று நேரெதிராக உள்ளது இப்படம். ராமின் பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும், சக மனிதர்கள் மீது கோபமும், அவநம்பிக்கையையும் கொண்ட கசப்பான மனிதர்களாக இருப்பார்கள். இப்படத்திலோ, கதாபாத்திரங்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். முக்கியமாக சக மனிதர்கள் மீது கோபமோ, பொறாமையோ இல்லாதவர்களாகவும்; தங்கள் மீது பச்சாதாபமோ, சுய கழிவிரக்கமோ கொண்டு இயலாமையை வெளிப்படுத்தாதவர்களாகவும் உள்ளனர். பார்ப்பவர்கள் எல்லாரையும் கெட்டவரெனும் துரியோதன மனக்கசடில் இருந்து, மனிதர்கள் அனைவருமே நல்லவர்கள் தானெனும் தருமனின் மனநிலைக்கு எப்படியோ தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

கடன் வசூலிக்கும் நபரிடம் இருந்து தப்பிக்கும் தந்தை மகனான கோகுல் – அன்பு இருவரின் டூ-வீலர் சாகசம், ஒரு ரோடு ட்ரிப்பாக கவிதை போல் நீள்கிறது. அவர்கள் சந்திக்கும் நபர்கள், cool guy ஆன அன்புவின் பிடிவாதத்தைச் சமாளிக்கும் கோகுலின் புன்முறுவலான அணுகுமுறை என படத்தை மற்றொருமுறையும் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.

அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி ஷிவாவின் படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ படம் அதை ஏமாற்றாமல் அளிக்கிறது. ஆனால் இலக்கற்ற கவுன்ட்டர்களாக இல்லாமல், படத்தினோடும் கதாபாத்திரத்தினோடும் பொருந்தி மனம் விட்டுச் சிரிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் ஷிவா எது பேசினாலுமே பார்வையாளர்கள் ரசிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மகனைத் தேடி ஓடி ஓய்ந்து கால்வலியுடன் அவர் படும்பாட்டில் பார்வையாளர்கள் சோர்ந்தாலும், ஷிவா அலட்டிக் கொள்ளாமல், ‘I am proud of you my son!’ என அசால்ட்டாய் டீல் செய்து அசத்துகிறார்.

பெண்கள் வேலைக்குப் போனாலே ராமின் பிரதான ஆண் கதாபாத்திரங்கள் தங்கள் இயல்பை இழந்துவிடுவார்கள். உதாரணம், தரமணி படத்து வசந்த் ரவி. ஆனால், இப்படத்தில் அன்பு தனது தந்தையிடம், ‘அம்மா வேலைக்குப் போறது தப்பா?’ எனக் கேட்கிறான். ராமின் நாயகனான ஷிவா, பெண் வேலைக்குப் போவது தப்பில்லை எனப் புரிய வைக்கிறார். தரமற்ற தரமணி படத்தில், நடனத்தில் விருப்பமுள்ள மனைவி வேறொருவருடன் நடனமாடுவதைப் பெரிய விஷயமாகக் கருதாத கணவனை மலினமானவன் போல் எள்ளி நகையாடியிருப்பார் ராம். ஆனால் இப்படத்தில் ஐந்தாம் வகுப்பு நண்பர்களான அஞ்சலிக்கும் ஷிவாவுக்கும் உள்ள நட்பை அதீத நுண்ணர்வுடன் சித்தரித்துப் பரவசமூட்டியுள்ளார் ராம். ஆனால் அவரையும் மீறி, அஞ்சலியின் கணவரான அஜு வர்கீஸ், அன்புக்கு ஷூ அளித்துவிட்டு டிவிஎஸ் 50-இல் கிளம்பும் முன் ஒரு வம்படியான வசனத்தை உதிர்ந்து விட்டுப் போகிறார். அதை ராம் தவிர்த்திருக்கலாம், ஆனால் பார்வையாளர்கள் நகைச்சுவையென அதைக் கடந்துவிடுகின்றனர்.

சென்னையில் வாழும் கணவரையும் மகனையும் விட்டுப் பிரிந்து, கோவையில் சேலைக்கடை வைத்துள்ளார் ஷிவாவின் மனைவியாக வரும் கிரேஸ் ஆண்டனி. அவருடன் பணிபுரியும் இளம்பெண் கதாபாத்திரத்தைக் கூட மிக அற்புதமாக வார்த்துள்ளார் ராம். கடைக்குச் சேலை வாங்க வந்து விலையைக் குறைத்துக் கேட்கும், இரண்டே இரண்டு காட்சியில் வரும் பாட்டியின் கதாபாத்திரத்தைக் கூட மறக்க முடியாதபடிக்கு அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிறுவன் அன்பாக நடித்திருக்கும் மிதுல் ரயன் தூள் கிளப்பியுள்ளான்.

ஒரு சிறுவனின் அகத்திற்குள்ளான பயணமாகக் கூட இப்படத்தைப் பாவிக்கலாம். தந்தை – மகன் உறவு, ஷிவாவிற்கும் அவரது தந்தை பாலாஜி சக்திவேலுவிற்கும் எப்படி இருந்தது, ஷிவாவிற்கும் அவரது மகன் மிதுல் ரயனிற்கும் எப்படி இருக்கிறது என்ற வேறுபாட்டையும் போகிற போக்கில் பதிந்துள்ளனர். பிடிவாதம் பிடிப்பதில், தான் சிறுவனாக இருந்த பொழுது எப்படியிருந்தோமோ அப்படித்தான் தன் மகனும் இருக்கிறான் என ஷிவாவிற்குப் புரிகிறது. ஒரே ஒருநாள் ரோட் ட்ரிப், மகனை நெருக்கமாகத் தெரிந்து கொள்ள ஷிவாவிற்கு உதவுகிறது. மகள் நாய்க்குட்டிக்கு ஆசைப்பட்டால் என தன் தகுதிக்கு மீறிச் செலவிடுவதைத் தங்க மீனில் நியாயப்படுத்த மெனக்கெட்ட ராம், இப்பட முடிவில், ‘குழந்தைகள் விரும்புவதையெல்லாம் பெற்றோர்களால் வாங்கித் தர இயலாது. ஆனால் அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம்’ எனும் எதார்த்தத்தைக் கண்டடைந்துள்ளார்.

எப்பொழுதும் ராம் படத்தைக் கவிதையெனப் பார்வையாளர்களை உணரச் செய்வது அவரது படத்தில் இடம்பெறும் விஷுவலும் இசையும்தான். இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரமும், பின்னணி இசைக்குப் பொறுப்பேற்றுள்ள யுவனும் படம் பார்க்கும் அனுபவத்தை இனிமையாக்கியுள்ளனர். படம் நெடுகே நிறைய பாடல்கள் வருவது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே! மூன்றையுமே சிறுவனின் கோணத்தில் எழுதியுள்ளார் மதன் கார்கி. சந்தோஷ் தயாநிதியின் பாடலிசை, படத்தின் கலகலப்பைத் தக்கவைக்க உதவியுள்ளது.

இறுக்கமான தனிமையான உலகில் இருந்து பறந்து போக ஆசைப்படும் சிறுவன் அன்பு, படம் பார்க்கும் பார்வையாளர்களையும் சேர்த்துக் கொண்டு பறக்கிறான். மனதை லேசாக்கும் மிகச் சிறப்பானதொரு அனுபவத்தைத் தருகிறது படம்.