32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கஜராஜ் 100 – பீட்சா டூ ரெட்ரோ | RETRO

Dinesh R சேலம் Published: 20/04/2025 2 நிமிட வாசிப்பு Updated: 22/04/2025 சினிமா
எழுத்து அளவு:

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய கார்த்திக் சுப்பராஜின் தந்தை நடிகர் கஜராஜ், ”சிவக்குமார், நாசர் ஆகிய இருவரும் லெஜெண்ட்ஸ். நான் நடிகனாக நடித்த முதல் படத்திற்கு வாய்ப்பளித்த என் மகனும், இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் முதல் படம் ‘பீட்சா’. நூறாவது படம் ‘ரெட்ரோ’. இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தது தான் எனக்கு ஸ்பெஷல். படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அனைவர் மீதும் அக்கறையும், அரவணைப்பும் கொண்டவர் சூர்யா. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசுகையில், ”வந்தாரை வாழவைக்கும் தமிழகம். சினிமாவைக் கொண்டாடும் இந்த மண்ணில், இந்த மேடையில் நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்னபோது பயந்துவிட்டேன். அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோளைத்தான் வைத்தேன். அதை இயக்குநர் நிறைவேற்றினார். எனக்கு என் மீது நம்பிக்கையைக் கொடுத்த படம்.

மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்த ஒரு படத்தில்தான் எனக்கு பிரேக் கிடைத்தது. அப்போது அவரிடம், ‘இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா?’ எனக் கேட்டேன். ‘வெற்றியை எப்படி கையாளுகிறாயோ அதைப் பொறுத்துத்தான் வாய்ப்பு தொடரும்’ என்றார். இதற்கு நான் நேரில் பார்த்த மிகச் சிறந்த உதாரணம் சூர்யா சார். இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும் அவரிடம் இருக்கும் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ சார். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

ரெட்ரோ திரைப்படம், எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.